நறுமணம் வீசும் மலர் வழிபாடு!

திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனுக்கு நமது நன்றியை அன்பை வெளிப்படுத்துவதற்கு அபிஷேக வழிபாடு மலர் அர்ச்சனை ஆகியவற்றை
நறுமணம் வீசும் மலர் வழிபாடு!

திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனுக்கு நமது நன்றியை அன்பை வெளிப்படுத்துவதற்கு அபிஷேக வழிபாடு மலர் அர்ச்சனை ஆகியவற்றை மனம் குளிரச் செய்து வழிபடுகிறோம்.

இறைவனுடைய அருளைப் பெறுவதற்குத் பூவும் நீரும் எளிமையான வழியாகும் என இறை அருள் பெற்ற அருளாளர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

மலரடி

இறைவனுடைய திருவடிகளை  "மலரடி' என்று போற்றுவதைக் காண்கிறோம். இறுதி நாள் வரும் முன்பு பூக்களைத் தலையில் சுமந்து கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும் என ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தில் "பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாளுஞ் செவி கேட்ப நா நாளும் நவின்றேத்த பெறலாமே நல்வினையே' எனப் போற்றுகின்றார்.

பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து, மலர் கொய்து, இறைவன் வழிபாட்டிற்கு அளிப்பதும் அவனது அருள் பெற உடலால் செய்யக்கூடிய நன்மை என அப்பர் பெருமான் தனது பாடலில் குறிப்பிடுகிறார்.

"எளிய நல்தீபமிடல் மலர் கொய்தல் தளிதொழில் செய்வது தான் தாசமார்க்கமே' என திருமந்திரம் மலர் வாய்ப்பாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறது.

இறை வழிபாட்டிற்கு பூக்களைப் பறிப்பதற்கும், வழிபாட்டுக்கும் உரிய விதிமுறைகளை விரிவாக தருமை ஆதீனம் வெளியிட்டுள்ள "புட்ப விதி' என்ற நூலில் காணலாம்.

அருளாளர்கள்

மலர் வழிபாட்டினால் புகழ் பெற்ற அருளாளர்களாக சுந்தரபெருமாள், எறிபத்த நாயனார், முருக நாயனார், சாக்கிய நாயனார், கழற்சிங்கர், செருத்துணை நாயனார், ஆண்டாள், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருக்கச்சி நம்பிகள் போன்றவர்கள் விளங்குகின்றனர்.

மலர்கள்

இத்தகையச் சிறப்பு வாய்ந்த மலர் வழிபாட்டினை திருக்கோயில்களில் சிறப்புற நடைபெற பண்டைய மன்னர்கள் தானமளித்த செய்தி கல்வெட்டுகளில் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. தும்பை, தாமரை, செங்கழுநீர், இருவாட்சி, முல்லை, மல்லிகை, செண்பகம் போன்ற பல்வகை மலர்கள் இறைவன் வழிபாட்டிற்கு அளிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

திருச்செங்காட்டங்குடி கோயில் சிவப்பு அல்லி மலர்கள் அளிக்கப்பட்டது. நல்லூர் கோயிலில் இறைவனுக்கு செங்கழுநீர் மலர்களாலான மாலை நாள்தோறும் அளிக்க தானம் ராஜராஜசோழனால் அளிக்கப்பட்டது. மதுரை அருகே உள்ள திருவாதவூர் கோயிலில் 20,000 செங்கழுநீர் பூக்கள் அளிக்க தானம் அளிக்கப்பட்ட செய்தி கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. திருமழபாடி கோயிலில் தும்பை மலர் அளிக்க தானம்  அளிக்கப்பட்டது.

நந்தவனங்கள்

மலர்களைப் பெறுவதற்கு திருக்கோயில்களில் நந்தவனங்களை அமைத்தனர். இவ்வாறு அமைக்கப் பெற்ற நந்தவனங்களைப் பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலில் "சுந்தரதோளியான்' என்ற திருநந்தவனம் இருந்தது.  இதிலிருந்து கோயிலுக்கு நூறு மாலைகள் அளிக்கப்பட்டன என குலசேகர பாண்டியன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பல நந்தவனங்கள் இருந்தன. கோதை ஆண்டாள் நந்தவனம், மதுராந்தக நந்தவனம், திருவரங்கத்தாழ்வார் நந்தவனம் என்பது சில பெயர்கள். வெவ்வேறு கோயில்களில் கண்டராதித்தன் திருநந்தவனம், செம்பியன்மாதேவி நந்தவனம், விக்கிரமகேசரி நந்தவனம் போன்ற பல நந்தவனங்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இங்கு பணிபுரிந்தவர்கள் "நந்தவனக்குடிகள்',  "நந்தவனம் பயிர் செய்வோர்', "தோப்புக்குடிகள்', என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். மலர்ச்செடிகள் மட்டுமல்லாமல் பயன்தரும் மா, பலா, வாழை, தென்னை, கமுகு (பாக்கு), போன்ற மரங்களும் இங்கு பயிரிடப்பட்டன என்பதை அறிகிறோம்.

திருப்பள்ளித்தாமம்

கோயிலுக்கு அளிக்கப்பட்ட பூமாலை ‘திருப்பள்ளித்தாமம்',  "திருத்தொங்கல்' என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இதனை கொடுப்பவர்கள் "திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்' என அழைக்கப்பட்டனர். திருவாரூர் கோயிலில் அறநெறி (அசலேசம்), திருக்கோயிலில் செருத்துணை நாயனார் இறைவனுக்கு மலர் தொண்டு செய்யும் புனிதப் பணியை மேற்கொண்ட வரலாற்றினை பெரியபுராணம் எடுத்துக்கூறுகிறது. மலர் மாலைகளை தொடுத்த மண்டபம் "திருப்பள்ளித்தாமம் திருமண்டபம்' என்றே அழைக்கப்படுகிறது.

பூக்களைப் பறித்து வந்து மண்டபத்தில் வைத்து தொடுத்தனர். இதற்கென கல்லால் தனி மேடை அமைக்கப்படும். இதற்கு "பூப்பலகை' என இதனையும் பலர் தானமாக செய்து அளித்துள்ளனர். சில கோயில்களில் பூப்பலகைகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

அளவு கோயிலுக்கு அழைக்கப்பெறும் பள்ளித்தாமம் மாலை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என்பதனையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட பள்ளித்தாமம் "பூபொன் காசின் வாய் இரு விரல் அகலத்து இரண்டிரண்டு நறும்பூ விட்டுக் தொடுத்தன இரு முழம் நீளத்தன ஒரே வடமாக நிசதி பதினைந்து இடுவதாக' எனக் கூறுகிறது.

மலர் வழிபாட்டினால் பல திருக்கோயில்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. திருவரங்கம் கோயிலுக்கு நந்தவனத்தில் இருந்து வரும் மலர்களை மட்டுமே அணிவிக்கிறார்கள். மதுரகவி ஆழ்வார் நந்தவனம் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. திருவாரூர் கோயிலில் இறைவனுக்கு இண்டைமாலை, மல்லிகை, செவ்வந்தி போன்ற நறுமண மலர்களால் கட்டப்படும் மாலை மட்டுமே அணிவிக்கப்படுகிறது.

"உண்டு நஞ்சு அடங்கு இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்' என இண்டை மாலை சிறப்பினை அப்பர் பெருமான் போற்றுகின்றார். திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயில் தலபுராணம் "செவ்வந்திப் புராணம்' என்றே அழைக்கப்படுகிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்' அணிந்த மாலையை திருமால் விருப்பமுடன் ஏற்றுக் கொண்ட வரலாற்றில் நாம் அறிவோம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து திருப்பதி திருமலைக்கு மாலை எடுத்துச் சென்று வேங்கடவனுக்கு அணிவிக்கும் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பூச்சொரிதல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாசி மாதத்தில் அன்பர்கள் பக்தியுடன் மலர்களைக் கொண்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடை காலமான சித்திரை - வைகாசி மாதங்களில் வசந்தத் திருநாளில் மாலை வேளையில் இறைவன் குளிர்ச்சி நிறைந்த நந்தவனத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி பல திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

நந்தவனங்கள் இறைவழிபாட்டிற்கு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் தூய்மை மேன்மை அடையவும் உதவுகிறது.

இன்று பல திருக்கோயில்களில் நந்தவனங்கள் அமைக்கப்பட்டும், நட்சத்திர மரங்கள் அமைக்கப்படும் சிறப்பாக போற்றி பராமரிக்கப்படுகின்றன.

இத்தகைய சிறப்புவாய்ந்த மலர் வழிபாட்டினை மேற்கொண்டும் நந்தவனங்களைப் போற்றிப் பராமரிப்பதில் பங்கு கொண்டும் இறை அருளைப் பெறுவோம். சுற்றுச் சூழலையும் போற்றிப் பாதுகாப்போம்.

(தொல்லியல்துறை - பணி நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com