ரத்தத்தின் ரத்தமே...

'அடார்' என்னும் போர்க்கருவியில் ஆரம்பித்து, 'பெருஞ்சவளம்' என்னும் போர்க்கருவி வரை நூற்றுக்கணக்கான போர்க்கருவிகளை
ரத்தத்தின் ரத்தமே...

'அடார்' என்னும் போர்க்கருவியில் ஆரம்பித்து, 'பெருஞ்சவளம்' என்னும் போர்க்கருவி வரை நூற்றுக்கணக்கான போர்க்கருவிகளை பண்டையத் தமிழர்கள் அந்தக் காலத்தில் போரில் பயன்படுத்தினார்கள். சங்ககாலத் தமிழர்கள் பெரும்பாலும் போர்க்கருவிகளை, இரும்பை உபயோகித்தே தயாரித்துக் கொண்டனர். தொல்காப்பிய காலம் முதலே, தமிழர்கள் மூன்று போர்க்கருவிகளை முக்கியமாக எல்லாப் போரிலும் உபயோகித்து வந்துள்ளனர்.  அவை வாள், வில், வேல் ஆகிய மூன்றாகும். இந்த மூன்றும் தான் தமிழர்களின் முக்கியமான மூன்று ஆயுதங்கள் ஆகும். 

'மட்டுவு' என்ற பெயரில் ஒரு போர்க்கருவி பழங்காலத்தில் நம்மிடையே உபயோகத்தில் இருந்தது. தமிழர்களின் போர்க் கருவிகளில் தலைசிறந்து விளங்கிய போர்க்கருவி இது. சுழலும் வாள் நிறைய அடங்கிய ஒரு போர்க்கருவியின் பெயர் 'உருமி' ஆகும்.  சுமார் ஆறு அடி நீளம் கொண்ட இந்த போர்க்கருவி உடலின் வலிமையான பெரிய தசைகளைக் கூட பாளம் பாளமாகக் கிழித்துவிடும் சக்தி கொண்டது. பல முனைகளிலிருந்து வரும் தாக்குதல்களை, இந்த உருமியை கையில் வைத்துக்கொண்டு சுழற்றுவதன் மூலம், எல்லோரையும் மிகச்சுலபமாக சமாளித்துவிடலாம். 

மற்ற போர்க்கருவிகளை யெல்லாம் விட, மிகப் பழைமை வாய்ந்தது 'வேல்' ஆயுதம் ஆகும். பண்டைய வரலாறுகளும் இதைத்தான் சொல்லுகின்றன.

சோழர் காலத்தில் பிரபல மன்னனாகிய ராஐராஐ சோழன், போர்க்களத்தில் தான் உபயோகித்த வாளை சுமார் 5 பேர் சேர்ந்துதான் தூக்கிக் கொடுக்கணுமாம். அந்த அளவுக்குக் கனமான முப்பது கிலோ எடையுள்ள வாளை ராஐராஐ சோழன் உபயோகித்து,  பல வெற்றிகளை அடைந்தார்.

அந்தக் காலத்தில், உலகின் எந்த ஒரு மூலையில் போர் நடந்தாலும், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பரவலாக போரில் பயன்படுத்தப்படும் யானை, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளுக்கும் நிறைய பாதிப்பு    ஏற்பட்டது. போர் மரணங்களும் நிறைய நடந்திருக்கின்றன. மனிதர்களைப் பொறுத்தவரை, போரின்போது வீரர்களுக்கு காயங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுவதுண்டு. 

பண்டைய காலப் போர்களில், மனிதர்களுக்கு காயங்கள் அதிகமாக நேரடியாகத்தான் நடந்திருக்கின்றன. ஆனால், இன்றைய காலப் போர்களில், ரசாயன ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் என்று அழைக்கப்படும் மறைமுக ஆயுதங்களால் மறைமுக காயங்கள் தான் அதிகமாக ஏற்படுகின்றன. காயங்கள் இல்லாத போர் ஜெயித்ததாக வரலாறு இல்லை.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், போரைவிட, விபத்துகளினால் தான் உயிர்ச்சேதங்களும், பலத்த காயங்களும் அதிகமாக ஏற்படுகின்றன. விபத்துக்களினால் ஏற்படும் காயங்களில், பெரும்பாலும் அதிக ரத்த இழப்புதான் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. பழங்காலப் போர்களிலும் சரி, இன்றைய கால விபத்துக்களிலும் சரி, ரத்த இழப்பை உடனடியாக சமாளிப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது.

நவீன கால மருத்துவர்களுக்கு, எந்தவிதமான ரத்த இழப்பையும் சரி பண்ணுவது எப்படி என்று மிக நன்றாகத் தெரியும். அதற்கேற்ற தொழில் நுட்ப வசதிகளும், கருவிகளும் இப்பொழுது இருக்கின்றன. ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? ரத்த இழப்பை நிறுத்த இன்று உள்ள மருத்துவர்கள் உபயோகிக்கும் முறைகளெல்லாமே, நூறாண்டுகள், ஏன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் உபயோகித்த முறைகள்தான். இந்த பழைய முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, இன்றைய காலத்திற்கேற்ப, ரத்த இழப்பை நிறுத்த உபயோகப்படுத்தும் கருவிகள், உபகரணங்கள் முதலியன மாறிக் கொண்டே வருகின்றன. கருவிகள் மாறிக்கொண்டே வந்தாலும், கடைப்பிடிக்கும் முறை மட்டும் அதேதான் இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

விபத்தினால் காயமடைந்த ஒருவர் டாக்டரிடம் முதலுதவி சிகிச்சைக்கு வந்தாலே, டாக்டர்கள் அதிகமாக முதலில் கவனிப்பதும், கவலைப்படுவதும் நோயாளியின் ரத்த இழப்பு அதிகமாக இருக்குமா, குறைவாக இருக்குமா என்பதுதான். மிகச்சிறிய காயங்கள். ஒருவருக்கு உடலில் ஏற்பட்டால், வீட்டில் சுலபமாகக் கிடைக்கும் காபிதூள்,  டீ தூள், மஞ்சள்தூள், இன்னும் சில கைக்குக் கிடைத்த பொருட்களையெல்லாம் ரத்தம் வடியும் இடத்தில் நிறைய வைத்து, நன்றாக அமுக்கி, வீட்டிலேயே ரத்தக்கசிவை நிறுத்திவிடுவார்கள். சிலர் ஐஸ் கட்டி ஒத்தடம், துணியை வைத்து இறுக்கமாக கட்டுவது போன்றவற்றை செய்து ரத்தக்கசிவை நிறுத்திவிடுவார்கள். 

கிராமங்களிலும், மலையடிவாரங்களிலும் வசிக்கும் மக்கள், குறிப்பிட்ட மூலிகை இலைச்சாறுகளை காயத்தின் மேல் பிழிந்துவிட்டு, இலைகளை வைத்து கட்டுகட்டி ரத்தக்கசிவை நிறுத்திவிடுவார்கள். வீட்டு வைத்தியங்கள் உலகின் பல இடங்களிலும், பல மாதிரியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. காயம்பட்ட எல்லோருமே டாக்டரிடம் ஓடி வருவதில்லை.

ஆனால், பெரிய காயம், ரத்தத்தை நிறுத்த முடியாத காயம் என்று தெரிந்தால், உடனே டாக்டரிடம் வருவதுதான் நல்லது. உடலிலுள்ள மொத்த ரத்தத்தில், சுமார் 20 சதவீத ரத்தம், உடலைவிட்டு வெளியாகிவிட்டாலே, உங்களது உடலில் ரத்தக் கசிவு அதிர்ச்சி ஏற்பட்டு,  மிகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு போய் விட்டுவிடும். 

இதனால் இருதயம் துடிப்பது குறைவாகிவிடும். இருதயம் துடிப்பது குறைவானால், உடலுக்குள் ரத்த ஓட்ட சுழற்சி குறைய ஆரம்பித்துவிடும். இதற்கடுத்து, ரத்த அழுத்த அளவு சரிய ஆரம்பித்துவிடும். இதற்கடுத்து, உடலின் உஷ்ணநிலை அளவு குறைய ஆரம்பித்து, உடல் 'சில்லென்று' ஆகிவிடும். உடலிலுள்ள மொத்த ரத்தத்தில் சுமார் 20 சதவீத ரத்த இழப்புக்கே இந்தக் கதி என்றால், 40 சதவீத ரத்த இழப்பு ஏற்பட்டால்,  என்னாகும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். 40 சதவீத இழப்பு ஏற்பட்டால், மூளை முதற்கொண்டு உடலிலுள்ள முக்கிய உறுப்புகள் எல்லாமே, செயல் இழந்து உயிர் போய்விட நேரிடும். ஆதனால் ரத்தம் தானே வடிகிறது, அதுவாகவே நின்றுவிடும் என்று மெத்தனமாக இருக்கக்கூடாது.

அந்தக்காலத்தில்,  காயத்திலிருந்து வடியும் ரத்தத்தை நிறுத்த, 'காட்டரைúஸஷன்' அதாவது  'தீய்த்தல்' என்ற முறையை உலகிலுள்ள எல்லா மக்களும் கடைப்பிடித்து வந்தனர். 

இந்த முறையில் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடியும் இடத்தில், தீயை நேரடியாக உபயோகிக்காமல், தீச்சூட்டை வைத்து காயம்பட்ட இடத்திலுள்ள திசுக்களை தீய்த்துவிடுவது ஆகும். ஒரு காயத்தை தீய்க்க வேண்டுமென்றால், ஒரு உலோகக் கம்பியை நெருப்பில் காட்டி நன்றாக சூடாக்கி காயத்தின் மீது வைக்கப்படும். அப்படி வைக்கும் போது, அந்த அதிகமான சூட்டில் திசுக்கள் தீய்ந்து மூடி காயத்திலிருந்து வெளியே வரும் ரத்தம் உறைந்துபோய்விடும். உடனே ரத்தம் வரும் வழியை அடைத்துவிடும்.

இந்தமாதிரி சூடான கம்பியை காயத்தின்மீது வைத்து ரத்தக்குழாயை மூடுவது என்பது மிகமிக பயங்கரமான வலியை உண்டுபண்ணக்கூடிய ஒரு விஷயமாகும். இப்படிச் செய்வதால், ரத்தம் வடிவது நின்றுவிடும். ஆனால் சூடுவைத்த அந்த இடமும் புண்ணாகிவிடலாம். பட்ட காலிலேயே படும் என்பது போல, ஏற்கெனவே ஏற்பட்ட காயத்தைக் குணப்படுத்தப் போய், அதன் மேலேயே இன்னொரு புண் உண்டாகிவிடும். ஆனால் அந்தக் காலத்தை சற்று யோசித்துப் பாருங்கள். காட்டிலோ, மேட்டிலோ, காயம் ஏற்பட்ட இடத்திலோ, போர்க்களத் திலோ, உடனடியாக ரத்தத்தை நிறுத்த இந்த முறையைத் தான் செய்ய முடியும். அந்தக் காலத்தில் நடுக்காட்டில் வேறென்ன கிடைக்கும்? அதோடு, இந்த தீய்த்தல் முறையில் புண் பெரிதாகி, சீழ் வைத்து, ஆறாத புண்ணாக ஆகிவிடும் வாய்ப்பே ஏற்படாது. ஏனெனில் தீச்சூட்டை உபயோகித்து காயம் பட்ட இடத்தை மூடும்போது, நோய்க் கிருமி கள் எதுவும் தீச்சூட்டை மீறி அந்த இடத்தில் உட்கார்ந்து புண்ணை உண்டாக்க வாய்ப்பே இல்லை.

அந்தக் காலத்தில்  விபத்துக்கள் ஏற்பட்டு அதனால்  காயங்கள் ஏற்படுவது, ரத்த இழப்பு ஏற்படுவது என்பதெல்லாம் மிகமிக அரிது. ஆனால் இந்தக் காலத்தில், வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. வீட்டை விட்டு வெளியே வந்தாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தக் காலத்தில் பெரிய காயங்களுக்கு தீய்த்தல் அதாவது காட்டரைúஸஷன் முறையை செய்வதில்லை. மிகச்சிறிய காயங்களுக்கும், அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் ரத்த இழப்பையும் நிறுத்த, உடலுக்கு தீங்கு விளைவிக்காத, மிகமிகக் குறைவான அளவு மின்சாரத்தை உபயோகித்து 'மின் தீய்த்தல்' பண்ணும்முறை இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது.

காலத்திற்கேற்ப ரத்த இழப்பை நிறுத்த உபயோகப்படுத்தும் தீச்சட்டி மற்றும் உலோகக் கம்பிகள் மற்றும் சில கருவிகள், உபகரணங்கள் முதலியன மாறிக் கொண்டே வந்தாலும், செய்யும் முறை மட்டும் மாறவில்லை. அதேதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது உபயோகப்படுத்தும் முறைக்குப் பெயர் மின்தீய்த்தல் அதாவது  'எலெக்டிரிக் காட்டரைúஸஷன்' என்று கூறலாம். 

இந்த முறையில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, உடலுக்குள் மின்சாரம் பாயாத மிகமிகச் சிறிய அளவு மின்சாரத்தை உபயோகித்து, காயம் பட்ட இடத்திலோ அல்லது அறுவை சிகிச்சை செய்யுமிடத்திலுள்ள ரத்தக் குழாயிலோ உள்ள திசுக்களை சூடாக்கி, அந்த சூடுதான் உங்களுக்கு காயம்பட்ட இடத்துக்குப் போகிறது. இந்த சூடு தான் திறந்திருக்கும் ரத்தக் குழாயை மூடுகிறது. அதனால் ரத்தம் வடிவது நின்றுவிடுகிறது.

பழங்காலத்தில் இன்னொரு முறையும் ரத்த இழப்பை நிறுத்த உபயோகப்படுத்தப்பட்டது. அதாவது 'கட்டுகட்டுதல்' என்ற முறை ஆகும். இந்த முறையில் ஒரு பலமான நூல் கயிற்றையோ அல்லது மெல்லிய இரும்பு கம்பியையோ, ரத்தம் கசியும் ரத்தக்குழாயைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிவிட்டால், அது வெளியே வரும் ரத்தத்தை நிறுத்திவிடும். கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ், பிரபல மருத்துவர் கேலன் போன்றோர்கள்  இந்த முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். 

பிரான்ஸ்,  நாட்டைச் சேர்ந்த ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர்  'ஆம்ப்ரோய்ஸ் பெரே' என்பவர், 16 -ஆம் நூற்றாண்டில் மறந்துபோன இதே 'கட்டுகட்டுதல்' முறையை புதுப்பித்து மாற்றம் செய்து, மறுபடியும் உபயோகிக்க ஆரம்பித்தார். காயம் ஏற்பட்ட இடத்திலுள்ள ரத்தக்குழாய்களை கட்டுகட்டுதல் முறையில் இறுக்கி சுருக்குவதால், அந்த இடத்திலுள்ள ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட் அணுக்கள் சில நொடிகளில் கொத்துக் கொத்தாக சேர்ந்து, ஒரு அடைப்பான் போல அடைத்துக் கொண்டு, ரத்தம் வெளியே வரவிடாமல் தடுத்துவிடும். மேலும் உடலின் இயற்கையான செயலாகிய  ‘ஹீமோஸ்டேஸிஸ்' அதாவது ரத்தத் தேக்கம், ரத்தம் வடிவதை நிறுத்தும். காயம் ஏற்பட்ட இடத்தை சரிசெய்துவிடும்.

வெளிக்காயத்திலிருந்து வடியும் ரத்தத்தை நிறுத்த மிகச்சிறந்த வழி முதலில் சுத்தமான இரண்டு கைகளாலும்,  காயம் ஏற்பட்ட இடத்துக்கு மிக அதிகமான மிகப் பலத்த அழுத்தம் கொடுப்பதுதான். இதுதான் முதலுதவி. இதுதான் ரத்தத்தை நிறுத்த, மிகச் சிறந்த வழியும் கூட. இதற்கும் கட்டுப்படாமல் அதிகமாக ரத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால், முதலில் மின்தீய்த்தல் முறை, அடுத்து கட்டு போடுதல் முறையை செய்து பார்க்கலாம். அதற்கும் நிற்கவில்லையென்றால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்வது தான் சிறந்தது.
- தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com