விநாடிகளில் உச்சத்தை அடையலாம்!

உலகில் எந்த முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தாலும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிகழ்வுகளின் அரிய, அற்புத சந்தர்ப்பங்களை, கணங்களைக் கேமிராவில் பதிவு செய்ய 
விநாடிகளில் உச்சத்தை அடையலாம்!


உலகில் எந்த முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தாலும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிகழ்வுகளின் அரிய, அற்புத சந்தர்ப்பங்களை, கணங்களைக் கேமிராவில் பதிவு செய்ய புகைப்படக் கலைஞர் சேஷாத்ரி சுகுமார் ஆஜராகிவிடுவார். 2021 ஒலிம்பிக்ஸை படம் பிடிக்க இந்தியாவிலிருந்து சென்ற இரண்டு நபர்களில் சுகுமாரும் ஒருவர்.

வங்கி ஊழியராகப் பணிபுரியும் போதே கேமிராவைத் தீவிரமாகக் காதலித்துத் தனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டவர் சுகுமார். 66 வயதாகும் சுகுமார் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பல ஆயிரம் புகைப்படங்களைப் பிடித்து சென்னைத் திரும்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை படம் பிடித்திருக்கும் சுகுமார், மோடி, ஜெயலலிதா, ஸ்டாலின் போன்ற விஐபிகளையும் படம் பிடித்திருக்கிறார்.

தனது 35 ஆண்டுகள் பயணம் பற்றி நம்மிடம் விவரித்தார்:

""நான் தஞ்சாவூரில் பிறந்த கையுடன் பெற்றோர்கள் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்பா அச்சகம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிந்தார். 1976 -இல் பி.காம் படித்து முடித்தவுடன் எல்லாரையும் போல வங்கி வேலைக்கு மனு செய்தேன். அப்போதெல்லாம் வேலைக்கு மனு செய்தாலும், நேர்முகத் தேர்வு நடக்க நாள் பிடிக்கும். 1976-இல் மனு செய்தாலும் வேலை கிடைத்தது என்னவோ 1978-இல் தான். இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில் சும்மா இருக்க வேண்டாம் என்று தட்டச்சு, வரவு செலவு கணக்கியல், படம் பிடித்தல் கற்றேன். இதில் படம் பிடித்தலில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது.

தொடக்கத்தில் நான் சரியான கேமிரா பைத்தியமாக இருந்தாலும், தரமான கேமிரா என்னிடம் இல்லை. நல்ல கேமிராவின் விலையும் அதிகமாக இருந்தது. புதிய கேமிரா வாங்க என்னிடம் பணம் இல்லை. புகைப்படக் கலைஞர் ஒருவரிடம் பழைய கேமிராவை விலைக்குக் கேட்டேன். அவரோ கேமிராவுக்கு 1200 ரூபாய் ஹகேட்டார். நான் 600 ரூபாய் தருகிறேன் என்றேன். சட்டென்று ஒத்துக் கொண்டு கேமிராவை என் கையில் திணித்துவிட்டார்.

வங்கியில் காசாளராக மகாபலிபுரத்துக்கு அருகில் பணியில் சேர்ந்தேன். பத்து மாதம் கழிந்ததும் சென்னைக்கு இடமாற்றம் கிடைத்தது. எனது படம் பிடிக்கும் திறமையை அறிந்த சென்னை வங்கி நிர்வாகம் வங்கியின் நிகழ்ச்சிகளுக்குப் படம் பிடிக்கும் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தது. வங்கிப் பணியுடன், படம் பிடிக்கும் பொறுப்பையும் 21 ஆண்டுகள் செய்து வந்தேன். 1984 -ஆம் ஆண்டிலிருந்து விளையாட்டுகள் தொடர்பான படங்களைப் பிடிக்க ஆரம்பித்தேன். 2001-இல் வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று.. பல்வேறு விளையாட்டுகளைக் கேமிராவால் படம் பிடிக்கும் முழு நேர படப் பிடிப்பாளராக மாறினேன். பல்வகைத் தருணங்களைக் கிளிக் செய்ய எனது கண்களுக்கும், விரல்களுக்கும் வேலை கிடைத்துக் கொண்டே இருந்தது.

விளையாட்டு போட்டிகளில் வீரர்களின் அசைவுகள், உடல் மொழி, வெற்றி - தோல்வியின் போது ஏற்படும் முகப் பாவங்களைப் படம் பிடிக்க வேண்டும். முக்கியத் தருணங்கள் நமக்காகக் காத்திருக்காது. கண் இமைக்கு முன் நிகழ்ந்து கடந்து போய்விடும். இமை மூடாமல் நாம் தான் காத்திருந்து கவனமாகப் படம் பிடிக்க வேண்டும். 2021 ஒலிம்பிக்ஸில் வில் வீராங்கனை தீபிகா குமாரி அம்பு எய்த கணத்தை மிகவும் சிரமமப்பட்டுப் படம் பிடித்தேன்.

கொஞ்சம் தாமதம் ஆனாலும் அந்தக் காட்சியைப் பதிவு செய்ய முடியாமல் போய்விடும். பெண் மல்யுத்தத்தில் மூன்று முறை ஒலிம்பிக்ஸ் சாம்பியன், நான்கு முறை ஆசிய சாம்பியன், 13 முறை தொடர்ந்து உலக சாம்பியனான ஜப்பானைச் சேர்ந்த சயோரி யோஷிதா, 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் இறுதிச் சுற்றில் களம் இறங்கினார். அவரை அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலன் மெளலிஸ் அதிரடியாகத் தோற்கடிக்க ... தொடர்ந்து 13 ஆண்டுகள் உலக சாம்பியனான இருந்த தன்னை புதுமுகம் தோற்கடித்ததினால் அதிர்ச்சி அடைந்த சயோரி முகத்தைக் கடைசிவரை தொங்கப் போட்டுக் கொண்டார். வெள்ளிப் பதக்கம் வாங்கும் போது கூட முகத்தை நிமிர்த்தவில்லை. சயோரியின் அதிர்ச்சியையும், ஹெலனிடமிருந்து வெடித்த வெற்றித் துள்ளலையும் ஒரு சேர ஒரே படத்தில் பதிவு செய்தேன். அந்தப் படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. அமெரிக்கப் படப் பிடிப்பாளர்கள் சங்கத்தின்' தங்கப் பதக்கத்தையும் எனக்குப் பெற்றுத் தந்தது.

எனக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் முக்கியமானது சச்சின் டெண்டுல்கர் 2014-இல் வெளியிட்ட தனது சுய சரிதையின் அட்டைப் படமாக நான் அவரை எடுத்த படத்தைத் தேர்ந்தெடுத்ததுதான். அந்தப் படத்தை பிடித்தது நான்தான் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு லண்டனிலிருந்து ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனம் "நீங்கள் சச்சினைப் படம் பிடித்திருப்பது அருமையாக இருக்கிறது. சன்மானம் தந்து அந்தப் படத்தைப் பயன்படுத்திக் கொள்ள உங்கள் அனுமதி வேண்டும்' என்று கேட்டது. அவர்கள் சொன்ன தொகை கேட்டு எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஆனால் அந்த அங்கீகாரம் சச்சின் தனது சுயசரிதையில் நான் பிடித்த படத்தை வெளியிட்டதினால் தானே கிடைத்தது. அதை நினைத்து எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

அது போல ஓட்டப் புயல் உசைன் போல்ட்டை பல மணி நேரம் காத்திருந்து அவரது ஓட்டத் திறமையை முகபாவத்துடன் படங்களைப் பிடித்தேன். அவற்றை உசேன் போல்ட்டிற்கு காட்ட... மகிழ்ந்து தனது கையொப்பத்தை படத்தில் போட்டுக் கொடுத்தார். போல்ட்டின் கையொப்பத்துடன் உள்ள படத்தை பிரதமர் மோடியைச் சந்தித்த போது அவரிடம் பரிசளித்தேன். பல படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளேன்.

2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய, வெளிநாட்டு வீரர் வீராங்கனைகளைப் படம் பிடித்தேன். ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் தோரணையைத் தொடக்கத்தில் கண்டதுமே "இவர் சாதிப்பார்' என்று எனக்குத் தோன்றியது. சுதாரித்துக் கொண்டு நீரஜ் ஈட்டி எறிவதைப் பல கோணங்களில் படம் பிடித்து அடுத்த நாள் அவரிடம் காண்பித்தேன். ஆர்வத்துடன் படங்களை பார்த்தார். என்னிடம் கேமிரா பற்றிக் கேட்டார்.

கேமிராவை வாங்கிக் கோணங்கள் பார்த்தார். இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தனது சுயசரிதையில் பயன்படுத்திய படங்களைப் பிடித்தது நான்தான். தீபாவின் படங்கள் கூர்மையாகவும் அருமையாகவும் அமைந்திருந்தன... அனைத்து விளையாட்டுக்களைப் படம் பிடித்தாலும் எனக்குப் பிடித்தது ஜிம்னாஸ்டிக்ஸ்தான் . அதுவும் ஒத்திசைக்கப்பட்ட நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் ஒத்திசைக்கப்பட்ட நீச்சல் குறித்த புகைப்படப் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளேன்.

சிந்து போட்டியில் வெற்றியோ தோல்வியோ நான் இருக்கும் இடத்திற்கு வந்து போஸ் கொடுத்துவிட்டுச் செல்வார். ஒலிம்பிக்ஸ் முடிந்து இந்தியா திரும்பும் போது நீரஜ்ஜுடன் பயணித்தேன். தங்கமான பையன். ஒருமுறை சச்சினைச் சந்திக்க மைதானத்திற்குள் நுழைந்துவிட்டேன். ஏற்கெனவே பல படம் பிடிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் என்னையும் பாதுகாவலர்கள் சச்சின் பக்கம் செல்லவிடவில்லை. என்னைப் பார்த்ததும் சச்சின் அழைக்கவே நான் உள்ளே சென்று சிறிது நேரம் பேசிவிட்டு படங்கள்
எடுத்துவிட்டு திரும்பினேன்.

அடுத்த மாதம் துபாயில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்திற்குச் சென்று படங்கள் எடுக்க இருக்கிறேன். சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் படம் எடுக்கும் கலை குறித்து சொல்லிக் கொடுத்து வந்தேன். பள்ளிகள் மீண்டும் திறந்திருப்பதால் மீண்டும் மாணவர்களைச் சந்திப்பேன்'' என்கிறார் சுகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com