வாசிப்பு எல்லாமே உணர்வுகள்!

""வாழ்வதற்கு எந்த தத்துவமும் தேவையில்லை.  ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம். எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம்.
வாசிப்பு எல்லாமே உணர்வுகள்!

""வாழ்வதற்கு எந்த தத்துவமும் தேவையில்லை. ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம். எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலை சிக்கலாக்குவதும், குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான். அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் அறிவு தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை. அப்படி தங்களது தேவைகளுக்காக தன்னம்பிக்கை அற்று போய் ஆயுதங்களையும் பயன்படுத்தும் சிலரின் கதைதான் படம். அவரவர் செயல்கள்தான், அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என இந்தக் கதையை இப்படியும் சொல்லி விட்டுப் போகலாம்.'' ஆழமாக பேசத் தொடங்குகிறார்சந்திரா தங்கராஜ். அமீர், ராம் ஆகியோரின் உதவியாளர். இலக்கியம், எழுத்து என தனி வட்டத்தில் சுழன்றவர், இப்போது"கள்ளன்' படத்தின் இயக்குநர்.

படத் தலைப்புக்கு பரவலான எதிர்ப்புகள் இருக்கே....

"தெற்கத்தி கள்ளன்', "மலைக் கள்ளன்' என ஏற்கெனவே பல படங்கள் இங்கே வந்திருக்கின்றன. இதுவும் அப்படித்தான். எதிர்த்து கருத்து சொல்பவர்களுக்கு விளக்கத்தை அளித்துக் கொண்டே இருக்கிறோம். இதையும் தாண்டி எதிர்ப்பவர்கள், படத்தைப் பார்த்த பின்னர் எதிர்க்க மாட்டார்கள். அதே சமயம், நீதிமன்றமோ அல்லது தணிக்கை குழுவோ படத்தின் பெயரை மாற்றச் சொன்னால் நிச்சயம் வேறு தலைப்பு வைக்க தயார். மற்றபடி இதில் வேறு எந்த ஒளிவு மறைவும் இல்லை.

கதையின் பேசு பொருள் என்ன....

கூடலூர் அதைச் சுற்றியுள்ள கிராமத்து வாழ்க்கை. அங்கே நான் பார்த்தது, கேட்டது எல்லாம்தான் இந்த சினிமாவுக்கான ஆரம்பப் புள்ளி. அந்த உண்மைகளிலேயே வாழ்ந்த ஒரு குழுவின் கதையாகத்தான் இதை உருவாக்கி இருக்கிறேன். அந்த ஊர் பக்கங்களில் பன்றி வேட்டை என்பது பிரபலம். குழுவாக சேர்ந்து பன்றி வேட்டைக்கு போவது அந்த ஊரின் பாரம்பரியங்களில் ஒன்று. அதுதான் வாழ்வின் ஆதாரமும் கூட. ஒரு கட்டத்தில் அந்த வேட்டைக்கு அரசும், சட்டமும் தடை விதிக்கிறது. அதையே நம்பி வாழ்ந்த சிலர், வேறு வழி தெரியாமல் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அது என்ன... அதைச் சுற்றிய பரபரப்பான சம்பவங்களே திரைக்கதை. சிறு வயதில் நான் பார்த்து பழகிய மனிதர்களின் வாழ்க்கையும், இப்போது எஞ்சியிருக்கும் சில மனிதர்களின் பயணங்களையும் தீர விசாரித்து கதை பின்னியிருக்கிறேன்.

அதை 80-களின் காலக் கட்டத்துக்கே எடுத்துச் சென்றிருக்கிறேன் முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவுஅழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னொரு இடம் கதையில் இருக்கிறது... அது இன்னும் வலிமை தரும் பகுதி. இன்னும் அறுந்து போகாத வாழ்க்கையை, என் மண்ணின் துயரப் பக்கங்களை துப்பறிந்து தந்திருக்கிறேன்.

ப்ரீயட் கதை... என்னென்ன சவால்கள்...

நிறைய இருக்கின்றன. நிலம், பேச்சு வழக்கு, உடை என அனைத்தையும் பார்த்துப் பார்த்து பதிவு செய்ததில் உழைப்பு இருக்கிறது. பிரம்மாண்டம், யுத்தம், சுத்தத் தமிழ் வசனங்கள் எனப் பார்த்து பழகிய சினிமாக்களுக்கு நடுவே, இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். களவாடச் செல்லும் இரவுகள், கருப்புக் கோயில், ஜல்லிக்கட்டு என புழுதியில் புரண்டு மொத்த படக்
குழுவும் உழைத்திருக்கிறோம். தமிழ்த் திரையில் இதுவரை சொல்லப்பட்டவை எல்லாம் மன்னர்களின் வரலாறாகவே இருக்கிறது. அதனால் முதன் முதலாக மக்கள் வரலாற்றைத் தீவிரமாக காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

கரு. பழனியப்பன் கதையை தாங்கி பிடிக்கிற ஆள். மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. அது போல்தான் நிகிதா, வேல ராமமூர்த்தி, சௌந்தர்ராஜன், நமோ நாராயணன்.நான் பார்த்து வந்த வாழ்க்கையை, எனக்கு முன்னே கொண்டு வந்து தந்திருக்கிறார்கள்.

தீவிர வாசிப்பாளனாக இருப்பது எந்தளவுக்கு இயக்குநருக்கு உதவும்....

""தொட்டால் சிணுங்கியை தொட்டவுடன், இலைகள் குறுகுகிறது. இலைகள் சுருங்க... கண்கள் விரிய...'' இப்படி சில வரிகளை படிக்கிறேன். இப்போது தொட்டால் சிணுங்கியை தொடுவது ஒரு ஷாட். இலை சுருங்குவது ஒரு ஷாட். கண்கள் விரிவது ஒரு ஷாட். இந்த மூன்று ஷாட்டுகளுமே அப்படியே வரிசையாக வருகிறது. இதுதான் வாசிப்பாளனுக்கும், இயக்குநருக்குமான தொடர்பு. ""ஒரு வண்ணத்துப்பூச்சி என்னை துரத்தி வந்து அமர்கிறது ஒரு கவிதையின் மேல்...என்று ஒருவன் எழுதுகிறான். ""ஒரு இலையிலிருந்து ஒழுகுகிற ஒரு சொட்டு நீரில் உறங்குகின்றன ஒராயிரம் சொட்டுக்கள்...'' என இன்னொருவன் எழுதுகிறான். ""ஒரு ஈழத்தமிழன் மொட்டை மாடியில் நின்று கொண்டு இந்தப் பக்கம்தான் என் நிலம் இருக்கு...'' என்று திசையை காண்பிக்கிறான்.வாசிப்பு இப்படித்தான்... எல்லாமே எனக்கு காட்சி,

வசனங்கள். வாசிப்பு எல்லாமே உணர்வுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com