பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு!

"பாரத நாடு, பழம் பெரும் நாடு... நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்'  என்ற எட்டையபுரத்துக்  கவிஞர் பாரதியின் பாடல் வரிக்கு  உயிரோட்டம் அளித்தவர்கள் தமிழர்கள்.
பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு!

"பாரத நாடு, பழம் பெரும் நாடு... நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்' என்ற எட்டையபுரத்துக் கவிஞர் பாரதியின் பாடல் வரிக்கு உயிரோட்டம் அளித்தவர்கள் தமிழர்கள். எனவேதான் சுதந்திரத்தை முறையாகப் பெற்றபோது அங்கே பரிமாறப்பட்ட செங்கோல் முதல் ஆன்மிக ஆசி வரையில் அனைத்தும் தமிழகத்தின் கொடையாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் பெற்றோம் என்பதை யாவரும் அறிந்துள்ளோம். ஆனால், அந்தச் சுதந்திரத்தை நமக்கு மெளண்ட்பேட்டன் பிரபு அளித்தபோது அதை எப்படி நாம் பெற்றோம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ஆம். அன்னைத் தமிழகத்தின் ஆன்மிக அடித்தளத்தில்தான் நமது பாரதத்தின் சுதந்திரமே பெறப்பட்டது என்பதுதான் முக்கியம்.

பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர். சுதந்திரம் பெறும்போது ஒலித்த ஆன்மிக வாக்கியம் தமிழ் எனும்போது அதை எப்படி என அறியும் ஆவல் அதிகரிப்பது இயற்கைதானே.

இங்கிலாந்து அரசால் பாரதத்துக்கு விடுதலை அளிக்க முடிவானது. அதனடிப்படையில் அப்போதைய கவர்னர் ஜெனரல் மெளண்ட்பேட்டன் பிரபு தரப்பிலிருந்து 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சுதந்திரத்தை முறைப்படி அறிவித்து நம் பாரத மைந்தர்கள் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்கு நேரு உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். சடங்குகள், மத மரபுகளில் நம்பிக்கையில்லாத நேரு சுதந்திர தின நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை மூதறிஞர் ராஜாஜியிடம் ஒப்படைத்தார்.

ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி வழங்கக் கேட்டுக்கொண்டார்.

அப்போது திருவாவடுதுறை ஆதீனம் 20- ஆம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் காய்ச்சலால் அவதியுற்றுள்ளார். அதனால், ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என அழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும், ஓதுவாரை அவருக்குத் துணையாகவும் ஆதீன நாகஸ்வர மன்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளையையும் தனி விமானத்தில் புதுதில்லி அனுப்பி வைத்தார்.
அவர்கள் புதுதில்லிக்குச் செல்லும் முன்பாக அப்போதைய சென்னையில் பிரபலமாகியிருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச் சின்னம் பொறித்த வெள்ளிச் செங்கோல் ஆதீன மடத்துக்காகச் செய்து வாங்கப்பட்டது. அந்த செங்கோலுடன்தான் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி உள்ளிட்டோர் புதுதில்லிக்குச் சென்றனர்.

புதுதில்லிக்கு அவர்கள் புறப்படும் முன்பாக ஓதுவார் ஆதீனத்தை சந்தித்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் குறித்து கேட்டார். ஆதீனமும் கோளறு பதிகத்தைப் பாடும்படி பணித்தார்.

அதனடிப்படையில் புதுதில்லியில் 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி நள்ளிரவில் அப்போதைய கவர்னர் ஜெனரல் மெளண்ட்பேட்டன் பிரபுவிடமிருந்து செங்கோலை திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் பெற்றார். அப்போது செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஓதுவா மூர்த்திகள் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என தேவார திருப்பதிகத்தை முழுதுமாகப் பாடி முடிக்கும் போது செங்கோல் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுதந்திரம் பாரதத்துக்கு அளிக்கும் வகையில் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் தற்போதும் அலகாபாத்தில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்த பவனில் கண்ணாடி பேழைக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்துக்குப் பிறகு ஒவ்வொரு முறை ஆட்சி மாறி பிரதமர் பதவியேற்கும்போதும் இந்த செங்கோல் முறை கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறை ஏனோ கடைப்பிடிக்கப்படவில்லை.

பாரத தேசத்தின் பழம் பெருமைமிக்க சுதந்திர தினத்தன்று நடந்த செங்கோல் பரிமாற்ற நிகழ்வை இளந்தலைமுறை அறியும் வகையில் பாடப்புத்தகங்களில் அந்த நிகழ்வு இடம் பெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்வதுஅவசியம்.

பாரத தேசத்தின் 75- ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை முன்னிட்டு மறைக்கப்பட்ட பாரத வரலாற்றை யாவரும் அறிவதற்காக செங்கோல் நினைவுகூரப்படுகிறது. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என பாடிய பாரதியின் கனவுகள் அனைத்தையும் நனவாக்கும் வகையில் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.

- சங்கர சீத்தாராமன் ,
கம்பன் கழகப் புரவலர், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com