மக்னா மூர்த்தி 'தி லெஜண்ட்'

கண்டதும் சுடப்பட வேண்டிய ஒரு கொலைகார நபரை (!?) திருத்தி நல்லவனாக்கிய சம்பவம்தான் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தேறியது.
மக்னா மூர்த்தி 'தி லெஜண்ட்'


கண்டதும் சுடப்பட வேண்டிய ஒரு கொலைகார நபரை (!?) திருத்தி நல்லவனாக்கிய சம்பவம்தான் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தேறியது. இது மனிதருக்கு ஏற்பட்டதல்ல; யானைக்கு என்பதுதான் வித்தியாசமானதாகும். அந்த யானையும் ஓய்வு பெற்றது. சினிமாவில் வருவதைப் போன்றதொரு நிகழ்வுதான் இது!

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானைகளில் "மக்னா' என்றொரு பிரிவு இருப்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது.

தந்தமற்ற ஆண் யானைதான் மக்னா. மரபியல் குறைபாடுகளால் ஏற்படும் தந்தமில்லாத பிரச்னை அவற்றின் வாழ்வில் பெரும் அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக, பெண் யானைகள் இந்த தந்தமற்ற ஆண் யானைகளை விரும்புவதில்லை. தந்தமுள்ள ஆண் யானையும் இவற்றோடு சேர்த்துக் கொள்ளாது. இதனால், இவை ஒருவித ஆக்ரோஷத்துடனும், விரக்தியுடனுமே தனிமையில் வனப்பகுதிகளுக்குள் சுற்றிக் கொண்டிருக்கும். உயரத்திலும், எடையிலும் மிகவும் பெரிதாக காணப்படும் மக்னா யானைகள் கோபத்தின் காரணமாகவே மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

"மூர்த்தி' என்றழைக்கப்பட்ட இந்த மக்னா யானை கடந்த செப்டம்பர் மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றது.

இந்த யானை குறித்து யானை ஆராய்ச்சியாளரும், உதகை அரசு கலைக்கல்லூரி வன விலங்கியல் துறை உதவி பேராசிரியருமான ராமகிருஷ்ணன் கூறியதாவது:

""கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு வயநாடு, நிலம்பூர் பகுதிகளில் சுற்றி வந்த ஒரு மக்னா யானை 1998-ஆம் ஆண்டு வரை மிக மூர்க்கமாக நடந்து கொண்டது. அப்போது 12-க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கியது. இது அபாயகரமான யானையாக அறிவிக்கப்பட்டு அதை கண்டதும் சுடும் உத்தரவை கேரள அரசு வெளியிட்டது.

அதன்படி வனத்துறையினரும் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் குண்டு காயங்களுடன் பிடிபடாமல் தமிழக எல்லையான புளியம்பாறைக்குள் வந்தது.

தன்னை துரத்தி, துரத்தி சுடுகிறார்களே என்ற கோபமும் வேதனையும் தாங்காமல் தஞ்சமடைந்த மக்னா புளியம்பாறை பகுதியிலும் தனது ஆக்ரோஷத்தை காட்டியது. ஏறத்தாழ 22 உயிர்களை பலி வாங்கிய இந்த மக்னாவை கொல்லாமல் ஏன் உயிருடன் பிடிக்கக்கூடாது என்ற விவாதத்தை தொடங்கியவர் வனத்துறை உயர் அலுவலரான உதயன்.

முதுமலையில் இருந்து கும்கி யானைகளுடன் சென்று அந்த மக்னா யானையை மிகுந்த சிரமத்திற்கிடையே மடக்கி பிடித்து தெப்பக்காடு முகாமுக்கு சுமார் 100 கி. மீ. தொலைவுக்கு நடத்தியே அழைத்து வந்தனர். அதன் கால்களில் கனத்த இரும்பு சங்கிலிகள் பிணைக்கப்பட்டிருந்தது. மக்னா யானை கொண்டு வரப்பட்டு கிராஸ் கூண்டில் அடைத்தனர்.

கிராஸ் கூண்டு என்பது வலுவான மரங்களால் அமைக்கப்பட்ட கூண்டாகும். இதன் வழியாக உணவு, தண்ணீர்தான் கிடைக்கும். ஆனால் நின்ற இடத்தைவிட்டு கொஞ்சம் கூட நகர முடியாது.

கூண்டில் அடைக்கப்பட்ட பின்னர் இந்த மக்னாவுக்கு "யானை டாக்டர்' கிருஷ்ணமூர்த்தி சிகிச்சைஅளிக்கத் தொடங்கினார். அதன் உடலிலிருந்து ஏராளமான குண்டுகள் அகற்றப்பட்டன.

ஒரு சில குண்டுகள் சிக்கியிருந்த பகுதிகள் அபாயகரமான பகுதிகள் என்பதால் அவற்றை அகற்றினால் யானையின் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடுமென எச்சரிக்கப்பட்டதால் அவை இன்னமும் அதன் உடலிலேயே தங்கியுள்ளன.

இதற்கிடையே மக்னா யானையை வனத்துறையினர் துன்புறுத்துவதாக அமெரிக்காவை சேர்ந்தல டியானா கிரண்ட்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் அடிப்படையில் இந்த யானையை பார்வையிடுவதற்காக நீதிபதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று நேரில் ஆய்வு செய்தது. அப்போது மக்னா யானைக்கு ஆதரவாக வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, இந்திய முறைப்படியே சிகிச்சை அளிக்க உதவினார்.

அதன் பின்னர் நீலகிரி கானுயிர் சங்க நிர்வாகியான ஏ.சி.சவுந்திரராஜனின் முயற்சியின்பேரில், அப்போது மத்திய அமைச்சராக இருந்த மேனகா காந்தியும் தெப்பக்காடு வந்து மக்னாவை நேரில் பார்வையிட்டார். இதன் மூலம் மக்னா சர்வதேச அளவிலும் புகழ் பெற்றது.

பின்னர் யானையின் கோபம் தணிந்து இயல்பு நிலைக்கு வந்ததன் காரணமாக கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற யானைகளுடன் பழக விடப்பட்டது. அப்போது அதன் சிகிச்சைக்கு உதவிய கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியின் பெயரில் அதற்கு "மூர்த்தி' என பெயரிடப்பட்டது. விரைவில் அனைவருடனும் சிநேகம் காட்டிய மூர்த்தி கும்கியாக மாற்றப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை நல்லவன் என்ற பெயரையே எடுத்துள்ளது.

சுமார் 24 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்த இந்த மக்னாவுக்கு மனிதர்களைப் போலவே ஒய்வு அறிவிக்கப்பட்டு, விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்போது 28 யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனப் பகுதியில் ரோந்து சென்று பாதுகாப்பைப் பலப்படுத்துவது, ஊருக்குள் புகும் காட்டு யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடிப்பது, மதம் பிடித்த யானைகளை மடக்கி பிடித்து வழிக்கு கொண்டு வருவது, வாகனங்கள் போக முடியாத இடத்தில் வெட்டப்படும் மரங்களை உரிய இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த 58 வயதான "முதுமலை' என்ற தந்தமுள்ள யானையும், மக்னா மூர்த்தியுடன் சேர்ந்து ஒய்வு பெற்றது. இரு பக்கமும் யானைகள் அணிவகுத்து நிற்க நடுநாயகமாக இரண்டு யானைகளும் நெற்றி பட்டம் அணிந்து அலங்காரத்துடனும், கம்பீரத்துடனும் நின்றிருந்தன.வனத்துறை உயர் அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் பலரும் குழுமியிருந்த போது இரண்டு யானைகளுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

முதுமலை யானை இங்குள்ள மூத்த யானைகளில் ஒன்றாகும். அது ஆறு வயதாக இருக்கும் போது அகழி வெட்டி அந்தகால முறைப்படி பிடிக்கப்பட்டது. பிடிபட்டு வந்த நாள் முதல் தெப்பக்காட்டை தனது சொந்த காடாக்கி வலம் வருகிறது. மிகவும் கீழ்படியும் குணம் கொண்ட முதுமலையைத்தான் எங்கே காட்டு யானைகள் அட்டகாசம் செய்தாலும் முதலில் அனுப்புவர்.பணி காரணமாக ஆந்திரம், கர்நாடகம்,கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் போய் கடமையாற்றியுள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, அவரது குப்பம் தொகுதியில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அந்த யானையை யாராலும்அடக்க முடியாத நிலையில் முதுமலை யானைதான் சாதூரியமாக செயல்பட்டு காட்டு யானையை அடக்கியது. முதுமலைக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யானைகளுக்கு ஒய்வு என்பது முகாமில் தரப்படும் உணவை உண்டு விட்டு எந்த வேலையும் செய்யாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்'' என்றார்.

கேரளத்தில் பிறந்து கொலைகாரனாகி சர்வதேச புகழ் பெற்று இன்று சாந்த மூர்த்தியாக தமிழகத்தில் முதுமலையில் உலா வரும் மக்னா மூர்த்தி இந்தியாவிலேயே முதல் "கும்கி மக்னா' என்பது இன்னமும் பெருமைக்
குரியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com