பட்டாம்பூச்சிகளாய் மாறிய ஆசிரியர்கள்!

பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதும் மூடுவதுமாக உள்ளன.
பட்டாம்பூச்சிகளாய் மாறிய ஆசிரியர்கள்!

பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதும் மூடுவதுமாக உள்ளன. கடந்த காலங்களில் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தற்போது சலிப்புடன் வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளது "பட்டாம்பூச்சிக் குழு' .
அரசு தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஏழு பேர் இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைத் தேர்வு செய்து, அங்கு பாழ்பட்டுக் கிடக்கும் பள்ளிக்கூடங்களை தங்களது வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தி, மாணவர்களை ஆச்சரியப்பட வைக்கின்றனர் இந்தக் குழுவினர்.
அண்மையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், சோளக்காடு அருகே ஊர் கலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களைக் கவரும் வகையிலான ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் சந்தோஷ்குமாரைச் சந்தித்தோம்:

எங்கிருந்து தொடங்கியது இந்த ஓவிய ஆர்வம்?

""திருப்பூர், பாண்டியன் நகரில் அரசு தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். இதற்கு முன் பட்டாம்பூச்சி என்ற அமைப்பு செயல்பட்டது. அதில் நானும் இருந்தேன்.
2019-க்குப் பின் அந்த அமைப்பின் செயல்பாடு குறைந்தது. அதைத் தொடர்ந்து நண்பர்களை ஒருங்கிணைத்து "பட்டாம்பூச்சிக் குழு என்பதை உருவாக்கினேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து, முகப்பிலும் வகுப்பறைகளிலும் ஓவியங்களை வரைந்து வருகிறோம். நாங்கள் யாரும் ஓவியம் கற்றவர்களல்ல. ஆர்வத்துடனேயே இதனைச் செய்து வருகிறோம்.

ஓவியத்திற்காக ஊதியம் பெறுவதுண்டா?

இதனை சமூக அக்கறையுடன் செய்கிறோம். பள்ளிக்கு மாணவர்கள் ஆர்வமுடன் வர வேண்டும். பள்ளி என்றாலே கசக்கும் நிலை அவர்களிடமிருந்து நீங்க வேண்டும். எங்களுடைய பெரும்பாலான ஓவியங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் மட்டுமே இருக்கும். வகுப்பறைகளில் பாடம் சார்ந்த ஓவியங்களை வரைவோம்.

தனியாரைக் கொண்டு ஓவியங்களை வரைந்தால் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும். நாங்கள் இதற்கு கூலி வாங்குவதில்லை. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெயிண்ட் செலவினங்களை ஏற்றுக் கொள்வார்கள். மொத்தமாக ரூ. 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். குறிப்பிட்ட நாள்களில் சென்று பணிகளை முடித்துக் கொடுப்போம்.

வெளி மாவட்டங்களுக்குச் செல்வதால் ஆசிரியர் பணி பாதிக்காதா?

திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 54 பள்ளிகளில் ஓவியங்களை வரைந்துள்ளோம். சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மட்டுமே பணிகளைச் செய்வோம். போக்குவரத்துச் செலவு, தங்குமிடம், இதர செலவினங்களை நாங்களே கவனித்துக் கொள்வோம். இதற்காக யாரிடமும் பணம் பெறுவதில்லை.

கொல்லிமலை, ஊர் கலிங்கம்பட்டி அரசு பள்ளிக்கு வருமாறு இங்குள்ள தலைமை ஆசிரியர் சந்திரமோகன், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தனர். ஐந்து மாதங்களுக்குப் பின் தற்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் தேர்வு செய்து இந்த ஓவியப் பணியை செய்து வருகிறோம்.

இந்தக் குழுவை இயக்குவது எவ்வாறு?

எங்களது குழுவில் ஆசிரியர்கள் கார்த்திகேயன், ரவிசந்திரன், ஹரிகிருஷ்ணன், கார்த்திக், செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். பள்ளிகளில் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவிப்போம். அவர்களும் தடை ஏதுமின்றி புறப்பட்டு வந்து விடுவர். எந்த மாவட்டத்துக்குச் செல்கிறோமோ அங்கும் சில ஆசிரியர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் வருவார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு, பணிகளைச் செய்து முடிப்போம்.

பள்ளிகளில் எந்த வகையான ஓவியங்கள் இடம்பெறுகின்றன?

வகுப்பறைகளில் பாடம் சார்ந்த ஓவியங்கள் வரைவோம். பள்ளியின் முன்பக்கச் சுவரில் விழிப்புணர்வு ஓவியம், இயற்கைக் காட்சிகளை வரைகிறோம். தேசப்பற்று மிகுந்த ஓவியங்கள், விலங்குகள், அருவி, கார்ட்டூன் படங்கள் அதிக அளவில் இடம்பெறும். வகுப்பறைக்குள் காய்கறிகள், பழங்கள், பறவைகள், எழுத்துக்கள் வரையப்படும். மாணவர்கள் இத்தகைய ஓவியங்களைப் பார்க்கும்போது அவர்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்படும். அவ்வாறான படங்களை தாங்களும் வரைய வேண்டும் என்ற எண்ணமும், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என்ற ஆர்வமும் மாணவர்களிடம் உருவாக வாய்ப்புள்ளது.

ரோனா தொற்று காலத்தில் பணி தொடர்ந்ததா?

ஊரடங்கு இல்லாதபோது, நாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் தடை ஏதுமில்லாதபோது சென்று ஓவியங்களை வரைந்தோம். நீலகிரி மாவட்டத்தில் 8 பள்ளிகளில் இந்த கரோனா காலக்கட்டத்தில் வரைந்துள்ளோம். திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டப் பள்ளிகளில் தான் அதிக அளவில் வரைந்துள்ளோம்.
மலைப் பகுதிப் பள்ளிகள், கிராமப்புறப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் என படிப்படியாக இந்த ஓவியப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். முதல் கட்டமாக மலைப் பகுதிப் பள்ளிகளில் பணிகளைச் செய்து வருகிறோம்.

இவை தவிர, மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுக் கட்டடம், குழந்தைகள் நலத் துறையின் கீழ் இயங்கும் கட்டடங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்டவற்றிலும் ஓவியங்களை வரைந்துள்ளோம். இதேபோல பல்வேறு விழிப்புணர்வு பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் குழுவின் விருப்பம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com