தொன்மை சிறப்பு மிக்க பகடைக்காய்

தமிழர்களின் தொன்மை மற்றும் பண்பாட்டுச் சிறப்புக்கு சிறந்த நிலைக்கலனாக விளங்கும் கீழடி - அகரம் - மணலூர் - கொந்தகை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தொன்மை சிறப்பு மிக்க பகடைக்காய்


தமிழர்களின் தொன்மை மற்றும் பண்பாட்டுச் சிறப்புக்கு சிறந்த நிலைக்கலனாக விளங்கும் கீழடி - அகரம் - மணலூர் - கொந்தகை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியினை  மேற்கொண்டு வருகிறது.

பகடைக்காய்: தமிழர்களின் உயரிய நாகரிகம் தொன்மைச் சிறப்புக்கு அடையாளமாக பல தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருவதைக்கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம்.

கீழடியில் அண்மையில் தந்தத்தால் செய்யப்பட்ட "பகடைக்காய்' கிடைத்துள்ளது. அது நான்கு கிராம் எடை கொண்டது. இதற்கு 6 பக்கங்கள் உண்டு. ஆறு பக்கங்களுக்கும் எண்கள் உள்ளன என்பதற்கு அடையாளம் செய்யப்பட்டுள்ளது. நடுவில் ஒரு புள்ளி, அதனைச் சுற்றி வட்ட வடிவமாக இரு வளையங்கள் கோடுகளாக வரையப்பட்டு, நுண்ணிய வேலைப்பாட்டுடன் திகழ்கிறது. கீழடி அகழாய்வில் இதற்கு முன்னரும் பகடைக்காய் கிடைத்துள்ளது. பகடை உருட்டுதல் தொன்றுதொட்டு தமிழ் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். இதனை "பகடைக்காய்' - "தாயக்கட்டை' எனவும் கூறுவர். இவைகள் அனைத்தும் பண்டைய மக்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள உதவும் அரிய சான்றாகும். 

தாயக்கட்டை என்பது உலோகத்தால் செய்யப்பட்டது வழக்கில் இன்றும் உள்ளது. செவ்வக வடிவத்தில் ஒவ்வொரு பக்கமும் எண்களைக் குறிப்பிட, குழிகள் இடப்பட்டு இருக்கும். "தாயம்' என்பது பரமபத விளையாட்டில் முக்கிய இடம் பெற்று விளங்குவதையும் நாம் அறிவோம்.  

பகடைக்காய் என்பது பொழுதுபோக்கிற்காக வணிகர்கள் உருட்டி விளையாடியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் இது போன்ற பகடைக்காய்கள் கிடைத்துள்ளன. சில சுடுமண்ணால் ஆனவை. மற்றும் - தந்தம், எலும்பினால் செய்யப்பட்டவையும் கிடைத்துள்ளன.

மாங்குடி,  சம்புவராயர் தலைநகராக விளங்கிய படைவீடு,  சேந்தமங்கலம், உறையூர், அழகன்குளம் போன்ற இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் பகடைக்காய்கள் கிடைத்துள்ளன. சங்ககால சோழர் தலைநகராக விளங்கிய உறையூரில் சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பெற்ற பானை ஓடு போன்று செவ்வகவடிவில் கிடைத்துள்ளது. நான்கு பக்கங்கள் - முதல் பக்கம் - 1 புள்ளி 2 - 3 எனத் தொடர்ந்து நான்கு பக்கங்களிலும் குறியீடுகள் உள்ளன.

அழகன்குளம் அகழாய்வில் ரோமானிய பானை ஓட்டின் விளிம்புப்பகுதியில் ஒரு பகுதியை தேய்த்து பகடையாக செய்திருக்கின்றனர். 6 பக்கங்கள். 3 பக்கங்களில் குறியீடுகள் உள்ளன. மற்ற பக்கங்களில் குறியீடு ஏதுமில்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்றாகும்.

அகழாய்வுகளில் கிடைத்த பகடைக்காய்களை ஒரு சேர ஆய்வு செய்யும் பொழுது பண்டைய மக்களின் நாகரீக மேம்பாட்டினை அறிந்து கொள்ள உதவும் சான்றாக விளங்குகிறது. கீழடி அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகள் அனைத்தும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றும் விளங்குகின்றன.

நன்றி : தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com