உழைக்கும் குடும்பம்...

திருச்சி  உறையூர்  காவல் நிலையத்திற்கு அருகே    இருக்கும்   சிறிய  இரவு உணவகத்தில்  இரவு ஏழு  மணி முதல்  கூட்டம் "ஜே  ஜே'   என்று  அதிகமாக இருக்கும்.
உழைக்கும் குடும்பம்...

திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்கு அருகே இருக்கும் சிறிய இரவு உணவகத்தில் இரவு ஏழு மணி முதல் கூட்டம் "ஜே ஜே' என்று அதிகமாக இருக்கும். காரணம் அங்கே சாதா தோசை இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுவதுதான். தோசையைத் தொட்டுச் சாப்பிட ஐந்து அயிட்டங்கள் கிடைக்கிறது . ஆம் ..! இரண்டு வகை குருமா, காரச் சட்னி, தேங்காய் சட்னி, சாம்பாரும் வழங்கப்படுகிறது.

சிறிய கடை என்பதால் ஐந்தாறு பேர்கள் அமர்ந்து டிபன் சாப்பிடலாம். இடம் கிடைக்காதவர்கள் நின்று சாப்பிட்டு போய்விடுகிறார்கள். இந்தக் கடையின் பெயரே 2 ரூபாய் தோசைக்கு கடை' என்பதுதான்..! மூன்று ரூபாய்க்கு இட்லி விற்கவே கட்டுப்படி ஆகாத போது, எண்ணெய் விட்டு சுட வேண்டிய தோசையை எப்படி 2 ரூபாய்க்கு விற்க முடியும்?

கடையை நடத்தும் சின்னத்தம்பி விளக்குகிறார்:

"கடையை வாடகைக்கு எடுத்து நடத்துகிறேன். இந்த இடத்தில் கடை தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகிறது. நான்கு ஆண்டுகளாக 2 ரூபாய்க்கு தோசையை விற்று வருகிறேன். தினமும் 12 கிலோ அரிசி 3 கிலோ உளுந்தை ஊறப் போடுவேன். தோசைக்கான அரிசி ஊறப் போடுவதிலிருந்து அரைத்து தோசை வார்த்து தட்டில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு சாப்பிடக் கொடுப்பது வரை நானும், மனைவியும், மகள்கள் இருவரும் மாறி மாறி செய்து கொள்கிறோம். மார்க்கெட் போய் சாமான்கள் வாங்க நானே போய் வருவேன். நாங்கள்தான் கடையை நடத்துபவர்கள். கடையில் எல்லா வேலைகளைச் செய்வதும் நாங்கள்தான்.

"கடையில் சாதா தோசை தவிர, வழக்கமாக விற்கும் ஸ்பெஷல் தோசை, பரோட்டா, ஊத்தப்பம், ஆம்லெட் ரகங்களும் கிடைக்கும். அந்த உணவுகளின் விலை மற்ற கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கணிசமாகக் குறைத்தே கொடுக்கிறோம். ஸ்பெஷல் தோசை அங்கே 25 ரூபாய் என்றால், இங்கே 20 ரூபாய் தான். ஒவ்வொரு ஐயிட்டத்தின் விலை மற்ற கடைகளிலில் வாங்குவதைவிட ஐந்திலிருந்து இரண்டு ரூபாய் வரை குறைந்தே இருக்கும். கடை மாலை 6 மணிக்குத் தொடங்கி பதினோரு மணி வரை திறந்திருக்கும். மீண்டும் கரோனா பரவல் தொடங்கி இருப்பதால், பகுதி ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் காரணமாகக் கடையை இரவு பத்து மணிக்கு மூடுகிறோம்.

"எனக்கு சொந்த ஊர் திருமயத்திற்கு அருகில் இருக்கும் கோனாப்பட்டு. எனது அன்றைய குடும்பப் பின்னணி மிகவும் கஷ்டமானது. பல நாள்கள் பட்டினி கிடந்து பசியின் கொடுமையை அனுபவித்திருக்கிறேன். பிழைப்பதற்காக திருச்சி வந்தேன் . இந்தக் கடையைத் தொடங்குமுன் பல இடங்களில் சமையல்காரனாக வேலை பார்த்தேன். பிறகு சொந்தக் காலில் நிற்கலாம் என்று இந்தக் கடையைத் தொடங்கினேன். மனைவி, மகள் இரண்டு பேர் பொறுப்புகளை பங்கு போட்டுக் கொள்வதால் வெளியிலிருந்து வேலைக்கு ஆள்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் கடையை நடத்தும் செலவு மிச்சமாகிறது. உணவுவிடுதியில் விற்கப்படும் விலை கொடுத்து உணவு பொருள்களை அடித்தட்டு மக்கள் தினமும் வாங்கி சாப்பிட முடியாது. அத்தகைய பொருளாதாரம் எல்லாரிடத்திலும் இல்லை. அதனால் ஏதாவது ஒரு ஐயிட்டத்தை குறைந்த விலையில் சாதாரண மக்களுக்கு கொடுத்து அவர்களது பசியை ஆற்றலாம் என்ற எண்ணத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு தோசையை விற்க ஆரம்பித்தேன்.

இட்லியை விட தோசையை அதிகம் பேர்கள் விரும்புகிறார்கள்.தோசை விலையைக் குறைத்து விற்கிறேன் என்பதற்காக 2 ரூபாய் தோசையைத் தொட்டுச் சாப்பிட சட்னி குருமா வகைகளை தனியாக சமைப்பதில்லை. இதர ஐயிட்டங்களுக்குத் தரப்படும் குருமா, சட்னி, சாம்பாரையே, 2 ரூபாய் தோசை சாப்பிடுபவர்களுக்கும் தருவோம். தரத்துடன், சுவையுடன் அவை அமைந்தால்தான் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். வாடிக்கையாளர்கள் குறைந்தால் கடையை நடத்த முடியாத நிலைமை ஏற்படும். அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு தரமாகவும் சுவையாகவும் செய்து கொடுக்கிறோம்.

சாதா ஊத்தப்பம் 5 ரூபாய் தான் . வெங்காயம், காரட் துருவல் போடப்பட்ட ஊத்தப்பம் 20 ரூபாய்க்கு விற்கிறோம். 24 ஐயிட்டங்கள் எங்கள் கடையில் கிடைக்கும் என்றாலும் 2 ரூபாய் தோசைதான் அதிகம் விற்கிறது. பத்து ரூபாய்க்கு ஐந்து தோசைகள் சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும். கடையை நடத்துவதில் செலவுக்கும் வருமானத்திற்கும் சரியாக இருக்கிறது. ஆனால்
சாதாரண மக்களுக்கு உதவுகிறோம் என்ற மன நிறைவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

"ஏன் முழு நேர உணவுக்கடை நடத்தக்கூடாது' என்று பலரும் கேட்கிறார்கள். அப்படி நடத்த கூடுதல் வேலையாட்களை வைக்க வேண்டும். செலவு கூடும். இந்த விலைக்கு ஐயிட்டங்களை விற்க முடியாது. மதிய உணவை குறைந்த விலையில் விற்கும் கடைகள் சில திருச்சியில் செயல்படுகின்றன. ஆனால் இரவில் குறைந்த விலையில் உணவு ஐயிட்டங்களை விற்கும் கடைகள் இல்லை. அதனால் "ஒன்று செய்தாலும் ஒழுங்காகச் செய்வோம்' என்று இரவுக் கடையாக நடத்தி வருகிறேன்.

கடந்த ஊரடங்கின் போது சில மாதங்கள் கடையை மூடியிருந்தேன். பிறகு ஐயிட்டங்களை பார்சலில் கொடுத்து வந்தோம். இப்போது மீண்டும் கரோனா
மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். பழையபடி ஊரடங்கு வராமல் இருக்க வேண்டும்...

மக்கள் உணவுக்காக அலையும் நிலைமை மீண்டும் வரக்கூடாது என்று நாங்கள் பிரார்த்தித்து வருகிறோம்...' என்கிறார் சின்னத்தம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com