வந்தியத்தேவன் பயணித்த பாதையில்...!

"கல்கி' குழுமம், பொன்னியின் செல்வனில் இடம்பெறும் வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு "வந்தியத்தேவன்' சென்ற ராஜபாட்டையில் பயணித்து, காணொளித் தொடராக கல்கி யூடியூப் சேனலில் வெளியிடப் போகிறது. 
வந்தியத்தேவன் பயணித்த பாதையில்...!

"கல்கி' குழுமம், பொன்னியின் செல்வனில் இடம்பெறும் வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு "வந்தியத்தேவன்' சென்ற ராஜபாட்டையில் பயணித்து, காணொளித் தொடராக கல்கி யூடியூப் சேனலில் வெளியிடப் போகிறது.
 அமரர் கல்கி எழுதிய அழியாப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான சரித்திர நாவல் "பொன்னியின் செல்வன்'. "கல்கி' பத்திரிகையில் வெளியானபோதும், பல்வேறு பதிப்பகங்களும் புத்தகமாகப் பிரசுரித்தபோதும் லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்த கதை இப்போது திரைப்படமாக வருக்கிறது.
 மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாகக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் தருணத்தில் 15 பாகங்களாக உருவாகியிருக்கும் இந்த யூடியூப் தொடரின் படப்பிடிப்பு முடிந்து, வரும் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.
 உலகளாவிய பொன்னியின் செல்வன் ரசிகர்களைக் கூட்டிச் சென்று, சோழர் சரித்திரத்தை நுகரச் செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் கல்கி குழுமத்தின் தலைமை நிர்வாகியும், அமரர் கல்கியின் பேத்தியுமான லட்சுமி நடராஜன்.
 "பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்'' என்ற இந்தத் தொடரின் எழுத்து, வர்ணனை என பங்களித்திருப்பவர் சரித்திரக் கதை எழுத்தாளரான காலச்சக்கரம் நரசிம்மா. அவருடன் பேட்டி:
 

வந்தியத்தேவன் பாதையில் பயணித்து, அந்த அனுபவத்தைத் தொடராகப் பதிவு செய்யும் எண்ணம் எப்படி வந்தது?
 லட்சக்கணக்கான வாசகர்கள் பொன்னியின் செல்வனை கதையாக, புத்தகத்தில் ரசித்துப் படித்து மகிழ்ந்திருக்கின்றனர். அதைத் திரைப்படமாகவும் காணப் போகின்றனர். ஆனால், பொன்னியின் செல்வனையும், சோழர் கால சரித்திரத்தையும் இந்தக் கால தலைமுறையினர் விரும்பும் கையடக்கத் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி அவர்களிடம் எடுத்துச் செல்வதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். நாம், நமது சரித்திரத்தை மறந்துவிட்டோம். அதை நினைவூட்டும் முயற்சிதான் இது. இந்தச் சவாலான பொறுப்பை கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவியின் ஆலோசனைப்படி, தற்போதைய கல்கி குழுமத் தலைமை நிர்வாகியான லட்சுமி நடராஜன் என்னிடம் ஒப்படைத்தார்.
 இந்தப் பணிக்கு உங்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள்?
 பொன்னியின் செல்வனின் பரம ரசிகனான நான் அதனை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. நாவலில் சில விஷயங்களை கல்கி கோடிட்டுக் காட்டிவிட்டு, கதையைத் தொடர்வார். நான் அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதயம் என்று நமக்குத் தெரியும். ஆனால் குந்தவையின் நட்சத்திரம் என்ன தெரியுமா? நான் ஆராய்ந்து பார்த்து அது அவிட்டம் என தெரிந்துகொண்டேன். சோழர்கள் வரலாறு பற்றி விரிவான ஆராய்ச்சிகளின் அடிப்படையில்
 கல்கியில் "கூடலழகி' என்ற சரித்திரத் தொடர் கதையை எழுதினேன். அதன் காரணமாகவே என்னிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தார்கள்.
 வந்தியத்தேவனின் பயணம் எங்கே தொடங்கி, எங்கே முடிகிறது?
 கதையில் வந்தியத்தேவன் வீராணம் ஏரியில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார். வீராணம் ஏரியில் தொடங்கி, திருகடல்மல்லை என்ற மாமல்லபுரத்தில் அவனது பயணம் நிறைவடைகிறது.
 ஐந்து பாகங்களில் கதை மிக விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும்கூட, கதைப்படி ஒரு ஆடிப் பெருக்கன்று துவங்கும் பயணம், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து முடிகிறது. அந்த வந்தியத்தேவனின் பாதையில் தற்போதைய தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் இருக்கும் ஐம்பது இடங்களுக்குச் சென்று படம் பிடித்திருக்கிறோம். வீராணம், காட்டுமன்னார் கோவில், வடவாறு, அரிசிலாறு, பழையாறை, ராஜராஜசோழன் சமாதி, சூடாமணி விகாரம், கோடியக்கரை, கொடும்பாளூர், கல்லணை, உத்தமசீலி, பழவூர், தக்கோலம், காஞ்சிபுரம், மாமல்லபுரம் என்று பல்வேறு முக்கிய இடங்களுக்கும் மொத்தம் 35 நாள்கள் பயணித்து, படம் பிடித்திருக்கிறோம்.
 உங்களுடைய பயண அனுபவம் எப்படி இருந்தது?
 வீராணத்தில் துவங்கி, மாமல்லபுரம் வரை சென்ற இடங்களிலெல்லாம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எங்கள் மனத்திரையில் நிழலாக ஓடின. பல தருணங்களில் அந்த இடங்களில் நின்றபோதும், நடந்தபோதும், உட்கார்ந்திருந்தபோதும் மெய் சிலிர்த்தது. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இடம் கொடும்பாளூர், பழையாறை.
 ரத்தமும், சதையுமாய் குந்தவை நடமாடிய இடம் பழையாறை. அங்குள்ள கோயிலின் மூலவரான சோமேஸ்வரர் மீது அவளுக்கு அவ்வளவு பக்தி. அங்கே குந்தவையின்சிலை கூட இருக்கிறது. அந்த இடம் இன்னமும்கூட சோழர் காலத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பயண அனுபவத்தின் காரணமாக, எனக்கு ஒரு பேராசை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையெல்லாம் ஹிஸ்டரி சேனல் போல ஆவணப்படுத்த வேண்டும் என்பதே அது!
 வந்தியத்தேவனின் சென்ற பாதையில் மேற்கொண்ட பயண அனுபவத்தின் அடிப்படையில் பொன்னியின்செல்வன் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
 கல்கி அந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று பார்த்து, கதையாக எழுதி இருக்கிறார். கண்ணால் கதையைப் படித்துவிட்டீர்கள். காதால் ஒலிப் புத்தகமாகக் கதையைக் கேட்டுவிட்டீர்கள்; படித்து, கேட்டு ரசித்த சம்பவங்கள் நடந்த, கதை மாந்தர்கள் நடமாடிய இடங்களுக்கு நேரில் பயணித்து மனதாரஅனுபவியுங்கள்!
 -எஸ். சந்திரமெளலி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com