என்னதான் நடக்கிறது இலங்கையில்...

இலங்கை முழுவதும் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அதிபர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள காலி முகத்திடலில்
என்னதான் நடக்கிறது இலங்கையில்...

இலங்கை முழுவதும் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அதிபர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் சுமார் இரு வார காலமாக  மக்கள் போராடி வருகிறார்கள். போராட்டக்களத்திலேயே தங்கி, அங்கேயே உண்டு, உறங்கி கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது மக்கள் போராடி வருகிறார்கள்.

மக்கள் போராட்டம் ஏன்?

1970 -இல் நடந்த ஜேவிபி கிளர்ச்சி உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளால் இலங்கையில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் இலங்கையில் மாபெரும் உணவுத் தட்டுப்பாடும், அதைத் தொடர்ந்து மாபெரும் மக்கள் போராட்டமும் வெடித்துள்ளது.

கோத்தபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இலங்கையில் விலைவாசி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ரூ.1,470 க்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்  ரூ.2000 அதிகரித்து ரூ. 4,199 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 137-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.104 ஆக இருந்த டீசலின் விலை, ரூ.176 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் பால்மா (பால் பவுடர்) பாக்கெட்  ரூ.1945 -க்கு விற்பனையாகிறது. உணவகங்களில் பால் தேநீரின் விலை ரூ.100 ஆக  அதிகரித்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இலங்கையில் 17.5 சதவீதம் விலைவாசி நேரடியாக  அதிகரித்துள்ளது. மறைமுகமாக சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் பெற வரிசை, கேஸூக்கு வரிசை, உணவுப் பொருட்கள் வாங்க வரிசை என இலங்கை முழுவதும் வரிசை காணப்படுகிறது. இது போதாதென்று,  இலங்கையை விட்டு எப்படியாவது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக கடவுச் சீட்டு பெற கொழும்பில் உள்ள கடவுச் சீட்டு அலுவலகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். மக்கள் ஒன்றுபட்டு போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். இல்லை வரிசையில் நிற்கிறார்கள்.  

ஏன் விலைவாசி அதிகரித்து..?

இலங்கையில் பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு வரை உயர்ந்திருக்கின்றன. இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பேணுவதற்காக இலங்கை ரூபாயின் மதிப்பை இலங்கை மத்திய வங்கி சடுதியாக குறைத்தது. இதனால் ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200- இல் இருந்து330- ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால், நாட்டில் விலைவாசி வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

இறக்குமதிப் பொருள்களுக்கு அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்த வேண்டும். ஆனால், இவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைபட்டது. அத்தியாவசியப் பொருள்களுடன் இலங்கையின் துறைமுகங்களுக்கு வந்த கப்பல்கள், பொருள்கள் இறக்கப்படமல், மாதக் கணக்காக துறைமுகங்களில் காத்து நிற்கின்றன. இவ்வாறாக ஆயிரக்கணக்காக கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளன. 

எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பொருள்கள் உள்பட  அனைத்துப் பொருள்களின் விநியோகமும் தடைப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது இலங்கை அரசு. இதனால், இலங்கையில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரித்தன.

இலங்கையில் தொடங்கியது கொடிய மின் வெட்டு. சிங்களவர்கள், தமிழர்கள் என பாகுபாடு இல்லாது அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 7 1/2 மணி நேர மின்வெட்டு நீடிக்கிறது. இதனால், மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் முடங்கி ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். 

காலி முகத் திடல் போராட்டம்

இந்நிலையில், இலங்கை அதிபர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் மாபெரும் மக்கள் போராட்டம் நடக்கிறது. போராட்டக்களத்தில் மக்கள் தங்கும் வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்காலிக சமையல் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சமையல் வேலைகள் நடக்கின்றன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, மக்கள் காலி முகத்திடலில் தங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் நடைபெறும் பகுதிக்கு "கோ ஹோம் கோட்டா கிராமம்" என போராட்டக்காரர்கள் பெயரிட்டு போராடி வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களில் சிலர், 'தமிழ் இனப் படுகொலை' க்கு மன்னிப்பு கோருகிறோம் என எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி போராடி வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் மக்கள் நோன்பு துறக்க, சிங்கள , தமிழ் மக்கள் இணைந்து உணவு சமைக்கிறார்கள். 

இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியாளர்களாலும், சர்வதேச சக்திகளாலும் செய்ய முடியாத, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையேயான நல்லிணக்கத்தை கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு செய்துள்ளது என்கிறார்கள் இலங்கை மக்கள்.

அதாவது, வெவ்வேறு புள்ளிகளில் பிரிந்திருந்த இலங்கை வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற புள்ளியில் ஒன்று சேர்ந்து, நாடு முழுவதும் போராடி வருகிறார்கள்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் நடத்திய போராட்டத்தை அடக்கும் வகையில் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர். சிங்கள மக்களையே இவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தும் அரசு, தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கும் என இப்போது நினைத்துப் பார்க்க முடிகிறது என சிங்கள மக்கள் தமிழர்களின் உணர்வுகளை மதித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

சூடுபிடிக்கும் ஈஸ்டர் விவகாரம்

மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக, ராஜபக்ச கும்பல்தான் திட்டம் தீட்டி ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை,  நடத்தியது என இலங்கை மக்கள் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.

காலி முகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினல் மால்கம் ரஞ்சித்  'ஈஸ்டர் தாக்குதல்' தொடர்பாக சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது இப்போது புலனாகியுள்ளது. சதித்திட்டம் தீட்டி ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆனால், ஆட்சியை பாதுகாக்க முடியாது. ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்டதாரிகளுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது. கடவுளின் சாபமே இந்த மக்கள் எழுச்சி'' என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை அடையாளம் காணக்கோரி, கொழும்பில் நடந்த பேரணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தலைமை தாங்கினார். சனத் ஜெயசூரிய உள்ளிட்ட பிரபலங்கள் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

அடிப்படைவாதம் ஊறியிருந்த சில முஸ்லிம்களைப் பயன்படுத்தி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், முழு முஸ்லிம் சமூகமும் அவப் பெயரை சந்தித்தது. இந்த தாக்குதலை நடத்தியது சில அடிப்படைவாத முஸ்லிம்கள் என்றாலும், இந்த தாக்குதலின் பின்னால் மீண்டும் ஆட்சிக்கு வரும் ராஜபக்சக்களின் பெரிய சதித் திட்டம் இருந்தது அப்போதே வெளிப்படையாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த விவகாரத்தை மக்கள் தற்போது வெளிப்படையாகப்  பேசத் தொடங்கியுள்ளனர்.

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

இந்த சூழலில், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு  நீடித்தால், ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைவார்கள் என்று இலங்கை மருத்துவர்கள்  அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலை நீடித்தால், கரோனா பரவல், சுனாமி, 30 வருட போரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை விட,  மருத்துவ அவசர நிலையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்று தணியும் இந்தப் போராட்டம்!

நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல் ஆளாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டுள்ளார்.   இந்த தீர்மானத்துக்கு ஆதரவு வேண்டி கட்சி பேதமில்லாமல்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கையெழுத்து வேட்டையை நடத்தி வருகிறது ஐக்கிய மக்கள் சக்தி. 

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானமொன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் அரைவாசிப் பேரின் ஆதரவு தேவை. அதாவது 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  இந்த 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் சேர்த்து, இலங்கை அதிபருக்கு எதிரான குற்றப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது.   ஆனால், அதிபர் மீது குற்றப்பிரேரணை கொண்டுவர,  3 -இல் இரண்டு பெரும்பான்மை அவசியம். அதாவது 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
  
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், செல்வாக்குச் சரிவாலும் தத்தளிக்கும் இலங்கையை இன்னும் எத்தனை நாள்கள் அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசால் நடத்திச் செல்ல முடியும் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நிறையக் கடன் கொடுத்துவிட்ட சீனா, ராஜபட்ச குடும்பத்தினரின் அபயக்குரலுக்குச் செவி சாய்ப்பதாக இல்லை.

இந்தியாவின் தயவில் நிலைமையை சமாளித்துக் கொண்டு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்சவும், பிரதமர் மகிந்த ராஜபட்சவும் சர்வதேச அமைப்பு ஏதாவது தங்களுக்குக் கைகொடுக்காதா என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இலங்கை மக்களோ, 'ராஜபட்ச' குடும்பத்தினரின் ஆட்சியிலிருந்து விடிவுகாலம் பிறக்காதா என்கிற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com