எம்.ஜி.ஆரால் உருவான முதியோர் பூஞ்சோலை

அனுபவத்தின் திரட்சியாக வலம் வரும் முதியவர்கள், இளம் தலைமுறையின் பார்வையில் அணைந்துபோகும் தீபங்களாக மாறிவிடுகிறார்கள்.
எம்.ஜி.ஆரால் உருவான முதியோர் பூஞ்சோலை


அனுபவத்தின் திரட்சியாக வலம் வரும் முதியவர்கள், இளம் தலைமுறையின் பார்வையில் அணைந்துபோகும் தீபங்களாக மாறிவிடுகிறார்கள். வாழ்க்கையின் தள்ளாட்டத்தில் அணைந்துபோகும் தீபங்களை ஆனந்த தீபங்களாக உலவவிடும் பெரும்பணியில் முதியோர் இல்லங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்தவரிசையில் எம்ஜிஆரின் அறிவுரையால் பிறந்த முதியோர் பூஞ்சோலை தான் பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்லம். இந்த இல்லத்தை நடத்திவரும் ராஜகோபாலபாலாஜி, பெரும் சிக்கல்களுக்கு இடையே முதியோர்களை பராமரித்து வருகிறார். கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பொதுசேவையில் ஈடுபட்டுவரும் ராஜகோபால பாலாஜி, அவரது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

"" துன்பத்தில் யார் தவித்தாலும் அங்கு என் மனம் இரங்கிவிடும். இளம் வயதில் இருந்தே பிறருக்கு உதவிசெய்வதில் அதிக நாட்டம் கொண்டிருந்தேன். நமது சமூகம் முதியோரை நடத்தும் விதம் கண்டு மனம்புழுங்கியிருக்கிறேன். எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை பொதுசேவையில் ஈடுபடுவதற்கான உந்துசக்தியாக விளங்கியது. மக்கள்சேவையே மாதவசேவை என்று முதியோர் நலனில் அக்கறை செலுத்திவருகிறேன்.

1998ஆம் ஆண்டில் பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்லத்தை அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தொடக்கி வைத்தார். அந்தவிழாவில் செஞ்சிலுவைசங்கத்தலைவர் சரோஜினி வரதப்பன், வி.ஜி.சந்தோஷம், நடன இயக்குநர் ரகுராம் ஆகியோர்கலந்துகொண்டனர். ஆதரவற்ற முதியோருக்கு தங்க இடம், உண்ண உணவு, மருத்துவவசதி, ஆடை உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்துவருகிறோம். இதன்மூலம் யாரும் இங்கு அநாதை இல்லை. படுத்தபடுக்கையாக இருக்கும் முதியோருக்கு செவிலியர், மருத்துவ வசதிகளை தருகிறோம். மாத ஓய்வூதியம் பெறும் முதியோரிடம் மட்டும் குறைந்த மாதகட்டணத்தை பெறுகிறோம். இதுவரை 500 முதியோருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். இங்கு தங்கியிருக்கும் முதியோருக்கு மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி, நாளிதழ்கள், வாரமாத இதழ்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதருகிறோம்.

இளம் வயதில் இருந்தே எம்ஜிஆர் மீது பற்று அதிகம். 1984ஆம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் வாகனம் செல்வதை அறிந்து, சைக்கிளை நிறுத்திவிட்டு எம்ஜிஆரை பார்த்து கும்பிட்டேன்.

காந்திசிலையில் இருந்துசற்று தள்ளி எம்ஜிஆர் கார் நிற்கிறது. உடனே காரின் அருகில் சென்று எம்ஜிஆரை கண்டு வணங்குகிறேன். கார் கண்ணாடியை இறக்கிய எம்ஜிஆர், என்னை அருகில் அழைத்து, "என்ன படிக்கிறீர்கள்" என்று கேட்டார். நான் அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். "நன்றாக படிக்க வேண்டும். நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லபையனாக இருக்க வேண்டும்.

அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்." என்று கூறிய எம்ஜிஆர், அங்கிருந்து புறப்பட்டார். அந்த அறிவுரையின் விளைவாக தான் எனது தாய்தந்தையாக பார்க்கும் முதியோருக்காக 1998ஆம் ஆண்டு இல்லம் தொடங்கினேன்.

அதேபோல, ஸ்ரீசத்யசாய் எம்.ஜி.ஆர் பெயரில் அறக்கட்டளையை நிறுவி தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகத்திலும் தமிழ் மற்றும் பிறமொழி பேசும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்திவருகிறேன்.

சென்னை ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிறப்புப்பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். தினமும் மதிய வேளையில் 25 ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருகிறேன்.

நமது சமூகம் முதியோர்களை அரவணைத்துக்கொள்ள தவறிவிட்டது. இன்றைய முதியோர், நேற்றைய மாமனிதர்கள். நமது குடும்பத்திற்காகவும், நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் உழைத்த முதியோர்களை அலட்சியத்தோடு அணுகும்போக்கு இன்றைய இளம் தலைமுறையினரிடம் காணப்படுகிறது. அந்த முதியோர் இல்லங்கள் இல்லாவிட்டால் முதியோரின் கதி என்னாவது? வயதால் முதிர்ந்தவர்களை அன்பால் அரவணைத்து, குழந்தைகளை போல பார்த்துக்கொள்வது பெரும் புண்ணியமாகும். தனிமையில் வாடும் முதியோரின் நிலைமை மிகவும் மோசமானது. அப்படிப்பட்ட முதியோருக்கு அளவிடாத அன்பு ஒன்றே மன நிம்மதியை தரும்'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com