கருணாஸ் நடிக்கும் ஆதார்
By | Published On : 24th April 2022 05:17 PM | Last Updated : 24th April 2022 05:17 PM | அ+அ அ- |

கருணாஸ், இனியா, ரித்விகா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் "ஆதார்'. கதை எழுதி ராம்நாத் இயக்குகிறார். இப்படத்தின் இசையை சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இந்த விழாவில் கருணாஸ் பேசும் போது.....
"" ராம்நாத்தின் "ஆதார்' கதையை கேட்டு, அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. அமீர் இயக்கத்தில் உருவான "ராம்' படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தமானேன். இதற்காக சென்னை துறைமுகம் வரை சென்று போட்டோசூட்டிலும் கலந்து கொண்டேன். சில விஷயங்களால் அது நடக்கவில்லை. அந்த வாய்ப்பு என்னைப்போன்ற மற்றொரு எளிய மனிதனுக்கு கிடைத்தது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.
இந்தப் படத்தில் பாரதிராஜா நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இந்த தருணத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. "ஒரு நல்ல சினிமா தனக்கான தொழில்நுட்பக் கலைஞர்களையும், தனக்கான நடிகர்களையும் தானே தேடிக்கொள்ளும்' என்பார். அது இந்தப் படத்தில் முழுமையாக நிறைவேறியது. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனத்தை முன் வைப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பதிலளிப்பதை விட நடப்பதை எதிர்கொள்ள வேண்டும்.
எனக்கு இருந்த சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் இந்த சினிமாதான் நிறைவேற்றியது. அதனால் தற்போது எனக்கு யார் மீதும் பொறாமையோ.. மனவருத்தமோ கிடையாது. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களும் லாபங்களும் தோல்விகளும் சந்தித்தாலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அதனை அளவுகடந்து நேசித்தேன். நேசித்தும் வருகிறேன். "சேது' படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அந்த படம் வெளிவருவதற்கு நான் கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தப்படத்தின் வெளியீட்டுக்காக உழைத்ததால், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது'' என்றார் கருணாஸ்.