தொழுநோய் ஒழியப்பாடுபட்டவர்

​மருத்துவர்களின் சேவை என்பது இந்த சமூகத்திற்கு முக்கியமான தேவை. பல உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு மருத்துவர்களுக்கு உண்டு.
தொழுநோய் ஒழியப்பாடுபட்டவர்


மருத்துவர்களின் சேவை என்பது இந்த சமூகத்திற்கு முக்கியமான தேவை. பல உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு மருத்துவர்களுக்கு உண்டு. அந்த வகையில் மருத்துவர் எஸ்.கே. நூருதீன் பங்கு இன்றியமையாதது.50 ஆண்டுகளுக்கு மேலாக தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாபெரும் சேவை ஆற்றியவர். 

1933-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிபடிப்பு முதல் மருத்துவப் பட்டப்படிப்பு வரை சென்னையில் படித்தார். பின் மருத்துவப் மேற்படிப்பினை கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தார். 

மாணவப் பருவத்திலேயே சமூக சேவையில் தணியாத ஆர்வம் கொண்டதினால், தொழுநோயை ஒழிக்கும் பணியில் ஆர்வம் கொண்டு அதில் தீவிரமாக உழைத்தார். 

இதன் காரணமாக 1958-ஆம் ஆண்டு மத்திய தொழு நோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். இருபது ஆண்டுகள் தொழுநோய் சிகிச்சை, தடுப்பு மறுவாழ்வு ஆகியவற்றுக்காகப் பணிபுரிந்ததுடன் பல ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

ஜெனீவாவைத் தலைமையிடமாக் கொண்ட உலக சுகாதார நிறுவனத்தில் 1979-ஆம் ஆண்டு சேர்ந்து தொழுநோய் ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 20 ஆண்டுகள் உலகச் சுகாதார நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் உலகம் முழுவதும் தொழு நோயை ஒழிக்க முனைப்புடன் செயல்பட்டார். தொழுநோய்க்கு நவீன கூட்டு மருந்துச் சிகிச்சைத் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தி உலக முழுவதும் தொழுநோய் ஒழிய அரும்பாடுபட்டார். 

இந்தியாவில் தொழுநோய் ஒழியவும் இவரது வழிகாட்டுதல்கள் பெரிதும் உதவின. தென்கிழக்கு ஆசிய மண்டல தொழுநோய் ஒழிப்பு தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவராக இருந்து  வழிகாட்டினார். 

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்விற்காக இந்தியாவிற்கு உதவும் ஜப்பானைச் சேர்ந்த சசகாவா நிறுவனம் ஏற்படுத்தியுள்ள அமைப்பிற்குத் தலைமை தாங்கி வழி நடத்திய இவர். கடந்த 27 ஆகஸ்ட் 2021 அன்று  மரணமடைந்தார். 

மருத்துவர் எஸ்.கே. நூருதீனுக்கு பல்வேறு தேசிய விருதுகளும், பன்னாட்டு விருதுகளும் கிடைத்துள்ளன. உலகம் முழுவதும் தொழு நோய் ஒழியப்பாடுபட்ட உன்னதமான மருத்துவர் இவர். இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com