உடல் மொழியே உயிர்நாடி!

நாடகக்கலை என்பது பொழுது போக்கு அல்ல. அவை பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் ஒரு கலையாக மாறிவிட்டது என்கிறார் கருணாபிரசாத்.
உடல் மொழியே உயிர்நாடி!


நாடகக்கலை என்பது பொழுது போக்கு அல்ல. அவை பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் ஒரு கலையாக மாறிவிட்டது என்கிறார் கருணாபிரசாத். தமிழ்நாட்டில் நவீன நாடகச் செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பவர். தன்னுடைய "மூன்றாம் அரங்கு' நாடகக்குழு மூலம் பல்வேறு புதுமைகளைச் செய்து வருபவர். அவரிடம் பேசினோம்:
""நான் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 92-ஆம் ஆண்டு வரை கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தேன். தொடர்ந்து மூன்றாம் அரங்கு என்ற பெயரில் நாடகக்குழுவை தொடங்கி நவீன நாடகங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறேன். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் வேலுசரவணனுடன் இணைந்து குழந்தைகள் நாடகமும் நடத்தி வருகிறேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எனக்காக "அரவாண்' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அதில் நான் மட்டுமே நடித்தேன். பஞ்ச தந்திர கதைகள் மூலம் தொடர்ந்து குழந்தைகள் நாடகமும் நடத்தி வந்தோம். ஆனால் கரோனா காரணமாக இப்போது நாடகங்களை நடத்த முடியவில்லை.
நாடகம் என்னும் கலையாக்கத்தின் தனிச் சிறப்பே உடல் மொழிதான். வேறு என்ன இல்லை என்றாலும் நாடகத்தை நிகழ்த்தலாம். மேடையில்லாமல், அரங்கமில்லாமல், ஒப்பனைகள் இல்லாமல், அலங்காரங்கள் இல்லாமல், வேறு ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல் நாடகத்தை நிகழ்த்தலாம்; ஆனால் நிகழ்த்துபவர்கள் என்னும் நடிகர்கள் இல்லாமல், பார்வையாளர்கள் இல்லாமல் நாடகக்கலை இல்லை. ஆக, நிகழ்த்துபவர்களின் குரல் உட்பட உடல்தான் நாடகக் கலையின் அடிப்படை. திரைப்படம் என்பது எப்படி காட்சிப் படுத்துவதை அதன் மொழியாகக் கொண்டிருக்கிறதோ, அதேபோன்று நாடகத்தின் உயிர்நாடி உடல்மொழியாகும்.
பள்ளி, கல்லூரி மாணவிகளின் பார்வையில் நாடகம் என்பது ஆண்டுவிழாவுக்காக மாணவர்களை பொம்மைகள் போன்று நிற்க வைத்து வசனம் பேச வைப்பதாகும். ஆனால் இந்த நாடகக்கலையின் பின்னே பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. உலக நாடுகள் இந்தக் கலையைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றன. தமிழ்நாட்டில் தான் நாடகக்கலையைப் பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லை. அதாவது நாடகக்கலைஞனை, நடிகனை உருவாக்க நாடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக ஒருவர் நடிகராவதற்கு முன் உளவியல் பயிற்சி உடல் மொழிகளை வெளிப்படுத்தும் பயிற்சி, உணர்ச்சிகள் வெளிக்கொண்டு வருதல், தயக்கத்தை உடைத் தெறிதல் என பல விஷயங்கள் கற்றுத்தரப்படுகிறது. இதனை தியேட்டர் இன் எஜுகேஷன் என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறோம். இதன் மூலம் அவர்களது பல்வேறு திறன்கள் வெளிக்கொண்டு வரப்படுகிறது. குறிப்பாகப் பள்ளிகளில் நடத்தப்படும் இந்த வகுப்புகள் என்பது பொழுது போக்காக இருப்பது போன்று இருந்தாலும் அவர்களின் அறிவுத்திறனுடன், அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதனைப் பள்ளி நிர்வாகத்தினர் உணரும் போது இந்த கலையை உயரத்தில் வைத்து பார்க்கிறார்கள்.
பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் இந்தத் "தியேட்டர் இன் எஜுகேஷன்' தற்போது தொழில் நிறுவனங்களிடமும் பிரபலமாகி வருகிறது காரணம், தொழிலாளர்களின் வேலைப்பளு; மன அழுத்தம் போன்றவற்றை நீக்கி அவர்களை உற்சாகப்படுத்துகிறது. இதன் மூலம் அவர்களின் தொடர்பு திறன், ஆளுமைத்திறன், பேச்சுதிறன் போன்ற பல விஷயங்கள் மேம்படுகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com