உயிரினங்களை நேசிக்கும் விவசாயி

மனிதர்களையே புறந்தள்ளும் உயிரினங்களுக்குத்  தனி இருப்பிடம் உருவாக்கி, கைவிடப்பட்ட,  காயம்பட்ட,  மாடு, நாய், கன்றுகுட்டிகளுக்கு சிகிச்சை அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறார் தம்பிமணி.
உயிரினங்களை நேசிக்கும் விவசாயி

மனிதர்களையே புறந்தள்ளும் இந்தச் சமுதாயத்தில் உயிரினங்களுக்குத்  தனி இருப்பிடம் உருவாக்கி, கைவிடப்பட்ட,  காயம்பட்ட,  மாடு, நாய், கன்றுகுட்டிகளுக்கு அவரே சிகிச்சை அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறார் தம்பிமணி. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கருநாவல்குடியை சேர்ந்த இவர். இந்தச் சேவையை 10 ஆண்டுகளாகச்  செய்து வருகிறார். இதற்காக அவர் உருவாக்கிய இடத்தின் பெயர் "தாய்மடி'.

""நான் சிங்கப்பூரில் எலக்ட்ரிசியன் வேலை செய்து கொண்டிருந்தேன். மிகப் பெரிய நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பளம். ஆனால், சொந்த மண்ணை விட்டு பிரிந்து இருக்கிறோம் என்ற மனநிலை என்னை மாற்றியது. சொந்த ஊர் திரும்பினேன். கணிசமான அளவுக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். நம்மாழ்வாரின் பேச்சை அடிக்கடி கேட்பேன். எனவே அவரின் வழிகாட்டுதலின்படி இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். 

இதற்கிடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு "தாய்மடி' என்ற பெயரில் அனைத்து உயிரினங்களின் காப்பகம் ஒன்றைத்  தொடங்கி நடத்தி வருகிறேன். இந்தக் காப்பகம் தொடங்குவதற்குக்  காரணம் உண்டு.

நான் பத்திரிகை படிக்கும் பழக்கமுள்ளவன். அதுவும் கவிதைகளை விரும்பி படிப்பேன். அப்படி ஒரு முறை சிறுவன் எழுதிய கவிதை ஒன்று என் மனதை மிகவும் பாதித்தது.

செய்யாத உதவிக்கு
வாலாட்டிய படி
தெருவில் நடந்து போகும் போது
ஜோடி கால்கள் பின்ன 
ஓடிஓடி களைத்து
திரும்புகிறது வீதியில் 
விடப்பட்ட அநாதை நாய்க்குட்டி!

நாய்கள் குட்டி போட்டதும் அவற்றை தாயிடமிருந்து கூட்டி வந்து ரோட்டில் விட்டுச் செல்வார்கள். அதுவும் ஒவ்வொருவரின் பின்னே ஓடிஓடி வரும். யாராவது அடைக்கலம் தருவார்களா என்று! நாம் யாரும் அதைக்  கண்டு கொள்ளவில்லையென்றால் மீண்டும் பழைய இடத்திலேயே வந்து நிற்கும். இப்படி அடைக்கலம் தேடும் உயிரினங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் தாய்மடி காப்பகம். 

நாய்,குதிரை, குரங்கு, மாடு, கன்றுக்குட்டி என எல்லா உயிரினங்களுக்கும் என்னுடைய இடத்தில் இடமுண்டு. தற்போது 40 நாய்கள், தாய் இல்லாத கன்றுக்குட்டிகள் 3, குரங்குகள் இருக்கின்றன. நாய்களைப்  பொருத்தவரை ஒரு முறை வந்தால் போகாது. குரங்குகள் காயம்பட்டு வரும் போது சிகிச்சை அளிப்பேன். சரியானவுடன் தன்னுடைய கூட்டத்தைத் தேடி சென்று விடும். ஆனால் மறக்காமல் வாரத்திற்கு,  ஒரு முறை தேடி வந்து காய்கறி, பழங்கள் சாப்பிடுவதற்கு வாங்கிச் செல்லும். பால் வற்றி விட்டால் மாடுகளை வீடுகளில் இருந்து துரத்தி விடுகிறார்கள். அப்படிப்பட்ட மாடுகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்டு வந்து அது உயிருடன் இருக்கும் வரை பராமரிக்கிறேன். என்னிடம் வரும் விலங்குகள் பெரும்பாலும் கால்நடை மருத்துவர்களால் கைவிடப்பட்டவை தான்.

 ஒரு முறை என்னுடைய தம்பி பைக்கில் இருந்து கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டுவிட்டது. எங்கள் பகுதியிலுள்ள வயதான முடக்கு வாத நீக்கும் வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அவர் சரி செய்தார். அப்படிச் தம்பியை அழைத்துச் செல்லும் போது என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து விட்டு, "என்னுடைய வாரிசுகள் யாருக்கும் இந்தத்  தொழில் பிடிக்கவில்லை. நீ கற்றுக்கொள்கிறாயா?'  என்று கேட்டார். சரி என்று அவரிடம் 6 மாதம் உடனிருந்து முடக்கு வாதத்தைச்  சரி செய்யுவும், மரபு வழி மருந்து தயாரிப்பு முறைகளையும் கற்றுக்கொண்டேன்.

கண் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். கைகளில் முடக்கு வாதம் வந்தால் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் அதிக வலியை ஏற்படுத்தும். கை விரல்களைச் சரியாக மடக்கவோ, கைகளைச் சுழற்றவோ முடியாது. பாதம் மற்றும் கணுக்காலில் ஏற்பட்டால், அதிக வலியோடு, நடக்கக்கூட முடியாமல் போய்விடும். 

சில முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் மற்றும் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இதயம், நுரையீரல் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இப்படி முடக்கு வாதத்தில் பல வகைகள் உள்ளன.   முடக்கு வாதம் வந்தால்  மனிதர்களுக்கும், விலங்கினங்களும் ஒரே சிகிச்சை தான். 

மேலும் கைகால் ஒடிந்தால் நானே கட்டு போட்டு சரி செய்து விடுவேன். மரபு வழி வைத்தியத்தைப் பொருத்தவரை கல்லீரல், கிட்னி பாதிப்பு இருந்தால் மூக்குரெட்டை சாறு, மூலிகைசாறு கொடுத்து சரி செய்து விடுவேன். இப்படியாக நானே மருத்துவம் பார்த்து காப்பாற்றிய விலங்குகள் ஐநூறுக்கும் மேல் இருக்கும். 

இப்போது எங்கள் பகுதியில் ஜனங்கள், பாதிக்கப்பட்ட விலங்குகள் இரண்டிற்கும் என்னைத் தான் தேடி வருகிறார்கள். முடிந்தவரை வைத்தியம் பார்த்து சரி செய்து விடுவேன். மாடுகள், நாய்களுக்குத் தேவையான உணவை நானே தயார் செய்து விடுவேன். இவற்றிக்கான செலவுக்காக டெய்லரிங் கடை வைத்துள்ளேன். அதிலுள்ள வருமானம் பயன்படுகிறது. எத்தனை கஷ்டம் வந்தாலும் இந்தத் தாய்மடி காப்பகத்தை விடாமல் நடத்துவேன். இந்தப் பிறவியில் இது எனக்குக் கடவுள் தந்த வரமாக நினைக்கிறேன்'' என்கிறார் தம்பி மணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com