பாசம்...சேவை... வாழ்க்கை..!

ஆசிரியர் ஒருவரை "அப்பா' என்று வாஞ்சையுடன் மாணவ    மாணவிகள் அழைப்பார்களா? , அதுவும் கசக்கும் கணக்கு  வகுப்பு ஆசிரியரை.....
பாசம்...சேவை... வாழ்க்கை..!

ஆசிரியர் ஒருவரை "அப்பா' என்று வாஞ்சையுடன் மாணவ மாணவிகள் அழைப்பார்களா? , அதுவும் கசக்கும் கணக்கு வகுப்பு ஆசிரியரை..... பெரும்பாலான மாணவர்கள் கணக்கு ஆசிரியரிடமிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார்கள். ஆனால் ஸ்ரீபுரந்தான் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நிலைமை முற்றிலும் வித்தியாசமானது. "உங்களை மாணவ, மாணவியர் "அப்பா' என்று அழைக்கிறார்களே... அதற்கு காரணம் என்ன ?' அப்பாவு சொல்கிறார்:

""ஸ்ரீபுரந்தான் தமிழ்நாட்டின் பழைமையான ஊர்களில் ஒன்று. சோழ மன்னன் இரண்டாம் பராந்தகன் கட்டிய சிவன் கோயில் இரண்டும், பெருமாள் கோயில்கள் இரண்டும் உள்ளன. இங்குள்ள நடராஜர் சிலைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திலிருந்து ஸ்ரீபுரந்தான் 20 கி.மீ தொலைவில்
உள்ளது.

ஸ்ரீபுரந்தான் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து படிக்கிறார்கள். அந்தப் பள்ளியில் 12 ஆண்டுகளாக கணக்கு ஆசிரியராக பணி செய்து வருகிறேன்.

இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசு எட்டாவது படிக்கும் மாணவர்கள் வரை பள்ளிச் சீருடையை இலவசமாக வழங்குகிறது. ஆனால் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்குச் சீருடை வழங்குவதில்லை. அவர்களின் முந்தைய சீருடைகள் கிழிந்து போயிருக்கும். புதிதாக வாங்கவும் அவர்களால் இயலாது. அதனால் ஒன்பதாம் வகுப்பிற்கு வரும் போது பெரும்பாலானவர்கள் சீருடை அணியாமல் வருவார்கள். இங்கு ஆசிரியராகப் பணியில் சேர்ந்ததிலிருந்து வருடா வருடம் 9 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தலா ஒரு சீருடை வழங்கி வருகிறேன். இந்த வகுப்புகளில் சுமார் 400 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அனைவரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். இந்த சீருடை வழங்குதலை 12 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்.

நானும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறு வயதில் பெற்றோரை இழந்துவிட்டேன். என்னைப் படிக்க வைத்தவர் அண்ணன்தான். அவர் என்னை எம்.எஸ் சி (கணிதம்), பி.எட் வரை படிக்க வைத்தார். என்னையும், தம்பியையும் படிக்க வைப்பதற்காக அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்கள் சொந்த கிராமமான பசும்பலூரில் குத்தகைக்கு வயலில் விவசாயம் செய்து வருகிறார். படித்து முடித்ததும் தனியார் பொறியியல் கல்லூரியில் பத்தாண்டு காலம் ஆசிரியராக வேலை பாத்தேன். அந்த வேலையில் தொடரும்போது எம்.பில், முடித்து பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றேன். பிறகு அரசு பட்டதாரி ஆசிரியர் வேலை 2009இல் ஸ்ரீபுரந்தான் பள்ளியில் கிடைத்தது.

பள்ளியில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது செலவுக்கு பத்து ரூபாய் கிடைப்பது மிகவும் சிரமம். நூறு ரூபாய் நோட்டை பார்ப்பது அரிதிலும் அரிது. அதனால் சின்ன வயதில் இந்த மாணவ மாணவியர் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று தெரியும். அதனால் என்னால் முடிந்த அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு உதவி வருகிறேன். ஆண்டுக்கு ஒருமுறை மாணவ மாணவிகளுக்கு வடை பாயசத்துடன் சைவ விருந்து கொடுப்பேன். பல மாணவ மாணவிகளுக்கு கல்வி ஆண்டுகளில் நோட்டுகளையும் வழங்கி வருகிறேன். இந்த சேவை நான் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடரும்.

பள்ளிக்குச் சுற்றுச் சுவர்கள் இல்லை. கட்டடமும் மிகவும் பழையதாகிவிட்டது. மாணவ மாணவிகளுக்கு கழிப்பறை இல்லை. அரசிடமும், கல்வி அமைச்சரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். விரைவில் சரி செய்வதாக உறுதி தந்துள்ளார்கள். மாணவ மாணவிகளுக்கு உதவுவதற்காக நானும் அண்ணனைப் போல் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொண்டால் குடும்பப் பொறுப்பு கூடும். குடும்பத்தைக் கவனிக்கவே நேரமும் வாங்கும் சம்பளமும் சரியாக இருக்கும். இப்படி உதவிகள் செய்ய முடியாது. அதனால் அண்ணனைப் போல தனிமரமாக இருக்க முடிவு செய்துவிட்டேன். இந்தக் காரணங்களால் மாணவ மாணவிகள் என்னைப் பாசத்துடன் "அப்பா' என்று அழைக்கிறார்கள். தம்பி திருச்சியில் டெய்லராக இருக்கிறார். பண்டிகை தினங்களில் அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்வோம்..'' என்கிறார் 56 வயதாகும் ஆசிரியர் அப்பாவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com