ரத்தத்தின் ரத்தமே... - 63

ஒரு விலங்கு இன்னொரு விலங்கை கடித்துக்கொண்டு சண்டை போட்டுக் கொள்வது என்பது காடுகளில் மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு செயல் ஆகும். அந்த சண்டை இரை விரோதமாக இருக்கலாம்.
ரத்தத்தின் ரத்தமே... - 63

ஒரு விலங்கு இன்னொரு விலங்கை கடித்துக்கொண்டு சண்டை போட்டுக் கொள்வது என்பது காடுகளில் மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு செயல் ஆகும். அந்த சண்டை இரை விரோதமாக இருக்கலாம். இன விரோதமாக இருக்கலாம். பசி விரோதமாக இருக்கலாம். பாலுணர்வு விரோதமாக இருக்கலாம்.

ஒரு மனிதனை விலங்குகள் கடிப்பது என்பதும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய செயல்தான். எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன், ஒரு விலங்கை அதிகபட்சமாக துன்புறுத்துகிறானோ, அப்பொழுதெல்லாம், அந்த விலங்கு தனது சினத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மனிதனைக் கடித்துவிடுகிறது. சித்திரவதைகள் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் சில விலங்குகளுக்கு மனிதன் கொடுத்தாலும், பொறுத்துக்கொண்டு இருப்பதும் உண்டு. அதே சமயம், சாது மிரண்டால் காடு தாங்காது என்ற சொல்லுக்கேற்ப, ஒரு நாள் அந்த விலங்கு வெகுண்டு எழுந்து, அந்த மனிதனை கண்டம் துண்டமாக கடித்துப் போட்டுவிடுவதும் உண்டு. ஆனால் மனிதனை, மனிதன் கடிப்பதை கேட்டிருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா?
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், எம்.பி.பி.எஸ். மாணவனாக நான் இருந்த காலத்தில், ஒரு நாள் நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர், காது ஓரத்தில் ரத்தம் வடிய வடிய, அவசரமாக எமர்ஜென்ஸி அறைக்கு ஓடி வந்தார். அப்போதிருந்த டூட்டி டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டார். ரத்தம் வடிய வலியால் துடித்துக் கொண்டிருந்த அந்த நபர்  "ஒரு கோட்டிக்காரன் என் காதைக் கடித்துவிட்டான் டாக்டர்' என்று சொன்னார். கோட்டிக்காரன் என்றால் யாரென்று டாக்டருக்குத் தெரியவில்லை. சுற்றி இருந்தவர்களுக்கும் புரியவில்லை. உடனே நான் குறுக்கிட்டு, "கோட்டிக்காரன் என்றால் நெல்லை மாவட்டத்து பாஷையில் மனநிலை சரியில்லாதவன் என்று அர்த்தம் என சொன்னேன். அந்த மனநிலை சரியில்லாதவனுக்கும்  இவருக்கும் ரோட்டில் ஏதோ பிரச்னை. இவர் காதை அவன் கடித்துவிட்டான். நடந்தது இதுதான்.
விலங்குகள் தான், அதிகமாக தான் பெற்ற குட்டிகளைக் கடித்து விளையாடும். டிவியிலோ, நேரடியாகவோ நாம் அதைப் பார்க்கும்போது,  "அய்யோ, இந்தப் பிஞ்சுக்குட்டியை, அது பெத்த குட்டியை அது எப்படி கடிக்குது பாருங்கள், கொஞ்சம் கூட பாசம் இல்லாத விலங்கு இது என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விலங்கு இன்னொரு விலங்கை பகையாளியாக நினைத்து சண்டை போடும்போது நடக்கும் கடி கொடூரமானது, ஆபத்தானது, உடலில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் அதே விலங்கு தன் குட்டியைக் கடித்து தூக்கும்போதோ, விளையாடும்போதோ, ஏற்படும் கடி மிகமிக மென்மையானது. இந்தப் பாசக்கடியில், குட்டிகளின் உடலில் ஒரு சதவீதம் கூட சேதம் ஏற்படாது.
மனிதர்களும் தங்கள் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும்போது, செல்லக் கடி கடிப்பார்கள். இந்த செல்லக்கடி எந்தத் தீங்கையும் குழந்தைகளுக்கு உண்டு பண்ணாது. ஆனால் சண்டை சச்சரவு நேரத்திலோ, மிகமிகக் கோபமான, மிகமிக ஆத்திரமான நேரத்திலோ, பழிவாங்கும் நோக்கோடு ஒருவருக்கொருவர் கடித்துக்கொள்ளும் கடியானது, விஷமானது, ஆபத்தானது, தீங்கானது. 
மனநிலை சரியில்லாத சிலர் மற்றவர்களைக் கடித்துவிடுவதுண்டு. முன் விரோதத்தில் சண்டை போடும்போது தப்பிக்க முடியாத நிலை ஏற்படும்போது, சிலர் கடித்துவிடுவதுண்டு. பல நேரங்களில், பலம் இல்லாத ஒரு கோழையை, பலசாலி ஒருவன் பயங்கரமாக தாக்கும்போது, அந்தக் கோழை எதிர்த்துப் போராட துணிச்சல் இல்லாமல், கடைசியாக தான் வைத்திருக்கும் ஒரே ஒரு ஆயுதமான கடிப்பதை உபயோகித்து,  அந்தப் பலசாலியிடமிருந்து தப்பித்துவிடுவதும் உண்டு. 
விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதைவிட, மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடித்துக் கொள்வது என்பது மிகமிக ஆபத்தானது. மனிதக் கடியில் கூட, தோல் கிழியாமல் கடிக்கும் கடி, தோல் கிழியும்படி கடிக்கும்கடி என்று இரண்டு வகை இருக்கிறது. தோல் கிழியாமல் கடிக்கும் கடி ஆபத்தை ஏற்படுத்தாது. நாய் என்னைக் கடித்து விட்டது என்று ஒருவர் சொன்னால், உடனே நாம் கடித்த இடத்தில் பல் பதிந்திருக்கிறதா, பல் பதியவில்லையா, தோல் கிழிந்திருக்கிறதா, தோல் கிழியவில்லையா என்றுதான் முதலில் பார்ப்போம். பல் பதிந்திருக்கிறது என்றால், நமது உடலில் நாய் கடித்த இடத்தில், நாயின் பற்கள் உள்ளே பதிந்து தோலைக் கிழித்து, நாயின் வாயிலுள்ள எச்சில், நமது உடலுக்குள்ளே கிழிந்த தோலின் ஓட்டை வழியாக உள்ளே போய்விடும். பல் பதியவில்லை என்றால், தோல் கிழிந்திருக்க வாய்ப்பில்லை. 
அதனால் கொடுமையான, ஆபத்தான நோய்க்கிருமிகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று 
அர்த்தம்.
விலங்குகள் கடிப்பதைவிட, மனிதனை மனிதனே கடித்துக் கொள்வது என்பது மிகமிக ஆபத்தானது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். 1)  நாம் "அமுதம்' என்று சொல்லிக் கொண்டிருக்கும் மனிதனின் வாயில் சுரக்கும் எச்சில் திரவத்தில் இருக்கும் கெட்ட வைரஸ் கெட்ட பேக்டீரியா, இன்னும் இன்னும் சொல்ல முடியாத கெட்ட உயிர்க்கொல்லி விஷக் கிருமிகள் எல்லாம் கடிபட்டவரின் உடலுக்குள் சென்றுவிடும். 2) தோல் கிழிந்து ஏற்படும் கடிகள் எல்லாம் நோய்த் தொற்றாகிவிடும், ரணமாகிவிடும், பின்னர் புண்ணாகிவிடும்.
மனிதனின் வாயில் சுமார் 10 கோடி பலவித கிருமிகள் எப்பொழுதும் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சுமார் 190 வகை கிருமிகள் இருக்கிறதாம். இப்பொழுது சொல்லுங்கள்  - பன்னீரையே எந்நேரமும் கொப்பளித்தாலும், வாய் நூறு சதவீதம் கிருமிகள் அற்றது என்று சொல்ல முடியுமா வாயையும், பற்களையும் காலை, மாலை இரு வேளையும் உப்பு கலந்த வெந்நீரில் தினமும் கொப்பளிக்க வேண்டும் என்று சொல்லுவதன் காரணம் இதுதான். அதனால்தான் கரோனா தொற்று வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பே, பல் மருத்துவர்கள், முகத்தில் மாஸ்க் அணியாமல், நோயாளியை பார்ப்பதில்லை.
பெரும்பாலான கடிகள் கைகளில் தான் ஏற்படுகின்றன. இந்தக் கடி தொற்றுநோயாக மாறிவிட்டால், சில சமயங்களில் கை மூட்டுகளுக்கு நோய் பரவி, கையே ஒன்றுக்கும் உதவாதது ஆகிவிடும். 1)  வாயில் இருக்கும் "ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோஸஸ்' என்கிற பேக்டீரியாக் கிருமி மிகவும் பொல்லாதது. தொண்டை கட்டிக் கொண்டு, பேச, விழுங்க முடியாமல் ஏற்படுவதிலிருந்து, நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோய் வரை, எல்லாமே இந்த வகைக் கிருமிகள் ஏற்படுத்துவதுதான். 2) ஹெப்படைட்டிஸ் "பி' மற்றும் "சி' வைரஸ் கிருமிகள். இந்த இரண்டு வைரஸ் கிருமிகளில் மனிதன் கடிப்பது மூலம் அதிகமாக பரவுவது ஹெப்படைட்டிஸ் "பி' வைரஸ்தான். இரண்டுமே கல்லீரலைப் பாதிக்கக்கூடியது. 3) ர்ஐஏ வைரஸ் கிருமி அதாவது எய்ட்ஸ் நோய்க்கிருமி. எச்சில் மூலமாக எய்ட்ஸ் நோய்க்கிருமி பரவாது என்று சொல்வதுண்டு. மனிதக் கடி மூலம் இது பரவ வாய்ப்பே இல்லை என்றாலும், வெகு அரிதாக இது பரவ வாய்ப்புண்டு. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மகன், சண்டையின்போது தனது தந்தையின் கட்டை விரலைக் கடித்ததில், தந்தைக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது என்று ஒரு பதிவு இருக்கிறது. 4) இதுபோக, பலவிதமான நோய்களை உண்டாக்கும் எத்தனையோ கிருமிகள் வாயில் இருப்பதால் இ கடிக்கும்போது அவைகள், இன்னொருவர் உடலுக்குள் புகுந்து தீவிரமாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
இரண்டு பேருக்கிடையில் ஏற்படும் வெறித்தனமான சண்டையின் போது, ஒருவர் தொடையை இன்னொருவர் பலமாகக் கடித்துவிட்டார் என்றால்,  அந்த மனிதக் கடியை விஷக்கடியாக முடிவு செய்து, உடனடி முதலுதவி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு போக வேண்டுமே தவிர,   அவன் என் பங்காளிதான், என் தம்பிதான், அவன் மனிதன் தான், மிருகம் இல்லை, அதனால் அவன் கடித்ததைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடாதீர்கள்.
மனிதனால் உண்டான கடியை எப்படி அணுகுவது? முதலில் கடிபட்ட இடத்திலிருந்து வடியும் ரத்தத்தை நிறுத்துங்கள். சோப்பையும் மிதமான சுடுநீரையும் வைத்து காயத்தை நன்றாகக் கழுவுங்கள். ஒரு சுத்தமான, மெல்லிய பேண்டேஜ் துணியை வைத்து நன்றாக காயத்தைச் சுற்றிக் கட்டுங்கள். மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள். மனிதக் கடியினாலும் மிருகக் கடியினாலும்  பரிமாறப்படுவது பெரும்பாலும் டெட்டனஸ் நோய்க்கிருமிதான். (க்ளாஸ்ட்ரீடியம் டெட்டனி). மனிதனை மிருகம் கடித்தாலும் சரி,  மனிதனை மனிதன் கடித்தாலும் சரி, காயம் பட்ட இடத்திலிருந்து கெட்ட நோய்க் கிருமிகளை உடலெங்கும் கொண்டு சென்று பரப்புவது ரத்தம்தான். 
தசைகளை கடினமாக இறுகச் செய்யும் ஜன்னி நோய்க்கிருமி, கடிபட்ட இடத்தின் வழியாக உடலுக்குள் நுழைந்துவிட வாய்ப்புண்டு. ஆதலால், கடிபட்ட 24 மணி நேரத்திற்குள், ஒரு ஜன்னி தடுப்பூசி (டெட்டனஸ் தடுப்பூசி) மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளுங்கள். அநேக மனிதக் கடிகள் இ புண் ஆகாமல், ரணம் ஆகாமல் சீக்கிரமாக தானாகவே ஆறிவிடுவதுண்டு. சில மனிதக் கடிகள் கடித்த இடத்தில் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து, சேதமடைந்த திசுக்களை ஒழுங்குபண்ணி தேவைப்பட்டால் தையல் போட்டு குணப்
படுத்துவதும் உண்டு. சில நேரங்களில்,  மனிதக் கடியால் ஏற்பட்ட ரணங்களில் கெட்ட பேக்டீரியாக் கிருமிகள் நிறைய இருக்கலாம். ரணம் சிறியதாக இருந்தாலும், நோய்த் தொற்று பெரிதாகிஇ புண்ணாகி, சீழாகி, கடைசியில் ஆறாப்புண்ணாக ஆகிவிட வாய்ப்புண்டு.
ஒரு ஆக்ரோஷமான, பலமான ஒரு மனிதனின் கடியின் அழுத்த வேகம் சுமார் 150 பவுண்டு  சதுர அங்குலம் என்று சொல்வார்கள். இந்தக் கடியின் அழுத்த வேகத்தை டளு1 என்ற அளவுகளில் சொல்வதுண்டு. ஒரு சிங்கத்தின் கடி சுமார் 650 பவுண்டு அழுத்தம். ஒரு புலியின் கடி சுமார் 1,150 பவுண்டு அழுத்தம். கொரில்லாக் குரங்கின் கடி சுமார் 1,300 பவுண்டு அழுத்தமாகும். ஒரு நீர் யானையின் கடி சுமார் 1,800 பவுண்டு அழுத்தமாகும். 
உலகிலுள்ள மிருகங்களிலேயே மிக அழுத்தமான கடி அழுத்த வேகம் கொண்ட மிருகம் எது தெரியுமா? முதலைதான். முதலையின் கடி சுமார் 3,700 பவுண்டு அழுத்தமாம். மாமிசத்தை தின்று வாழும் சிங்கம், புலியை விட தாவரங்களை மட்டுமே தின்று வாழும் கொரில்லாக் குரங்குகளின் கடிக்கு அதிக பலம் இருக்
கிறது. 
மனிதன் கடித்தாலும் சரி, விலங்குகள் கடித்தாலும் சரி, உடனடியாக முதலுதவியை மருத்துவமனையில் செய்துகொள்வது ரொம்ப நல்லது. இந்தக் கட்டுரையை படித்ததுமே எல்லோருக்கும், நம் வாயில் இவ்வளவு விஷக்கிருமிகள் இருக்கிறதா என்ற பயம் கண்டிப்பாக வரும். பயப்படாதீர்கள். நீங்கள் யாரையும் கடிக்கப் போவதில்லை. உங்களையும் யாரும் கடிக்கப் போவதில்லை. எப்பொழுதும், வாயையும் பற்களையும் உப்புநீர் கொண்டு அடிக்கடி கொப்பளித்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். யாருடனும் கடித்து விளையாடாதீர்கள்.

- தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com