தீபாவளி முன்னோட்டம்...

தீபாவளி , பொங்கல் போன்ற  பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.
தீபாவளி முன்னோட்டம்...


தீபாவளி , பொங்கல் போன்ற  பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. இந்த வருட தீபாவளிக்கு ரஜினி தவிர்த்து சூர்யா,  ஆர்யா - விஷால், சசிகுமார் ஆகியோரின் படங்கள் வெளிவருவது சிறப்பு.

இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில்  "அண்ணாத்த',  "ஜெய் பீம்', "எனிமி', "எம்.ஜி.ஆர். மகன்'  என நான்கு படங்கள் வரிசையில் நிற்கின்றன. அவற்றைப் பற்றிய  சிறு முன்னோட்டம் இதோ... 

அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி - இயக்குநர் சிவா என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.  அரசியல் வருகை ரத்துக்குப் பின்னும் பரபரத்து கிடக்கிறார் ரஜினியின் ரசிகர்கள். "பேட்ட'  படத்தில் முழுக்க முழுக்க  நேரடி படப்பிடிப்பு தளங்களில் நடித்து முடித்த ரஜினி, கரோனா சூழலால் இந்த படத்தில் முழுக்கவே செட்டுக்குள் மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஹைதராபாத்தில் 75 சதவீத படத்தின் படப்பிடிப்பு  நடந்து முடிந்தாலும், கடைசி கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் எடுக்க நினைத்தனர். அங்கே கரோனா பயம் அதிகம் இருந்ததால், அடுத்து  லக்னோ சென்றது  "அண்ணாத்த' படக்குழு. லக்னோ ஷூட்டில் ரஜினி அல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களின் மான்டேஜ் ஷூட் தவிர, சில காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டுள்ளது. டி.இமானின் இசையில் வெளிவந்துள்ள பாடல்களுக்கு பரவலான வரவேற்புகள் எழுந்துள்ளன. "விஸ்வாசம்' படத்தில் "கண்ணான கண்ணே...' என அப்பா மகள் உணர்வூப்பூர்வ  மெலடி கொடுத்தது போல, இதில் அண்ணன் - தங்கை பாசம் மிளர வைக்கும் ஒரு அழகான பாடலும் இருக்கிறது.  

மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாகப் படப்பிடிப்பு நடத்துவது ஆச்சர்யம் என்று வியந்திருக்கிறார் ரஜினி. ஒரு பாரம்பரியக் குடும்பத்துப் பெண், காதலனோடு ஓடிப்போவதால் ஏற்படும் சிக்கல்தான் "அண்ணாத்த' படத்தின் மையக்கதை. ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  "முள்ளும் மலரும்' படத்துக்குப் பின் அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் கதையில் நடித்திருக்கிறார் ரஜினி. "அண்ணாமலை', "முத்து', "படையப்பா' வரிசையில் "அண்ணாத்த' படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

ஜெய் பீம்

க்ரைம் த்ரில்லர் பட பாணியில் உருவாகியுள்ள "ஜெய் பீம்' படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.  பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. ராஜகண்ணுவை போலீசார் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்ய, அவர் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். செங்கேணி, இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா என்பதே "ஜெய் பீம்' கதை.   ஆதரவற்றவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் போல வெளிவரும் ஒரு மனிதனைப் பற்றிய ஒரு துடிப்பான கதை.  1990-களில் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவல் என்கிறார்கள். ஒளிப்பதிவு எஸ். ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன். இப்படம் வரும் தீபாவளிக்கு முன்பாக நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடித்த "கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. 

எனிமி

"அரிமா நம்பி', "இருமுகன்', "நோட்டா' ஆகிய மூன்று படங்களில் வெவ்வேறு விதமான திரையாடலைக் கையாண்ட இயக்குநர், ஆனந்த் சங்கர். தற்போது, விஷால் - ஆர்யாவை வைத்து "எனிமி' படத்தை இயக்கியிருக்கிறார். "அவன் இவன்' படத்திற்குப் பிறகு பத்து வருடங்கள் கழித்து, விஷாலும்,  ஆர்யாவும் இணைந்திருக்கின்றனர். இயக்குநர் பேசும் போது.. "இருமுகன்' முடித்தவுடன் இந்தக் கதையைப் படமாக்கலாம் என்று நினைத்தேன்.  அதற்கான வேலைகளில் இருந்த போது, ஷான் கருப்பசாமியின் "வெட்டாட்டம்' புத்தகத்தைப் படித்தேன். அது என்னை உலுக்கியது.  உடனே, இதை செய்திடுவோம் என "நோட்டா'  படத்தை இயக்கினேன். 

ஆனாலும், எனக்குள் இந்தக் கதை இருந்துக் கொண்டே இருந்தது. கமர்ஷியல் படங்கள் இதற்கு  முன் செய்திருந்தாலும், அதில் ஒரு கேரக்டர் டிராமாவும் எமோஷனும் இருக்க வேண்டும் என நினைத்தேன்.  உடனே படம் ஆரம்பிக்காமல் ப்ரீ புரொடக்ஷனுக்குக் கொஞ்ச டைம் எடுத்துக் கொண்டு, எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஷான் கருப்பசாமியுடன் சேர்ந்து  வேலை செய்தேன்.  சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று ஒரு இடம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தமிழர்கள்தான் வாழ்கிறார்கள். அங்கே ஒரு கூட்டம் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிலர் வசதியாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய  கதைதான் இது. அங்கே சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார்  விஷால். அங்க இருக்கிற விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் என்ன தொடர்பு, எப்படி அவர்களுக்குள் பிரச்னை என ஆரம்பமாகும்  கதை என்கிறார் இயக்குநர்.

எம்ஜிஆர் மகன்

எப்போதும் கமர்ஷியல் அம்சங்களுடன் படங்களை தருபவர் பொன்ராம். தற்போது இவரின் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவருகிறது "எம்ஜிஆர் மகன்'. ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, "நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர்.

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம். ஜி. ராமசமியாக சத்யராஜ் நடிக்கிறார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), எம்ஜிஆர்-அன்பளிப்பு ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது கதையின் சுவாரஸ்ய பகுதி என்கிறார் இயக்குநர்.  டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com