கிரிக்கெட் தலைவி!

இந்தியப்  பெண்கள் கிரிக்கெட்  பிரபலம்   ஆனதில் முக்கிய பங்கு  மித்தாலி ராஜுக்கு  உண்டு.  
கிரிக்கெட் தலைவி!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் பிரபலம் ஆனதில் முக்கிய பங்கு மித்தாலி ராஜுக்கு உண்டு.

பெண்கள் கிரிக்கெட் என்றால் தொலைக்காட்சிகளில் கூட ஒளிபரப்பப்படாத நிலை இருந்தது. மித்தாலி தலைமையில் பல வெற்றிகள் கண்ட பிறகுதான் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் பேசும் பொருள் ஆனது. பெண் ஆட்டக்காரர்களின் ஊதியமும் உயர்ந்தது. இத்தனை ஏன்? பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் அணியும் சீருடை இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் அணியும் உடைக்கு சமமாக உருவாக்கம் செய்யப்பட்டு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு மதிப்பு கூட்டப்பட்டது.

23 ஆண்டுகளாக பெண்கள் கிரிக்கெட்டில் உந்து சக்தியாக இருந்து வந்த மித்தாலி எல்லாவித கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். மித்தாலி 1999-இல் கிரிக்கெட் ஆட பேட்டை கையில் எடுத்தார். அப்போது அவர் வயது 16 . பல சாதனைகளையும் நிகழ்த்தினார்.

மித்தாலி இந்தியாவிற்காக 12 டெஸ்ட் போட்டிகள், 232 ஒருநாள் போட்டிகள், 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 195 போட்டிகளுக்குத் தலைமை தாங்கி இந்திய அணியை வழிநடத்தியது மித்தாலி ராஜ்தான்.

உலகக் கோப்பைக்கான போட்டியில், இரண்டு முறை இந்திய அணியை இறுதிப் போட்டிவரை கொண்டு சென்றுள்ளார். பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6,000 ரன்கள் எடுத்த முதல் பெண்ணும் மித்தாலிதான். ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 7,805 ரன்களை மித்தாலி எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10,868 ரன்கள் எடுத்த சாதனையும் மித்தாலிக்குச் சொந்தம். மித்தாலியில் சாதனை பட்டியல் அதிகம்.

மித்தாலி ராஜ் ராஜஸ்தானில் பிறந்தாலும், அவர் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். மித்தாலி ராஜின் தந்தை துரை ராஜ், தாய் லீலா ராஜ். தந்தை துரை ராஜ் விமானப் படை அதிகாரி என்பதால், பல நகரங்களில் மித்தாலி வளர்ந்தார். வீட்டில் தமிழ்தான் பேசுவார். தற்போது மித்தாலி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மித்தாலி ராஜைப் பெருமை படுத்த, அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வென்று இருக்கிறார்.

மித்தாலிக்கு சோதனை 2018-இல் வந்தது. அப்போதே மித்தாலி கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றிருக்க வேண்டும்.

அப்போதைய கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் மித்தாலி ராஜ் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தொடரில் இரண்டு அரை சதங்கள் விளாசித் தள்ளிய நிலையில் மிதாலி ராஜ் திடீரென்று இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எல்லா கோணத்திலிருந்தும் கடும் விமர்சனங்கள் புயலாகக் கிளம்பின.

மித்தாலியும் போர்க் கோடி தூக்கவே... மித்தாலி மீண்டும் கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 39 வயதில் மித்தாலி தனக்கு விருப்பமான கிரிக்கெட்டிலிருந்து பிரியா விடை பெறுகிறார்.

மித்தாலியின் வாழ்க்கை "சபாஷ் மிது' என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. மித்தாலியாக நடிப்பவர் டாப்சீ பன்னு. ஜூலை 15-இல் படம் வெளியாகிறது. மித்தாலி கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கும் ... அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரான திரைப்படம் வெளியாவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

கிரிக்கெட் தலைவி என்றால் அது தமிழச்சி மித்தாலிதான்!!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com