ஒதுக்கப்பட்டவர்களுக்கு முறையான கல்வி...!

வெளிநாட்டுப் பறவைகள் தமிழகத்திற்கு ஆண்டு தோறும் சில குறிப்பிட்ட மாதங்களில் "வலசை வலம்' வந்து சொந்த நாடு திரும்புவதுண்டு.
ஒதுக்கப்பட்டவர்களுக்கு முறையான கல்வி...!

வெளிநாட்டுப் பறவைகள் தமிழகத்திற்கு ஆண்டு தோறும் சில குறிப்பிட்ட மாதங்களில் "வலசை வலம்' வந்து சொந்த நாடு திரும்புவதுண்டு. அதுபோல "நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது' என்று அலங்கார காளை மாட்டோடு வீதிகளில் குறி சொல்கிற "பூம்பூம் மாட்டுக்காரர்கள்... பாசி மணி, ஊசி ஊக்கு விற்கும் நரிக்குறவர்கள் தமிழ் நாட்டு ஊர்களை சுற்றிவருவதுண்டு. இந்த நாடோடிகளைப் பற்றி, இவர்களின் வாழ்வாதாரம் பற்றி யாரும் சிந்தித்தது கிடையாது. வேடிக்கை மனிதர்களாக அல்லது பொழுது போக்குப் பொருளாக அல்லது கேலிக்குரியவர்களாக அமைந்துவிட்ட இந்த இரண்டு சமுதாயத்தின் சிறார்கள் வாழ்க்கையில் முன்னேற இலவச உணவு, கல்விக்காக பள்ளி ஒன்றை நாகப்பட்டினத்திற்கு அடுத்துள்ள சிக்கல் கிராமத்தில் பதினைந்து ஆண்டுகளாக "வானவில்' அறக்கட்டளை நடத்திவருகிறது.

"பள்ளியின் துவக்கம் அத்தனை எளிதாக அமையவில்லை.. சிக்கலாக இருந்தது ..' என்று தொடங்கினார் வானவில் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினரான நடராஜ். ஓவியராகவும், தேர்ந்த சிற்பியாகவும் இருக்கிறார் நடராஜ்.

""சுனாமி பேரிடர் நாகப்பட்டினத்தைத் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத்தான் நானும் துணைவி ரேவதியும் சென்னையிலிருந்து கிளம்பினோம். நாகையில் பிணக் குவியல்களைக் கண்டு அதிர்ந்து போனோம். அதைவிட அதிர்ச்சியடையச் செய்தது, நாகை பேருந்து நிலையத்தில் இடுப்பில் எலும்புகள் தெரிய மெலிந்திருந்த சிறு குழந்தை பழைய துணியாய் இடுப்பில் பற்றிக் கிடக்க, குழந்தையை சுமந்தவாறு ஏழு வயதுச் சிறுமி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சி. அந்தச் சிறுமி நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இது போன்ற சிறார்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அவர்களின் விடியல் அவர்களுக்குக் கல்வி புகட்டுவதில்தான் உள்ளது என்று முடிவுக்கு வந்தோம்.

பூம் பூம் மாட்டுக்காரர்கள்,நாகை நரிக்குறவர்கள், திருவாரூர் , மயிலாடுதுறை பகுதிகளில் கொத்து கொத்தாக வாழ்கின்றனர். இந்த இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசி சில சிறார்களை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டோம். காலையில் சிறார்களைப் பள்ளியில் விட்டால் சில மணி நேரத்திற்குள் அவர்கள் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்கள். சக மாணவர்கள் அவர்களை ஒதுக்கியதும் ஒரு காரணம். பிச்சை எடுக்க ஊர் சுற்றித் திரிந்தவர்கள் நான்கு சுவர்கள் கொண்ட வகுப்பறைக்குள் சில மணி நேரம் அமர முடியாமல் போனது இன்னொரு காரணம். அதனால் நாங்களே இலவசப் பள்ளி துவங்க முடிவு செய்தோம்.கல்வியுடன் சத்தான உணவு வழங்கி, பிச்சை எடுப்பதிலிருந்து தடுப்பது, இந்தச் சமூகங்களில் நடக்கும் குழந்தைத் திருமணத்தைத் தவிர்க்கச் செய்வது என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது.

2005-இல் தொடங்கப்பட்டப் பள்ளியில் சிறார்களைச் சேர்ப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பெற்றவர்களுக்கு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பம் இல்லாதது ஒருபுறம் இருக்க, பிச்சை எடுத்தால் நாலு காசு  கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு திரைப்படங்கள் பார்க்கலாம்... புகை பிடிக்கலாம்.. என்பதால் சிறார்களுக்கும் கல்வி கற்க ஆர்வம் இல்லாமல் இருந்தது. அதனால் எடுத்த எடுப்பில் பாடங்களை போதிக்காமல், பள்ளி என்றால் என்ன .. பள்ளி எப்படி இருக்கும்... என்பதை ஆறுமாதம் குழந்தைகளுக்கு விளக்கினோம். பிச்சை எடுத்து திரைப்படம் பார்த்தவர்களை திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று திரைப்படங்களைக் காட்டினோம். பிச்சை எடுக்கும் சிறார்கள் படிக்கவில்லை என்றாலும் கிடைக்கும் சில்லறைகளை எண்ணுவதில் படு கில்லாடிகளாக இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு "எண் கணிதம்' சொல்லிக் கொடுத்தோம் . பூம்பூம் மாட்டுக்காரர்களின் சிறார்களுக்கு இசை ஞானம் உண்டு. ஷெனாய் போன்ற வாத்தியக் கருவி மேளம் அடிக்க அவர்களுக்கு வரும். இசையுடன், ஓவியம், நடனம் கற்பித்தோம். பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றோம். பார்த்த இடங்களைப் படமாக வரையச் செய்தோம்.

வரைந்து முடித்ததும் அந்த இடங்கள் பற்றி நாலு வரி எழுதச் சொன்னோம்.. இப்படி அவர்கள் போக்கில் விட்டு, அந்தச் சிறார்களுக்கு அவர்களது உலகத்தைத் தாண்டி இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை உணர்த்தினோம்.

முதலில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிறார்களுடன் தொடங்கிய பள்ளியில் இன்று 180 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். மாணவிகளுக்கு என்று தனியாக தங்கும் விடுதி உள்ளது. அதுபோல விடுதி மாணவர்களுக்கும் தனியாக உண்டு. ஐந்தாம் வகுப்பு வரையில் எங்கள் பள்ளியில் படிக்கலாம். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அருகில் இருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விடுவோம். பள்ளி முடிந்ததும் மாணவ மாணவிகள் விடுதிக்கு வந்துவிடுவார்கள். பிளஸ் டூ முடிந்ததும் அறக்கட்டளை செலவில் கல்லூரிகளில் சேர்ப்போம். கல்லூரியில் படித்து வெளிவந்தவர்களில் சிலர் ஆசிரியர், பொறியாளர், ஊடகர் போன்ற கெளரவமான வேலைகளுக்குச் சென்றுள்ளார்கள்.

மாணவர்களில் பலர் ஓவியக் கல்லூரியிலும், சென்னை கல்லூரிகளிலும் படிக்கிறார்கள். கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறோம். பெற்றோர் இல்லாத , தாய் அல்லது தகப்பன் இல்லாத சிறார்கள், வீட்டில் உணவுக்கு வழியில்லாத சிறார்கள் எங்கள் விடுதியில் சென்ற ஆண்டு கரோனா காலத்திலிருந்து தங்கியுள்ளார்கள்.

இந்த ஆண்டு கரோனா காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட, நாகையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் கூடம் ஒன்றை நாகை அரசு மருத்துவமனையில் வானவில் அறக்கட்டளை நிறுவியது. சுமார் 10000 முகக் கவசங்களை விநியோகித்தது. வானவில் அறக்கட்டளை சார்பில் 35 ஆக்ஸி மீட்டர் வழங்கியதோடு 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். சென்ற ஆண்டு கரோனாவின் போது சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு மளிகைச் சாமான்களை வழங்கினோம் .

ரேவதி சின்னத்திரை ஊடகராகப் பணிபுரிந்தவர். பத்திரிகையாளராக இருந்து திரைப்படத் துறைக்குச் சென்றவர் . இயக்குநர் கெளதம் வாசுதேவ்மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்போது என்னுடன் இந்த சமூகப் பணியில் முழுமையாக ஈடுபட்டுவருகிறார் என்கிறார் நடராஜ்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com