ரத்தத்தின் ரத்தமே... - 33

அந்தக் காலத்தில் நமது நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானோர் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு கால் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டு, உட்காருவதை வழக்கமாகக்
ரத்தத்தின் ரத்தமே... - 33

அந்தக் காலத்தில் நமது நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானோர் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு கால் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டு, உட்காருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இம்மாதிரி உட்கார்ந்திருப்பதை நாம் கதைகளில், காவியங்களில் படித்திருக்கிறோம். திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். சிலைகளாகவும் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பது என்பது ஒரு கம்பீரத்தின் அடையாளம். ஒரு ஆண்மையின் அடையாளம். ஒரு ஆளுமையின் அடையாளம். பெரும்பாலும் ஆண்களே இதை அதிகமாக செய்வார்கள். இந்தக் காலத்தில் இப்படி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அதை "ஸ்டைல்' என்பார்கள். ஆணவம், கர்வம், அகங்காரம் என்றும் சிலர் சொல்வார்கள். வயதில் சிறியவர்கள் இம்மாதிரி செய்தால் சிலர் இதை மரியாதைக் குறைவு என்றும் சொல்வார்கள். சிலர் இதிலென்ன தவறு இருக்கிறது என்பார்கள். கால் மேல் கால் போட்டு ஆண்கள் உட்கார்ந்தாலே, இப்படியெல்லாம் பலவிதமான விமர்சனங்கள் வரும்போது, ஒரு பெண் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், எப்படியிருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். 

ஒரு பெண் கால் மேல் கால் போட்டு, ஆணை விட அதிக கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள், என்றால் உடனே நமது நினைவுக்கு வருவது, "படையப்பா' என்கிற பிரபல தமிழ்த் திரைப்படத்தில் நீலாம்பரி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன். தனது எதிராளியான ரஜினிகாந்துக்குப் போட்டியாக கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருப்பது தான். மிகப் பிரமாதமாக இருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு.

மருத்துவ ரீதியாக கால் மேல் கால் போட்டு அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என்பது ஆரோக்கியமானதல்ல என்று சொல்லப்படுகிறது. சிலர் கைகளை மடித்து வைத்து, அதன் மேல்  தலையை வைத்து தூங்குவார்கள். சிலர் இரண்டு கால்களையும் மடக்கி, சம்மணம் போட்டு நீண்ட நேரம் உட்காருவார்கள். சிலர் கால் மேல் கால் போட்டு மணிக்கணக்கில் உட்காருவார்கள். ஒரே இடத்தில், ஒரே நிலையில் இம்மாதிரி அதிக நேரம் உட்கார்ந்திருந்தால், நமது உடலில் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் அதிகமாகும். அதிக அழுத்தம் அந்த இடத்தில் இருக்கும் தலைமுடி போன்ற மிகச்சிறிய மிக நுண்ணிய நரம்புகளுக்கும், மிக நுண்ணிய ரத்தக் குழாய்களுக்கும், அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். ரத்தக் குழாய்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், அது அந்த இடத்திற்கு ரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். ரத்த ஓட்டம் குறைந்தால், அந்த இடத்தில் இருக்கும் நரம்புகளின் செயல்பாடும் குறைய ஆரம்பிக்கும்.

இவ்வாறு அதிக நேரம் ஒரே இடத்தில், ஒரே நிலையில் அமரும் போது உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொடுக்கப்படும் அழுத்தமானது, ரத்த ஓட்டம் இல்லாமல், நரம்புகளின் செயல்பாடு இல்லாமல், உணர்வற்று, செயலற்று, வலியற்று ஒரு மரக்கட்டை போல் ஆகிவிடும். இதைத் தான் நாம் மரத்துப் போயிடுச்சு என்று சொல்வோம்.

நரம்பு மண்டலம் என்பது உணர்ச்சி, கூச்சம், வலி, எரிச்சல், சூடு, சொரணை, மரத்துப் போதல் முதலிய தொடு உணர்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்டவை. 

நரம்புகள் சரியாக வேலை பார்த்தால் தான்,  உடலில் உணர்வுகளே தெரியும். நரம்புகள் சரியாக வேலை பார்க்க, ரத்த ஓட்டத்தின் துணையும் மிக மிக அவசியம். உணர்வு அதாவது தொடு உணர்வு சில பேருக்கு, இயற்கையாக இருக்க வேண்டியதை விட அதிகமாக இருக்கும். சில பேருக்கு இயற்கையாக இருக்கவேண்டியதைவிட குறைவாக இருக்கும். அவனை லேசா தொட்டாலே போதும் கண்டுபிடிச்சிடுவான், ரொம்ப சென்ஸிடிவ் என்று சிலரைச் சொல்வதுண்டு. நீ என்னைத் தொடவேண்டாம், என் சீலையைத் தொட்டாலே போதும். எனக்குத் தெரியும் என்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வசனம் வரும். அந்த அளவுக்கு தொடு உணர்ச்சி மிக நன்றாக இருக்கிறதென்று அர்த்தம்.

சில நேரங்களில், தற்காலிகமாக நமது உடலில் சில இடங்களில் தொடு உணர்ச்சியே இல்லாமற் போவதும் உண்டு. பெரிதாக வீங்கிப் போன ரத்தக் குழாய், சில கட்டிகள், தடிமனாகிப் போன பழைய தழும்பு, சமீபத்தில் வந்த நோய், அக்கி போன்ற சில பிரச்னைகள் கூட, முடி அளவு உள்ள நரம்புகள் அழுத்தப்பட்டு, உடலில் அந்த இடத்தில் உணர்வு இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இதுபோக எய்ட்ஸ் நோய், குஷ்டரோகம், பால்வினை நோய், காசநோய் போன்றவைகளிலும், தோல் மேலடுக்குகளில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, தோல் உணர்ச்சி குறைந்துவிடும் அல்லது உணர்ச்சியே இல்லாமல் கூட போய்விடும். 

மரத்துப் போதல் என்பது பெரும்பாலும் கை, கால், இடுப்பு முதலிய பகுதிகளில் திடீரென்று வந்து, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் இதே மரத்துப் போதல் தொடர்ந்து பல நாள்கள், பல வாரங்கள் பல மாதங்கள் இருந்தால் உடலுக்குள் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். கவனிக்க வேண்டும். உடனே உங்கள் குடும்ப டாக்டரை சந்திக்க வேண்டும்.

இதே மரத்துப் போதல் பிரச்னை சில பேருக்கு கால்களில் அடிக்கடி, அதிகமாக வருவதுண்டு. அதாவது கால் மேல் கால் போட்டுக் கொண்டோ, தொடையை அழுத்திக் கொண்டோ மணிக்கணக்கில் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்புறம் வேலை முடிந்தபிறகு எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது காலை ஊன்றி நடக்க முடியாது. கால் தரையில் தொடுவது தெரியாது. காலில் உணர்ச்சி இருக்காது. கால் மரத்துப் போய் உணர்வற்றுப் போய் மிகக் கனமாக, மிகக் கடினமாக இருப்பது போன்று தோன்றும். பெருங்கால் பிடித்துக் கொண்டது என்று இதைத்தான் சிலர் சொல்வதுண்டு. இப்படி உணர்வற்றுப் போய், கால் மரத்துப் போய்விடும் என்பதற்காக கால் மேல் கால் போட்டு உட்காராமல் இருப்பதா என்று சிலர் நினைப்பதுண்டு. இது அவரவர்களின் சுதந்திரம், சொந்த விருப்பம், பழக்க வழக்கம் சம்பந்தப்பட்டது.
இந்த கால் அல்லது கை மரத்துப் போதல் என்பது அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு தினமும் சில நிமிடங்கள் நடக்க கூடிய ஒரு விஷயமாகத் தான் இருக்கின்றது. பயப்படத் தேவையில்லை.  

தொடரும்


கால்கள், பாதங்கள் மரத்துப் போக காரணங்கள்? 


1. கால் மேல் கால் போட்டு ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது.

2. உட்கார்ந்தோ அல்லது மண்டியிட்டோ ரொம்ப நேரம் இருப்பது. 

3. சம்மணம் போட்டு ரொம்ப நேரம் உட்கார்ந்திருப்பது.

4.ரொம்ப இறுக்கமாக, ரொம்ப டைட்டாக பேண்ட், சாக்ஸ், காலணி முதலியவைகளை தினந்தோறும் நீண்ட நேரம் போட்டுக் கொள்வது.

5.கால் விரல்கள், பாதம், கணுக்கால், இடுப்பு முதுகெலும்பு முதலியவைகளில் விபத்தினால் காயம் ஏற்பட்டு அதனால் ரத்தக் குழாய் மற்றும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் மரத்துப் போவது.

6.கால், கைகளில் உள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் நோய்வாய்ப்பட்டு, பாதிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து அதனால் மரத்துப் போவது.

7.தசைக்கட்டி, நீர்க்கட்டி, சீழ்க்கட்டி, புற்றுநோய் அல்லாத கட்டி இவைகளெல்லாம் ரத்தக் குழாய்க்கு அழுத்தம் கொடுத்து, ரத்த ஓட்டத்தைக் குறைத்து, கை, கால்கள் மரத்துப் போதல்.

8.ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கூட, ரத்தக் குழாய்களைப் பாதித்து, ரத்த சப்ளை கிடைக்காமல் மரத்துப் போகச் செய்துவிடும்.

9.காலைத் தூக்கி முட்டிக்குப் மேலே போட்டுக் கொண்டு ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தால், கால் மரத்துப் போகும். ரத்த அழுத்தமும் கூடிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com