ரத்தத்தின் ரத்தமே... 31

உப்பு அதிகம், எண்ணெய் அதிகம், வெண்ணெய் அதிகம், நெய் அதிகம், அசைவம் அதிகம், கொழுப்பு அதிகம் - இப்படி சில உணவுப் பிரச்னைகளினால், சிலருக்கு இருதயநோய் வருவதுண்டு.
ரத்தத்தின் ரத்தமே... 31

உப்பு அதிகம், எண்ணெய் அதிகம், வெண்ணெய் அதிகம், நெய் அதிகம், அசைவம் அதிகம், கொழுப்பு அதிகம் - இப்படி சில உணவுப் பிரச்னைகளினால், சிலருக்கு இருதயநோய் வருவதுண்டு. ரத்த அழுத்தம் கூடுவது, இருதயத்துடிப்பு அதிகமாவது, ரத்தம் உறைவது, ரத்தக் குழாய் அடைபடுவது, மாரடைப்பு வருவது - போன்ற  உடலில் ஏற்படும் சில பிரச்னைகளினாலும், சிலருக்கு இருதய நோய் வருவதுண்டு. 

உடலில் ஏற்படும் பிரச்னைகளினால் மட்டுமே இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றதென்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மையல்ல. மனதில் ஏற்படும் சில பிரச்னைகளினாலும், இருதய சம்பந்தப்பட்ட நோய்களும், பாதிப்புகளும் கண்டிப்பாக வரத்தான் செய்கிறது.

கோபம், ஆத்திரம், பயம், பொறாமை, வக்கிரம், வஞ்சம், கவலை, விரோதம், பகை, இன்பம், துன்பம், அவமானம்..போன்ற கண்ணுக்குத் தெரியாத பல மனப்பிரச்னைகளும்,  நமது இருதயத்தையும், ரத்தக்குழாய்களையும், ரத்த ஓட்டத்தையும், நமக்குத் தெரியாமலேயே மெதுமெதுவாக பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம் 

(குறள்: 305)

தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டுமானால் சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம் அவனை அழித்துவிடும் என சினம் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் வள்ளுவர். மனப்பிரச்னைகள் பலவற்றில், மனிதனை அதிகம் பாதிக்கக்கூடிய முதல் பிரச்னையாக, கோபம்தான் இருக்கின்றது. 

அதிக கோபம், அடிக்கடி கோபம் இவையிரண்டும் இருதயநோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாய் இருக்கின்றது. "ஹைபர்டென்ஷன்' அதாவது அதிக ரத்த அழுத்தத்தை, "சைலன்ட் கில்லர்' என்று சொல்வதுண்டு. அதேமாதிரி, கோபம் கூட கிட்டத்தட்ட ஒரு சைலன்ட் கில்லர் தான். 

மனிதர்களைப் போல, மிருகங்களும் அன்பு, ஆத்திரம், கோபம், மகிழ்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்படுகின்றது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகின்றது. கோபத்துக்கு அதிக சொந்தக்கார விலங்கு எது என்று பார்த்தால், அநேகமாக அது புலிதான். ரோசக்கார மிருகம். உருவாக்குதல், அழித்தல், வலிமை, சக்தி, கோபம், மூர்க்கம் முதலிய அனைத்தும் சேர்ந்த மொத்த உருவம்தான் புலி.

அதிக ரத்த அழுத்தத்துக்கும், மனநிலை மற்றும் மனநோய் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. "ஹைபர்டென்ஷன்'  அதாவது அதிக ரத்த அழுத்தம் என்றாலே என்னவென்று தெரியாமல், மிகச் சுதந்திரமாக வாழ்ந்த அந்தக் கால ஆப்ரிக்க மக்களுக்கு, இப்போது அதிக ரத்த அழுத்த நோய் ஒரு மிகப் பெரிய பொது சுகாதார பிரச்னையாகிவிட்டது. காரணம் மனநோய்.

உடல்நோயும், மனநோயும் இன்று உலகையே மெதுமெதுவாக அழித்துக் கொண்டு வருகின்றது. அதிகமாக கத்துவது, உரக்கப் பேசுவது, அதிக கோபப்படுவது போன்ற செயல்கள் 1. இருதயத்துடிப்பை கூட்டும் (இதைத்தான் நெஞ்சு படபடவென்று வேகமாக அடிக்குது என்று சொல்வார்கள்) 2. ரத்தக் குழாய்களை கடினமாக்கிவிடும் 3. ரத்த அழுத்தத்தை ஏற்றிவிடும். இந்த மூன்று செயல்களும் ரத்த ஓட்டத்தைத் தொந்தரவு பண்ணும். இந்த மூன்று செயல்களும் பண்ணும் தொந்தரவினால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அசைவம், அதிக எண்ணெய், அதிக கொழுப்புப் பொருட்கள் முதலியன சாப்பிட்டால் மட்டும்தான் ரத்தம் உறையும் என்று நினைக்காதீர்கள். மன நோயும் ரத்த உறைதலை உண்டுபண்ணும்.

கோபப்படுங்கள், கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் சூரியன் மறைவதற்கு முன் கோபத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஒருவரை கோபப்பட்டு அவரை நாம் வென்றுவிட்டோம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல. அதைத் தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை தான் மிகப் பெரியது.

ஒரு சம்பவம், ஒரு கலவரம், அது இயற்கை பேரிடர்களாக இருக்கலாம். அல்லது ஒரு பெரிய விபத்தாக இருக்கலாம். ஒரு வன்முறை செயலாக இருக்கலாம். ஒரு சண்டையாக இருக்கலாம். ஒரு பாலியல் வன்முறையாக இருக்கலாம். ஒரு கொலை மிரட்டலாக இருக்கலாம். ஒரு தோல்வியாக இருக்கலாம். ஒரு பயங்கர காயமாக இருக்கலாம். மேற்கூறிய செயல்கள் எல்லாமே, மன அழுத்தத்தை அதிகமாக்கி, ரத்த அழுத்தத்தை மிகமிக அதிகமாக்கி விட்டுவிடும். நீங்கள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுடைய இருதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் சட்டென்று கூடிவிடும். இதனால் இருதயத்துக்கு ரத்த சப்ளை குறைந்துவிடும். இதனால் உங்கள் உடம்பிலிருந்து "கார்டிஸால்' என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகமாக வெளியாகும். இது எல்லாமே தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருந்தால், வெகு சீக்கிரம் அது இருதய நோயில் கொண்டுபோய் விட்டுவிடும்.

விசாரம் முற்றினால் வியாதி. அதாவது கவலை அதிகமானாலும் அது வியாதியில் தான் முடியும். கோபத்தைப் போல், கவலையும் மன அழுத்தத்தை அதிகமாக்கி, கடைசியில் இருதய நோயில் கொண்டு போய்விட்டுவிடும். ஒருவருக்கு கோபம் வந்தால், முகத்திலுள்ள சிறுசிறு தசைகள் தனித்தனியாகத் துடிக்கும். முகம் மெதுமெதுவாக சிவக்கும். முகத்தின் நிறம் மாறும். கை- கால் விரல்கள் நடுங்கும். முகத்தில் ரத்த சப்ளை அதிகமாகும். கண்கள் சிவக்கும். உதடுகள் துடிக்கும். 

மேற்கூறிய செயல்கள் அனைத்தையும் மிகத் தத்ரூபமாக நடித்துக் காட்டுவதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஈடு இணை யாருமில்லை. அதிக கோபம் வந்தால், ஒருவன் எப்படியெல்லாம் மாறுவான் என்பதை அப்படியே நடித்துக் காட்டுவார் நடிகர் திலகம். கோபம் வந்தால், முகத்தில் ரத்த சப்ளை அதிகமாகும் அல்லவா‚ முகத்தில் ரத்த சப்ளை அதிகமானால், இருதயத்திலிருந்து வெளிவரும் மிகப்பெரிய ரத்தக்குழாயான "அயோர்ட்டா' என்கிற பெருந்தமனியில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் நரம்பணுவாகிய ரத்த அழுத்த உணரி உடனே இருதயத்துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும், ரத்த அழுத்தத்தையும் தணித்து, எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும். இந்த ரத்த அழுத்த உணரி அதாவது "பேரோரிஸப்டார்' என்கிற இந்த நரம்பணு தொகுப்பின் வேலையே உடலில் ரத்த அழுத்தம் ஏறினாலும் மூளைக்குத் தெரிவிக்க வேண்டும். ரத்த அழுத்தம் இறங்கினாலும் மூளைக்குத் தெரிவிக்க வேண்டும்.

பேரோரிஸப்டார் என்று சொல்லக் கூடிய இந்த ஸ்பெஷல் நரம்பணு, நமக்கு ரத்த அழுத்தம் ஏறினால் மட்டுமே வேலை பார்க்கும் என்றில்லை. நாம் சாதாரணமாக, சும்மா இருக்கும்போதும் இந்த ஸ்பெஷல் நரம்பணு வேலை பார்த்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது, இந்த மனிதருக்கு ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது, சரியாக இல்லை, என்று ஒவ்வொரு விநாடியும் மூளையின் ஒரு அங்கமான முகுளத்துக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்கும்.

கோபம், விரோதம் போன்ற உணர்ச்சி சம்பந்தப்பட்ட செயல்கள் உங்களை உதைத்துவிடு அல்லது ஓடிவிடு என்ற நிலையை உண்டாக்கும். ஒருவனிடம் ஆத்திரத்தில் நாம் சண்டை போடும்போது, ஒன்று அவனை உதைக்கத் தோன்றும். அல்லது அவனிடமிருந்து தப்பித்து ஓடிவிடத் தோன்றும். இம்மாதிரி நேரத்தில், நமது உடலிலுள்ள உணர்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட அட்ரினலின், நார்அட்ரினலின் மற்றும் கார்டிஸால் ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியாகி, இருதயத் துடிப்பை அதிகப்படுத்தும். சுவாசித்தலை அதிகப்படுத்தும். ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும். உங்களது இருதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் மறுபடியும் சாதாரண நிலைக்கு வருவது எப்போது என்றால், உங்கள் கோபம் குறைந்தபிறகு தான். உங்கள் ஆத்திரம் அகன்றபிறகுதான்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் மனக்குழப்பம்தான் என்று முடிவாகிவிட்டால், உங்களது ரத்த அழுத்தம் அடிக்கடி கூடிக்கூடி, ஆபத்தான பாதையில் உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடும். ஆராய்ச்சிகள் தெரிவிப்பது என்னவென்றால், மன அழுத்தமும், மனப் பதட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனிதனை நிரந்தர, அதிக ரத்த அழுத்த நோயாளியாக ஆக்கிவிடும். எனக்கு "லோ பிரஷர்' என்று சொல்வார்களே. அதையும் கூட இந்த மன அழுத்தம் ஏற்படுத்திவிடும். மன அழுத்தத்திலேயே எப்போதும் வாழ்பவர்களுக்கு மாரடைப்பு  ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

"கோபத்தை அன்பினால் வெல்'என்று புத்தர் சொல்லியிருக்கிறார். கோபம், கவலை, வெறுப்பு, ஆத்திரம், அவமானம், மனக்கசப்பு, மனச்சங்கடம் போன்ற உணர்ச்சியான செயல்களிலிருந்து நீங்கள் விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். அதிக கோபத்தில் நிதானம் இழந்து, கொட்டத்தகாத வார்த்தைகளை நாம் கொட்டிவிடுவோம். அதுவே நமக்கு எதிரியாகிவிடும். 

எனவே கோபத்தின் போது நிதானம் தேவை. கோபம் வந்தால் மனதிலேயே போட்டுப் புதைத்து வைக்காதீர்கள். கொட்டித் தீர்த்துவிடுங்கள். எங்கே? எதிரியிடம் அல்ல. தன்னந்தனியான ஒரு சூழ்நிலையில், நீங்கள் கத்தி, கதறி, திட்டி, அழுது, உங்கள் மனதில் தேங்கியிருக்கும் எல்லாவற்றையும் தனியாக இருந்து சொல்லித் தீர்த்துவிடுங்கள். என் துக்கத்தைத் தொலைக்க, என் கோபத்தைக் குறைக்க, நான் மெரினா கடற்கரை ஓரத்தில், அலைகள் கரையைத் தொடுமிடத்தில், தனியாக உட்கார்ந்துக் கொண்டு பலமுறை அழுதிருக்கிறேன். கதறியிருக்கிறேன். பின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வந்து விடுவேன். என் மனதிலுள்ள பாரமும் குறைந்துவிடும். அடுத்த வேலைக்கு என் மனமும், உடலும் தயாராகிவிடும்.

மன அழுத்தத்தைக் குறைக்க, மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உங்கள் கவனத்தை திசை தருப்பும் காரியங்களை செய்யுங்கள். தனியாக எப்போதும் இருக்காதீர்கள். முடிந்த, தெரிந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள். சுவாசப் பயிற்சி செய்யுங்கள். உடலை, தசைகளை உருவிவிடச் செய்து நன்கு ஓய்வெடுங்கள். பிடித்த இசை, பிடித்த பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 2 நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு நல்ல விஷயங்களை யோசியுங்கள். கோபம் உண்டாகி, அடுத்த பிரச்னை ஏற்படும் என்று தெரிந்தால், அந்த இடத்தை விட்டு நகருங்கள். இது கிடைக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள். எதுவுமே நிரந்தரமல்ல. ஒரு ஆணின் கோபம், ஒரு பெண்ணின் கண்ணீரில் கரைந்துபோகும். அதுபோல ஒரு பெண்ணின் கோபம் , ஒரு ஆணின் அன்பில் அணைந்து போகும்.

தொடரும்...   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com