கலையழகு மிக்க 'கோமுகம்'

வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் நிறைந்த திருக்கோயில்களில் சிறப்புற்று விளங்குகிறது தமிழ்நாடு. நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை திருக்கோயில்களுக்கு சென்று வழிபடுகிறோம்.
கலையழகு மிக்க 'கோமுகம்'


வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் நிறைந்த திருக்கோயில்களில் சிறப்புற்று விளங்குகிறது தமிழ்நாடு. நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை திருக்கோயில்களுக்கு சென்று வழிபடுகிறோம்.

திருக்கோயில் அமையும் இடத்தை "வாஸ்து' எனக்கூறுவர். திருக்கோயில் பிரதான மூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடத்தை "கருவறை' என்றும் "மூலஸ்தானம்' எனவும் அழைப்பர். சிவாலயமாக இருப்பின், கருவறையில் சிவலிங்க வடிவில் இறைவனைப் போற்றி வழிபடுகிறோம்.

கோயிலை அமைக்கும் பொழுது கருவறையின் அமைக்கப்பட்டிருக்கும் தளவரிசையின் கீழ், கிழக்குமேற்குத் திசையைக் காட்டும் மைய ரேகையையும், தெற்குவடக்குத் திசையைக் காட்டும் மைய ரேகையையும் (கோட்டினையும்), நூலால் சிற்பிகள் குறியீடு செய்வர். கிழக்கு மேற்காக காட்டும் நூலுக்கு "பிரம்மசூத்திரம்' என்றும் தெற்குவடக்காக காட்டும் நூலுக்கு "சோமசூத்திரம்' என்றும் அழைப்பர்.

பிரம்மசூத்திரமும், சோமசூத்திரமும், வெட்டிக்கொள்ளும் இடமான மையப்புள்ளி "பிரம்மஸ்தானம்' எனக் கூறப்படும். இந்த புள்ளியிலேயே, வழிபாட்டிற்குரிய சிவலிங்கத்திருமேனி ஸ்தாபிக்கப்படும் எனச் சிற்ப நூல்கள் கூறுகின்றன.

கோயில் குடி கொண்டிருக்கும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மகிழ்ச்சி அடைகிறோம். இறைவனுக்கு நாம் படைக்கும் நீர், பால், தேன் போன்ற அனைத்துப் பொருள்களும் தூய்மையாக இருக்க வேண்டும். இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அப்பொருள்கள் மேலும் தூய்மை அடைகின்றன. இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களை புனிதமான, "நிர்மால்யம்' என அழைக்கிறோம். "நிர்மலன்' என்பது இறைவனுக்கு உரிய பெயராகும். "நிர்மலன்' என்ற சொல்லுக்கு "மாசற்றவன்' என்பது பொருளாகும். கல்வெட்டுகளிலும், இறைவனை "நிர்மலன்' என்றே குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். நிர்மலன் கோயிற்குடதிசை, "நிர்மாலிய சாங்கர்யமாய்'என்ற சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

இறைவனுக்கு அபிஷேகம் செய்த பால், தேன், நீர் போன்ற பொருள்கள் கருவறையிலிருந்து வெளியேறுவதற்காக சிறு துவாரம் காணப்படும். இதற்கு "நிர்மால்ய துவாரம்' என்று பெயர். கருவறையிலிருந்து வெளியேறும் நீர் வெளியே வழிந்தோடும் வழி எழில்மிக்கதாக அமைக்கப்படும். இதனை "சித்திர நாளம்' எனவும் அழைப்பர். நீர் செல்லும் வழி நாளம் பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால் இதனை "கோமுகை' என்று சிற்ப நூல்கள் குறிக்கின்றன. சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டின்போது, அபிஷேக நீர் செல்லும் கோமுகையை கடந்து செல்லாமல் வழிபாடு செய்கின்றனர். இதற்கு "சோமசூக்த பிரதட்சிணம்' என்று பெயர்.

கருவறையிலும், திருக்கோயிலின் மற்ற பகுதியில் அமைக்கப்படும் கோமுகையை எவ்வாறு நிர்மானிக்க வேண்டும் என்பதை சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. கிழக்குமேற்கு பார்த்த கோயில்களுக்கு வடக்கு நோக்கிய நாளமும், தெற்குவடக்கு நோக்கிய கோயில்களுக்கு கிழக்கு நோக்கியும் கோமுகை அமைக்கப்பட வேண்டும். "பிரதி பந்த அதிட்டானம்' கொண்ட கோயில் கருவறையாக இருந்தால் பிரதியின் மேல் மட்டத்தில் கோமுகை அமைய வேண்டும். "பாத பந்த அதிட்டானம்' கொண்ட கருவறையில் பட்டிகை, கண்டம், குமுதம், ஜகதி, உபானம் ஆகிய ஐந்து நிலையில் ஏதாவது ஒரு நிலையில் (மட்டத்தில்) தேவைக்கு ஏற்ப கோமுகையை அமைத்துக் கொள்ளலாம்.

சிற்ப வேலைப்பாடுகளுடன்:

கோமுகை பல்வேறு தோற்றங்களில் அழகிய, சிற்ப வேலைப்பாடுகளுடன் திருக்கோயில்களில் காணப்படுகிறது. நீர் வரும் வழி வளைந்து காணப்படும். அப்பகுதி "லிங்காவடம்' எனவும் நாளத்தின் அடிப்பகுதி வாழைப்பூவை போல் அமைப்புள்ளதாகவும் "பூ முனை' அமைய வேண்டும். சில கோயில்களில் அபிஷேக நீர் கோமுகத்தில் இருந்து பூத சிற்பத்தின் வாயின் வழியாக வெளியேறுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

சில கோயில்களில் கோமுகம் எளிமையாகக் காணப்பட்டாலும், தஞ்சாவூர், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோயில்களில் சங்கு ஊதும் பூதகணம் தாங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. கோமுகையிலிருந்து வரும் அபிஷேக நீர் தொட்டி போன்ற கட்டட அமைப்பில் விழுந்து வெளியேறும். இதனை "நிர்மால்ய தொட்டி'எனக் கூறுவர். காரைக்குடி அருகே உள்ள நென்மேனி என்ற ஊரில் உள்ள வன்மீகநாதசுவாமி கோயிலில் உள்ள நிர்மால்ய தொட்டி குணபரன், கைவேலழகியார் என்போர் தானமாக செய்தளிக்கப்பட்டது. இதனை அதன்மேல் உள்ள கல்வெட்டு, ஸ்வஸ்திஸ்ரீ நின்மால்யத் தொட்டி குணபரன் கைவேலழகியார் உள்ளிட்டோர் தன்மம் கி.மு. 13ஆம் நூற்றாண்டு என்று கூறுகிறது.

இதே போன்று அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்க நிர்மாலயத் தொட்டி தஞ்சை பெரிய கோயிலில் சுப்ரமண்யர் கோயிலில் கருவறை அருகே உள்ளது.

விஜயநகர நாயக்கர் காலத்தில் கோமுகம் மேலும் அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்கதாக விளங்குகிறது. திருக்குறுங்குடி கோயிலில் யாளியின் வாயிலிருந்து நாளம் வெளியே வருவதாக அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்கதாக விளங்குகிறது.

மேலும் களக்காடு, அச்சுதமங்கலம், கூத்தப்பார், (திருச்சி அருகில்) போன்ற பல திருக்கோயில்களில் காணலாம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியக் கோயில்களிலும் கேரளத்துக் கோயில்களிலும் நேபாள் போன்ற வெளிநாடுகளிலும், திருக்கோயில்களில் "கோமுகம்" அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சித் தருவதைக் காணலாம்.

இதுமட்டுமல்லாமல் கோயில் மண்டபங்களின் மீது பெய்து வெளியேறும் மழைநீர் பூதகணங்களின் வாய் வழியே வந்து விழுமாறு கலை நுணுக்கத்துடன் அமைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய சிற்ப அமைப்பினை விழுப்புரம் அருகில் எசலாம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் பல திருக்கோயில்களிலும் கண்டு மகிழலாம்.

கோமுகத்தை நன்னாளில் நல்ல வேளையில் சிற்பியும், கோயிலில் பூஜை செய்பவரும் சேர்ந்து அமைத்தல் வேண்டும். நாளத்திற்கான அதிதேவதை வருணபகவான் ஆவார். எனவே வருண பகவானைப் போற்றித் துதித்து பின்னர் சாந்தும் வெல்ல நீரும் சேர்ந்து நாளத்தை உறுதியாக அமைத்தல் வேண்டும் என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன.

சிற்பி தன் திறமைக்கு ஏற்ப அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கோமுகத்தை அமைத்திருப்பதை பல திருக்கோயில்களில் காணலாம்.

திருக்கோயில்களில் காணப்படும் "கோமுகம்' என்ற பகுதி கோயிற் கலை ஆய்வாளர்களையும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களையும் பெரிதும் கவருகின்றன என்றால் மிகையில்லை.

தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com