ரோஜா மலரே! - 108: ஜெயலலிதா தந்த கௌரவம்! - குமாரி சச்சு

​முதலமைச்சரை பார்க்க போயஸ் தோட்டத்திற்கு வரச் சொல்வார் என்று நினைத்திருந்தேன்.
ரோஜா மலரே! - 108: ஜெயலலிதா தந்த கௌரவம்! - குமாரி சச்சு


முதலமைச்சரை பார்க்க போயஸ் தோட்டத்திற்கு வரச் சொல்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் எங்களை சந்திக்க வரச் சொன்ன இடம் தலைமைச் செயலகம். என்னுடைய தங்கை சித்ராவும் வந்திருந்தார். என் தங்கையை பார்த்தவுடன், "சித்ரா என்று அழைத்து, நலமா?' என்று கேட்டார். என் தங்கைக்கு பரம ஆனந்தம். "முதலமைச்சர் என் பெயரை நினைவு வைத்திருக்கிறார்' என்று சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்.

நாங்கள் இருவரும் ஓர் அறையில் அமர வைக்க பட்டோம். நாங்கள் சென்ற போது பல முக்கியஸ்தர்கள் வந்திருந்தார்கள். அவர்களை பார்த்து அனுப்பிவிட்டு, என்னைப் பார்த்து, "சச்சுமா எப்படி இருக்கீங்க' என்று கேட்டார். அவர் என்னைப் பற்றி உயர்வாக எழுதியிருந்த கடிதத்திற்கு நன்றி தெரிவித்து விடலாம் என்று நினைத்து இருந்தேன்.

அதற்குள் அவர் என்னைப் பார்த்து, "நான் எழுதி இருந்த கடிதத்தை நீங்கள் படித்தீர்களா?', என்று கேட்டார். எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, அவரே கேட்டவுடன், "நான் முதலில் உங்களுக்கு நன்றி சொல்லணும். உங்களைப் பார்த்தவுடன் எனக்கு பேச்சே வரவில்லை' என்றேன்.

"சினிமா பயணம் எப்படி உள்ளது?' என்று கேட்டார்.

"இப்பவும் எனக்குப் பிடித்த பாத்திரங்களில் மட்டும் நடித்து கொண்டு இருக்கிறேன். டி.வி சீரியலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன்', என்றேன்.

"நீங்கள் திறமைசாலி. எது கொடுத்தாலும் திறமையாக செய்வீர்கள்'என்றார் ஜெயலலிதா.

கலைவாணரை பார்த்து பேசியிருக்கேன் என்று முன்பே சொல்லி இருக்கிறேன். தமிழ்நாடு அரசின் "கலைவாணர் விருது', எனக்கு 1992 வருடம் கொடுக்க அறிவிப்பு செய்தார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, கலைவாணர் பெயரில் விருது, அதை முதலமைச்சர் ஜெயலலிதா கையால் வாங்க போகிறோம் என்ற நினைப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.

அந்த விருது வாங்கும் வரை எனக்கு சினிமாவில் எந்த ஓர் அங்கீகாரமும் கிடைத்ததில்லை. நான் இதைப் பற்றி நினைத்து வருத்தப்பட்ட நாள் உண்டு. ஆனால் நாம் நம் கடமையை செய்வோம், விருது வரும் போது வரட்டும் என்ற நினைப்பில் நான் நடித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று எப்படி ஜெயலலிதாவுக்கு தோன்றியதோ தெரியவில்லை. அது மட்டுமல்ல, அவர் தான் எனக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார்.

தமிழ் நாடு அரசின் சிறந்த திரைப்படத்தேர்வு குழுவில் உறுப்பினர் ஆக்கினார். அது மட்டுமல்ல, பின்னர் இயல் இசை நாடக மன்ற குழுவில் உறுப்பினராகவும் என்னை நியமித்தார். தேர்வு குழுவில் ராஜசுலோச்சனா, வாணி ஜெயராம், ராதா ரவி, பி. வாசு என்று பலர் இருந்தோம்.

பின்னர் நான் ஒரு சமயம் வெளியூர் படப்பிடிப்பில் இருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த தொலைபேசி அழைப்பிற்கு எதிர்முனையில் பேசிய நபர், எனக்கு சொன்ன செய்தி என்னை மிகவும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் கேட்ட கேள்விக்கு முதல்வர் என் மேல் வைத்துள்ள அன்பு மற்றும், நம்பிக்கையை நினைத்து பெருமைப்பட்டேன். அதனால் இப்பொறுப்பை கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன்.

படப்பிடிப்பை முடித்து கொண்டு நான் வீட்டிற்கு வந்தவுடன், அரசாங்க உத்தரவு வந்து இருந்தது. ஆனால் எதுவானாலும் ஜெயலலிதா கையால் வாங்க வேண்டும் என்று விரும்பினேன். நான் கேட்டவுடனேயே என்னை கோட்டைக்கு வரச் சொன்னார். அவர் கையால் அரசாங்க உத்தரவு வாங்கிக் கொண்டு, பேச ஆரம்பிப்பதற்கு முன் "இன்னொரு முக்கியமான விஷயம், அதாவது', என்று பேச்சை தொடரும் முன்னர், ஜெயலலிதா உடனேயே "ருக்மணி தேவி அருண்டேல் முதல் பெண்மணி. அவருக்கு அடுத்தபடி நீங்க தான் என்று சொன்னார்'. எதையுமே அவருக்கு முன்கூட்டியே நாம் சொல்லவே முடியாது. முதல் முதலாக அந்த உறுப்பினர் செயலர் நாற்காலியில் உட்கார்ந்தது நான் தான். அந்த பெருமையை ஜெயலலிதா எனக்கு கொடுத்தார்.

நல்ல நாள், ஆடிப்பெருக்கு அன்று, தமிழ் நாடு இயல் இசை நாடகமன்ற உறுப்பினர் செயலராக பதவி ஏற்று கொண்டேன். தலைவர் பொறுப்பில் நியமிக்கபட்ட இசையமைப்பாளர் தேவாவும் அன்றைய நாள் அன்று பதவி ஏற்று கொண்டார்.

இந்த அமைப்பு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் 1955 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா இந்த அமைப்பை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்று பெயரை மாற்றி சூட்டினார். முதல் தலைவராக ருக்மணி தேவி அருண்டேல் இருந்தார். அதைத்தான் முதல்வர் சொன்னார்.

அவருடன் பேசும் போது சொன்னேன். "இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்து இருக்கிறீர்கள். எந்த அளவிற்கு நான் செய்வேன் என்று தெரியலை', என்று சொன்னேன். "ஏன் சச்சும்மா. உங்களைப் பற்றி நீங்களே சந்தேகப்படுறீங்க, உங்கள் திறமையைப் பற்றி எனக்கு தெரியும். நான் தான் முன்பே சொன்னேனே நீங்கள் திறமைசாலி, அனுபவசாலி. எவ்வளவு வருஷம் நடிக்கிறீர்கள். அதுமட்டுமல்ல; எவ்வளவு சீனியர் நடிகர், நடிகையர்களுடன் நீங்கள் நடித்து இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை. நாடங்களிலும் நடித்து உள்ளீர்கள். எல்லா கலைஞர்களையும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நடனம் மட்டுமல்ல, சங்கீதமும் தெரியும்..' என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார். நான் அவர் கூறிய வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து, "நீங்கள் சொல்லி விட்டீர்கள், அதனால் எனக்கு தைரியம் வந்து விட்டது. அதனால் சிறப்பாக செய்வேன். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் கேட்டுக் கொண்டு தான் செய்வேன்'என்று கூறினேன்.

இயல் இசை நாடக மன்றத்தில் அனைத்து கலைகளும் இருக்கும் வகையில் ஒரு விழா எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதில் அனைத்து கலைகளும் இடம் பெறவேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். கர்நாடக இசை, நாட்டுப்புறக் கலைகள், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, இவை போன்ற அத்தனையும் இருக்கும் வண்ணம் ஒரு விழா எடுத்து நடத்த திட்டமிட்டேன். எல்லா கலைகளும் இடம் பெறும் விழா என்றால் நாள்கள் உயர்ந்து கொண்டே வந்தது. இதுவரை அப்படி ஒரு விழாவை இயல் இசை நாடக மன்றம் நடத்தியதே இல்லை, அமர்க்களமாக விழா 13 நாள்கள் நடந்தது.

இதில் அனுபவசாலிகள், இளம் கலைஞர்கள் என்று எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல வட இந்தியாவில் இருந்தும் கலைஞர்களை அழைத்து வந்து "கதக்' போன்ற நடனங்களையும் நடத்தினோம். அவர்களும் அரசாங்கத்தில் இருந்து ஒரு வாய்ப்பு என்றவுடன் சந்தோஷப்பட்டனர்.

அந்த நேரத்தில் குமாரி கமலா அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து இருந்தார். அந்த விழாவில் கமலாவையும் அழைத்து வந்து கெளரவப்படுத்தினோம். "தானே' புயலால் கடலூரில் சேதம் ஏற்பட்டது. இயல் இசை நாடக மன்றம் சார்பாக நாங்களும் உதவி வழங்க முடிவு செய்தோம். நடன கலைஞர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். நானும், தலைவர் தேவாவும் இணைந்து 8 லட்சம் நிதி திரட்டி ஜெயலலிதாவிடம் வழங்கினோம்.

"விக்கு' விநாயகராம், ஃப்ளூட் ரமணி, உமையாள்புரம் சிவராமன் போன்ற பெரிய கலைஞர்கள், இயல் இசை நாடக மன்ற அழைப்பின் பேரில், ஜெயலலிதா மேல் உள்ள அன்பும், மரியாதையும், சென்னையின் வறட்சியை போக்கும் விதமாக மழை வேண்டி, அமிர்தவர்ஷினி ராகத்தை இசைக்க வந்தார்கள். மயிலாப்பூர் கபாலி கோயிலில் தீபாராதனை காட்டியவுடன் அந்த பிரசாதத்தை முதல்வருக்கு கொண்டுபோய் கொடுக்க காரில் ஏறப் போகும் போது, மழை கொட்டி தீர்த்தது. இதற்கு ஜெயலலிதாவிடம் அனுமதி வாங்க, தொலைபேசியில் அழைத்தேன். "நீங்கள் நல்ல காரியம் தான் செய்கிறீர்கள். எதுக்கு என்னிடம் பர்மிஷன்?' . "உங்கள் அனுமதி கிடைத்தால் நான் வெற்றிகரமாக செய்து முடிப்பேன்' என்றேன்.

எங்கள் அலுவலகம் இருந்த இடம் அருகில் ஒரு திரையரங்கம் கட்டவேண்டும் என்று விரும்பினேன். திறந்த வெளி திரையரங்கம் தான் கட்ட முடிந்தது. அதன் பெயர் ருக்மிணி தேவி அருண்டேல் அரங்கம் என்று ஜெயலலிதாவிடம் கூறினேன். பொருத்தமான பெயர் என்று என்னைப் பாராட்டினார். கலைஞர்களுக்கும் அரசாங்கத்துக்கும் பாலமாக இருக்க, ஜெயலலிதா எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார்.

108 வாரங்களாக என் அனுபவத்தை படித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னிடம் நேரிலும் தொலைபேசி வழியாகவும் பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

(நிறைவு பெற்றது) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com