கண்தான விழிப்புணர்வில் 90 வயது இளைஞர்!

தன்னுடைய 90 ஆவது வயதிலும், பொதுமக்களுக்கு கண்தான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தளராமல் மேற்கொண்டு வருகிறார்,
கண்தான விழிப்புணர்வில் 90 வயது இளைஞர்!

தன்னுடைய 90 ஆவது வயதிலும், பொதுமக்களுக்கு கண்தான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தளராமல் மேற்கொண்டு வருகிறார், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் சி. கோவிந்தராசன்.
மக்களிடம் கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற குறையாத ஆர்வம், இவரது வயதைக் குறைத்துக் காட்டுகிறது.
1932இல் பிறந்த கோவிந்தராசன், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து 1994இல் ஓய்வு பெற்றிருக்கிறார். அப்போது அவர் தொடங்கிய அமைப்புதான், கண்ணப்பநாயனார் கண்தான பிரசார மையம்'.
கடந்த 28 ஆண்டுகளில் அந்தந்தக் காலங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து இவர் அளித்த கண்தானப் படிவங்களின் எண்ணிக்கை 15 ஆயிரம்.
கண்தானம் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பொது அமைப்புகள் என இவர் பங்கேற்றுப் பேசாத இடங்கள் எதுவுமில்லை.
"மாநிலத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கார்னியாக்கள் (விழி வெண்படலம்) தேவையாக இருக்கும் நிலையில், தானம் மூலம் கிடைப்பது வெறும் 1500 மட்டுமே' என்கிறார் கோவிந்தராசன்.
தனது 28 ஆண்டுகால கண்தான விழிப்புணர்வுப் பயணம் குறித்து அவரிடம் பேசினோம்:
"எல்லோரும் ஒரு நாள் இறப்பது நிச்சயம், இதனை யாராலும் மாற்ற இயலாது. ஆனால், மண்ணுக்கோ, நெருப்புக்கோ செல்லும் நம்முடைய உடலில் இருந்து கண்கள் எடுக்கப்பட்டால், பார்வை இழப்பு கொண்ட இருவருக்கு பார்வையாக இன்னும் சில ஆண்டுகள் நாம் வாழ்வோம்.
இறந்த உடலில் 6 மணி நேரம் கண் மட்டும் உயிரோடிருக்கும். கண்தானப் பதிவு செய்தோரின் வாரிசுகள், குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னால் சில மணி நேரங்களில் வீட்டுக்கே வந்த எளிதாக கண்ணை எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

புதுக்கோட்டையில் நான் பங்கேற்கும் பிறந்த நாள் விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் கண்தானப் படிவங்களுடன் செல்வேன். வாழ்த்திப் பேசிய பிறகு படிவத்தைப் பூர்த்தி செய்து பெறுவேன். குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்ந்தவுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அவற்றைக் கொடுப்பேன்.
பல்வேறு அமைப்பினரும் எனது பணியைப் பாராட்டியுள்ளனர். இவையனைத்தும் என்னைப் பாராட்டுபவை மட்டுமல்ல, ஏதோவொரு வகையில் திரும்பத் திரும்ப கண்தான விழிப்புணர்வைச் சொல்பவை' என்கிறார் கோவிந்தராசன்.
தீர்க்கமான சிவபக்தரான கோவிந்தராசனார், வில்லுப்பாட்டுக் கலைஞரும் கூட. தன்னுடைய பணிக் காலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லா கிராமங்களுக்கும் சென்று வில்லுப்பாட்டு நிகழ்த்தியிருக்கிறார். இக்கலை நிகழ்ச்சியின்போதும் ஆன்மிகப் பாடல்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், சேவை சார்ந்து, சமூகம் சார்ந்தும் பல்வேறு விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடியுள்ளார். இதற்காகவே, கலை பண்பாட்டுத் துறையின் "கலைமுதுமணி' விருதினையும் பெற்றிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com