எந்த எல்லைக்குமான உணர்வு!

"எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால்,
எந்த எல்லைக்குமான உணர்வு!

"எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்'' என்றார் வினோபா பாவே. உண்மை. தொடர்ந்து பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள். யாரைப் பிடிப்பது, யாரைக் கவிழ்ப்பது,  யாரை எங்கே வைப்பது, யாருக்கு என்ன செய்வது  என ஏகப்பட்ட புதிர்ப் பாதைகள் கொண்டதுதான் இங்கே உள்ள அரசியல். அலுவலகம் தொடங்கி ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் விரைவாக முன்னேறி, வசதி வாய்ப்புகளை அனுபவிப்பார்கள். செய்யத் தெரியாதவர்கள் அப்பாவிகளாக ஏமாளிகளாக பார்கள் என்பதுதான் இங்கே உள்ள பெரிய சமூக சிக்கல். இப்படிப் பார்த்து எழுதியதுதான் இந்தக் கதை.  சூழ்ச்சியையும் தந்திரமாக பிழைப்பதையும் சமார்த்தியம் என நினைக்கிற எல்லா மனிதர்களின் வாழ்க்கையும்தான் இந்தப் படம். நீங்களும், நானும் கூட இதில் கதாபாத்திரமாக உலவலாம்  நம்பிக்கையாக பேசுகிறார் இயக்குநர் பயஸ் ராஜ். மலையாளத்தில் குறிப்பிடும் படியான இடத்தில் இருப்பவர். இப்போது  'சிட்தி' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

தலைப்பே வசீகரமாக இருக்கிறது....

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாமும் இருந்துக் கொண்டே இருக்கிறது. கொஞ்ச சதவீதம் கூடிக் குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சியும் நடக்கிறது. 'சிட்தி' என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன் என்று பொருள் இருக்கிறது. இன்னொரு இடத்தில் வெற்றி புனைபவன் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட ஒருவனை காலம் கைக் கொள்ளும் நேரமும் வருகிறது. அந்த நேரம் வரும்போது, இங்கே இன்னும் மென்மையும், மனிதம் சார்ந்த அக்கறையும் அருகிப் போய் விடவில்லை என்பது புரியும். 

கதைக் களம் எப்படி பயணமாகும்...?

ஒரு கல்லூரி விடுதி என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவரும் இருக்கிறார். மாற்றப்படுகிறவரும் இருக்கிறார். எல்லா விடுதிகளிலும் யாரோ ஒருவர் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறார். யாரோ ஒரு மாணவருக்கு காதல் பூக்கிறது. ஒருவருக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவர் கலைஞனாகிறார். கவிதை எழுதுகிறார். அரசியல் கற்று உணர்கிறார். ஒருவர் குற்றவாளியாகிறார். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவர் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறார். வெகு நாள்களுக்கு பிறகு... கல்லூரி விடுதி என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், ஜாதியம் எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஒரு அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இன்றைய கல்லூரி விடுதிகளின் சூழல் சீர் கெட்டு கிடக்கிறது. தனியார் கல்லூரிகள் வட இந்திய இளைஞர்களை அதிகமாக சேர்த்து விடுகிறது. அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்களை நிர்வாகங்கள் கண்டிக்கத் தவறி விடுகிறது. அவர்களின் வாழ்க்கை சூழல் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர்களோடு நம் மாணவர்களால் பொருந்தி போக முடியவில்லை. அப்போது நடக்கிற சம்பவங்கள்தான் கதை. 

கல்வி கொள்கையை கேள்வி கேட்கிற படமா...?

எல்லாம் உண்டு.  விமர்சனங்களும்தான்.  குறிப்பாக தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது. குருஷேத்திர யுத்தமும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதை தருகிறீர்கள்... எதை பெறுகிறீர்கள்... என்பது அல்லவா முக்கியம். கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் அரசியல் என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாள்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்த கதையின் நீதி.

பரிச்சயமான முகங்கள் யாரும் இல்லையா...? 

நிறைய திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையை புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். அஜி ஜான், அக்ஷயா உதயகுமார், ஹரிதா விஜயன்,  ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன்,  சிஜீ லால், வேணு மரியாபுரம்,  சொப்னா பிள்ளை,  மதுவிருத்தி  இவர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான். ஆனால், பல வருடங்களாக சினிமாவில் சாதிக்க துடிக்கும் இதயங்கள். நல்ல அறிமுகத்துக்கு காத்திருந்தார்கள். தேடி வந்தார்கள். தகுதிகளும் இருந்தன. சில தெரிந்த முகங்களும் உண்டு. எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு. இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com