1 கோடி பனை விதைகள்!

தமிழர்களின் தேசிய மரம் என கொண்டாடப்படும் பனைமரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 கோடி பனை விதைகள்!

தமிழர்களின் தேசிய மரம் என கொண்டாடப்படும் பனைமரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களுமே மிகவும் பயனுள்ளது என்பதால் பனை மரங்களை அதிகளவு வளர்க்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார் மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும்,  தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவருமான எஸ்.ஜே. கென்னடி. பனை விதைகள் சேகரிப்பு, விதைப்பு குறித்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார் :
 
""பனை மரத்துக்கும் தமிழர்களுக்குமான தொடர் என்பது ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது. பண்டைய இலங்கியங்கள் யாவும் பனை ஓலையில் எழுதப்பட்டவைதான். காகிதங்கள் கண்டுபிடிக்கும் முன்பு வரை பனை ஓலைகளில் எழுதப்பட்ட இலங்கியங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நகர்த்தப்பட்டன.

பனைமரத்தில் ஆண் பனை,  பெண் பனை, கூந்தப் பனை, தாளிப் பனை, குழுதிப் பனை, சாற்றுப் பனை, ஈச்சம் பனை,  ஈழப் பனை, சீமைப் பனை, ஆதம் பனை, திப்பிலிப் பனை, இடுக்குப் பனை என 34 வகைகள் உள்ளன. தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏறத்தாழ 8 கோடி பனைமரங்கள் இருந்தன.

முறையான பராமரிப்பு இல்லாததாலும், செங்கல் சூளையில் பயன்படுத்தவும், விறகு, வீட்டு உபயோகத்திற்காகவும்  பனைமரங்களை வெட்டி கடத்துகின்றனர்.  இது தவிர பனைமரங்களை பராமரிக்க தேவையான ஊழியர்கள் கிடைக்காததாலும் பட்டா நிலங்களில் உள்ள மரங்கள்  கூட பட்டுபோக தொடங்கிவிட்டன. 3 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இவ்வாறு காய்ந்து அழிந்துவிட்டன.

ஒரு காலத்தில் மக்கள் தொகையைவிட பனைமரங்கள் அதிகமாக இருந்தன. தற்போது பனை மரங்களை வெட்ட அரசு தடை விதித்துள்ளது .  பனையை பாதுகாக்க வேண்டியும் பனை தொழில் மேம்பட பலதிட்டங்களை கொண்டு வர வேண்டும்.

மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக கடந்த 17 ஆண்டுகளாக ஆங்காங்கே சிறிய அளவில் ஆயிரக்கணக்கில் பனை மர விதைகளை விதைத்து வந்தோம். அது எங்களுக்கு  திருப்தி அளிக்காத காரணத்தினால் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வராது என்பதை அறிந்து ஒரு இலக்கோடு செயல்பட வேண்டும். என்பதற்காக ஒரு கோடி பனைவிதை விதைக்கும் பணியை தொடங்கினோம்.

அந்த பணியில் மதர் மகளிர் சுயஉதவிக் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு, கல்லூரி மாணவ- மாணவிகள்,  தன்னார்வலர்களை கொண்டு மிகத் தீவிரமாக தினமும் செயல்படும் வகையில் காலையில் பனை விதைகளை சேகரிப்பதும் மாலையில் பனைவிதைகளை விதைப்பதும் என திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தெரழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின்  கூடுதல் தொழில்துறை ஆலோசகர் ஜி. சண்முகநாதன் தலைமையில் ஒரு கோடி பனைமர விதைகள் நடும் பணியை  தொடங்கினோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள உடன்குடி, ஓட்டபிடாரம், சாத்தான்குளம் ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட 33 ஊராட்சிகளில் அதிக கவனம் செலுத்தி அதிகமான பனைவிதைகளை விதைத்து வருகிறோம்.  மாவட்டம் முழுவதும் இதுவரை 68, 14,483 பனை மர விதைகளை விதைத்துள்ளோம். இன்னும் சில மாதங்களில் ஒரு கோடி பனை விதைகளை விதைத்துவிடுவோம்.

நீர்பிடிப்பு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும்,  குட்டம் உள்ள பகுதிகளிலும், கடற்கரை பகுதிகளில் புயல், சூறாவளி, பூகம்பம், சுனாமி, கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க கடற்கரை பகுதிகளிலும் அரசு புறம் போக்கு இடத்திலும் விரும்பி கேட்டு கொண்ட தனியார் இடங்களிலும் சாலையோரங்களிலும் பனை மரவிதைகளை விதைத்து வருகிறோம்.

இன்றைய இளைய தலைமுறையினர் பனையின் பயன்கள் மற்றும் பனை பொருள்களில் உள்ள சத்துக்கள் குறித்தும்,  மருத்துவகுணம் பற்றியும் அறியாமல் உள்ளனர். அவர்களிடம் பனை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

தொடர்ந்து நாங்கள் பனைமர விதைகளை விதைத்து கொண்டே இருப்போம். தற்போது எங்கள் சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் எங்கள் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக தோட்டக்கலை துறை மூலம் பனைமரங்களை  நடுவதற்கு 2 லட்சம் பனைமர கன்றுகளை உருவாக்க வேண்டிய பொறுப்பை வழங்கி உள்ளார்.

ஒரு பனை மரம் ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு,  8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை தருகிறது. ஒரு பனை மரத்தில் இருந்து 24 கிலோ பனைவெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவை கிடைக்கின்றன.

இயற்கை நமக்குத் தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனைமரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் அந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி பலன் தரக்கூடியது.  எனவே, நாம் அனைவரும் பனை மரம் வளர்க்கும் பணியில் முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள்வோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com