இல்லம்தோறும் தேசியக் கொடி

நாட்டின் 75- ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த "ஹர்கர் திரங்கா'  அழைப்புக்கு நாட்டு மக்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இல்லம்தோறும் தேசியக் கொடி

நாட்டின் 75- ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த "ஹர்கர் திரங்கா' அழைப்புக்கு நாட்டு மக்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அனைத்து குடிமகனும் மூவர்ண தேசியக் கொடியை தங்களது வீடுகளில் ஏற்றுவது அல்லது எதாவது ஒரு வகையில் தேசியக் கொடியை எடுத்துக் கொண்டு செல்லும் "திரங்கா' பிரசாரத்தால் தேசப் பக்தி உணர்வு தூண்டப்பட்டுள்ளது.

இதனால் தேசியக் கொடிக்கான மவுசு மிகப் பெரிய அளவில் கூடி வருகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்பனைக்கு அனுப்புகிறது தில்லி சதர் பஜார் சந்தை.

தேசியக் கொடியை அச்சிடுவது, இயந்திரங்களாலும் கையாளும் தைத்து தயாரிக்கும் ஏராளமான உற்பத்தியாளர்களின் இருப்பிடம்தான் இந்தச் சந்தை. மொத்த வியாபாரிகளிடம் கொடிகளுக்கான ஆர்டர்கள் குவிகின்றன. குறிப்பாக வட இந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களுக்கு ரயில் வேகன்கள், லாரிகளில் பண்டல் பண்டல்களாக தேசியக் கொடிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

செளரஃப் குப்தா

"அனில்பாய் ராக்கிவாலா' மொத்த வணிக நிறுவனம்

""கடந்தாண்டு 20 லட்சம் கொடிகளை விற்பனை செய்தோம். நிகழாண்டில் மத்திய அரசு அமைச்சகங்கள், மாநில அரசுகளிடமிருந்து 2 கோடி கொடிகள் கேட்டு ஆர்டர் வந்துள்ளன. தயாரிக்க நேரமில்லை. ஐம்பது லட்சம்தான் எங்களால் தர முடியும். புதிய வடிவமைப்புகளுக்கு நேரமில்லை. பாலிஸ்ட்டர் துணியில் கொடி தரலாம் என்று அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியானது. இதனால், துணியும் எளிதாகக் கிடைக்கிறது. குறைவான விலையிலும் கொடியை தரமுடிகிறது. காட்டன் கொடி ரூ. 40 என்றால் பாலிஸ்ட்டர் கொடியை ரூ.20-க்கு தருகிறோம். விதவிதமான அளவுகளில் கொடி இருக்கிறது. ஆனால், அரசு கொடியின் அளவை அகலம் 20 அங்குலம், நீளம் 30 அங்குலம் என நிர்ணயித்துள்ளது'.

சுபம்

"அசோக்பாய் ராக்கி வாலா' மொத்த வணிக நிறுவனம்

""எப்போதும் குடியரசு தினத்தைவிட சுதந்திர தினத்துக்குதான் தேசியக் கொடி அதிகமாகக் கேட்டு வருவார்கள். இந்த ஆண்டு கடந்தாண்டைவிட நூறு மடங்கு தேவை வந்துள்ளது. ஆனால், மூலப்பொருள்களான காகிதம், பருத்தி துணி போன்றவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது.

பிளாஸ்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கொடியை பிடிப்பதற்கான "ஸ்ட்ரா" கிடைப்பதில்லை. நாடு முழுவதிலும் இருந்து எங்களுக்கு ஆர்டர் வருகிறது. ஆனால், சப்ளை செய்யமுடியவில்லை. கொடியிலும், மூவர்ணப் பொருள்களிலும் 2,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் இருக்கிறது' .

அப்துல் கஃப்பார்

அன்சாரி ஜன்டே வாலாவிற்பனையாளர்

என் தந்தை தையல் தொழிலாளி. நான் 10 வயதில் அவரோடு ஆயத்த ஆடை தொழிலுக்கு வந்தேன். எல்லா கட்சிக் கொடிகளையும், தேசியக் கொடிகளையும் நீண்ட ஆண்டுகளாக தைத்து கொடுத்து வருகிறோம்.
காங்கிரஸ் கட்சியின் பசுவும்-கன்று முதல் அக்கட்சியின் மூன்று சின்னங்களை வைத்த கொடிகள், ஜன சங்கத்தின்(பாஜக) தீபம் வைத்த கொடிகளையெல்லாம் தைத்து கொடுத்துள்ளோம். ஆனால், நெருக்கடி நிலைக்கு பின்னர் இப்போதுதான் முதன் முறையாக கொடிக்கு ஆர்டர் குவிகிறது.

சஞ்சய் காந்தி போட்ட உத்தரவு

கிட்டத்தட்ட 30 கோடி தேசியக் கொடிக்கு ஆர்டர் எங்களைப் போன்ற மொத்த வணிகர்களுக்கு வந்துள்ளது. ஆனால், எங்களால் 3, 4 கோடி தான் தர முடிவும் என்று நினைக்கின்றேன். கடந்த ஆண்டு எங்கள் நிறுவனம் 5 லட்சம் கொடிகளை தயாரித்து கொடுத்தது. நிகழாண்டில் இது வரை 80 லட்சம் கொடிகளை தயாரித்து அனுப்பியுள்ளோம். மொத்தம் 1 கோடி கொடிகளுக்கான இலக்கை இந்த ஆண்டு அடைய முடியும் என நினைக்கின்றேன்.

இத்தனைக்கும் எந்த அரசுக்கும் விநியோகிக்கவில்லை. பொது சந்தைக்கு தனியார் விநியோகஸ்தர்களுக்குதான் கொடுக்கின்றோம். இந்த கொடிகளை அரசு நிர்ணயித்த அளவுகளில் மட்டும் தயாரிக்கின்றோம்.

என்னுடைய 65 ஆண்டு அனுபவத்தில் தேசியக் கொடியில் இப்படியொரு ஆர்வத்தை பார்த்ததில்லை. நெருக்கடி நிலை சமயத்தில் சஞ்சய் காந்தி ஓர்
உத்தரவு போட்டார்.

அதனால், காங்கிரஸ் கொடி விற்றது. எல்லா கடைகளிலும் ராட்டை சின்னம் போட்ட காங்கிரஸ் கொடியோடு சஞ்சய் படத்தையும் வைக்க வேண்டுமென்று சொன்னார்கள்.

அப்போது பயந்துபோய் அந்தக் கொடியை வைக்க ஏராளமான ஆர்டர்கள் வந்தன.

பின்னர், அன்னா ஹசாரேயும் திரங்கா யாத்ராவை தொடங்கினார். இதுவெல்லாம் சில லட்சங்கள் அளவில்தான் இருந்தது. இப்போது நரேந்திர மோடி அழைத்த, "ஹர்கர் திரங்கா' கோடிகளை தாண்டிவிட்டது.

எனது நிறுவனத்தில் 1,200 தையல் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக பணியாற்றுகின்றனர். நாளொன்றுக்கு 2 லட்சம் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன'' என்றார்.

விதவிதமான கொடிகள்

தில்லி சந்தைகளில் சில்லறை விற்பனையகங்களில் தேசியக் கொடியின் மூவர்ணங்களில் நூற்றுக்கணக்கான வடிவமைப்புகளில் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் விதவிதமான தேசியக் கொடிகளைக் காண முடிகிறது. தேசியக் கொடியை அலங்காரப் பொருளாக பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒரு விதி. ஆனால், உணர்ச்சிவசத்தால் சில வடிவமைப்புகளில் இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளது.

மூவர்ண பிளாஸ்டிக் தொப்பி, ஹேர் பேண்ட், ஹேர் கிளிப், தலைப்பாகை (பக்ரி), திரங்கா சஃபா தலைப்பாகை, கிளிட்டர் டாட்டூ, காகிதக் கொடி, இரண்டு சக்கர வாகனக் கொடி ஸ்டாண்ட்கள், கனமான காட்டன் கொடிகள், விலை உயர்ந்த சில்க் கொடிகள், ரோட்டோ கொடிகள், காட்டன் கொடி, கழுத்து பட்டை, ஜாலர் திரங்கா, மலர் தலைப்பாகை, காட்டன் தலைப் பட்டை, கை மணிக்கட்டு பட்டை, மணிக்கட்டு பட்டை, எம்பிய்ராடரி ரிஸ்ட் பேண்ட், காட்டன் மப்ளர், ரோட்டோ ஸ்கார்ஃப், சில்க் ஸ்கார்ஃப், உலோக ப்ரோச், மலர் பேட்ஜ், காருக்குள் கொடியை நிற்க வைக்க 40 வகையான ஸ்டாண்ட்டுகள், பேஸ்லெட், டாலருடன் மாலை, துணி லடி, காகித லடி, டி-ஷர்ட்கள், கைப் பேசி ஸ்டிக்கர்கள், தொங்கும் அலங்காரங்கள் என தேசியக் கொடியின் மூவர்ணத்தில் விதவிதமான வடிவமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. தேவை அதிகரிக்க, அதிகரிக்க விலையும் அதிகரிக்கிறது. முன்பு ரூ. 500-க்கு விற்கப்பட்ட (40-க்கு 60-இன்ச்) அளவுள்ள சில்க் தேசியக் கொடி நிகழாண்டில் ரூ. 1,000-க்கு விற்கப்படுகிறது.

தேசியக் கொடி குறியீடு

தேசியக் கொடியை எப்படி பயன்படுத்துவது? , எப்படி ஏற்றி காட்சிப்படுத்துவது? என்பதற்கு வழிகாட்டுதல் உண்டு. 2002 -ஆம் ஆண்டின் தேசியக் கொடி குறியீடு என்கிற வழிகாட்டலில் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அனுமதிக்கப்படாமல் இருந்த பாலிஸ்ட்டர் இழையால் தயாரிக்கப்பட்ட துணியையும், இயந்திரத்தால் செய்யப்பட்ட கொடியையும் பயன்படுத்தலாம் என்கிற திருத்தம் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கொடியை பறக்க விடும் நேரங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அளவுகளில், நீளம் மூன்று பங்காகவும் அகலம் 2 பங்காகவும் இருக்க வேண்டும். அதன் பயன்பாடுகளில் சில தடைகள் தொடர்கிறது. தேசியக் கொடியை வைத்து போர்த்துவது, கிழிந்த தேசியக் கொடியை பயன்படுத்துதல், காரில் கொடியை கட்டுவது போன்றவற்றுக்கான தடைகள் தொடர்கின்றன.

குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், அமைச்சர்கள், தூதர்கள், சட்டப்பேரவைத் தலைவர்கள், நீதிபதிகள் உள்பட 9 விதமானவர்கள் மட்டுமே தேசியக் கொடியை காரில் பறக்க விடமுடியும். அவர்கள் காருக்குள்ளும் தேசியக் கொடியை வைப்பதற்கு தடையில்லை.

""அரசும் பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கான தேசியக் கொடிகள் இந்த ஹர்கர் திரங்காவில் வைக்கப்படுகிறது. இது முடிந்தவுடன் சாலைகளில் விழுந்து காலால் மிதிபடக் கூடாது. கழிவுநீர் கால்வாய்கள், குப்பைகளில் போடக் கூடாது. இப்படி போடப் பட்டால் இந்தக் காட்சிகள் நடந்து மூவர்ண தேசியக் கொடிகளுக்கு ஒரு அவமானமாகும். இவை நடக்காமல் அரசும், பொதுமக்களும் பார்த்துக் கொள்ளவேண்டும்' என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com