வரலாற்றை கூறும் கூரை ஓடுகள்

மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பாக, வெயில்,  மழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துகொள்ள இயற்கையால் அமைந்த மலைக் குகைகளில் தங்கிக் கொண்டனர்.
வரலாற்றை கூறும் கூரை ஓடுகள்

மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பாக, வெயில், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துகொள்ள இயற்கையால் அமைந்த மலைக் குகைகளில் தங்கிக் கொண்டனர். இது வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வு.

புதிய கற்காலம்

பின்னர், நீர் வசதி இருக்கும் இடத்தில் நிலையாய் தங்கி வேளாண்மை செய்து, உணவு உற்பத்தியை மனிதர்கள் தொடங்கினர். ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்க்கவும், மண் பானை செய்துகொள்ளவும் தொடங்கினர். மனித வரலாற்றில் புதிய கற்காலம் என்று இந்த நிகழ்வை தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

புதிய கற்கால மக்கள் பதுங்குக் குழிகள் அமைத்து, மலை அடிவாரத்தில் சமவெளிப் பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்தும் கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பையம்பள்ளி, தருமபுரி மாவட்டம் மோதூர், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை முதலிய ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் புதிய கற்காலப் பண்பாடு தொடர்பான சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை முதலிய பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் புதிய சான்றுகள் கிடைக்கப் பெறவுள்ளன.
பெருங்கற்காலம் புதிய கற்காலத்தையடுத்த பெருங்கற்காலம் என்ற இரும்புக் காலத்தில் மனிதன் ஓரிடத்தில் நீர் நிலைகள் அருகே நிலையாகத் தங்கி ஒரு சமூக அமைப்புடன் வாழத் தொடங்கிய காலம். இதற்கு சான்றாக மனிதர்கள் ஒன்றிணைந்து வட்ட வடிவமாக வைத்து, இறந்தவர்களைப் புதைத்த ஈமச் சின்னங்கள் தபல ஊர்களிலும் காணப்படுகின்றன.

இந்த வகை ஈமச்சின்னங்கள் காணப்படும் பெருங்கற்காலத்தில் மக்கள் வேளாண்மைத் தொழில், தொழில் வளர்ச்சி, இரும்பின் பயன்பாடு, எழுத்துகளுக்கு முன்னோடியான குறியீடுகள் உள்ள பானைகள் போன்றவை கிடைக்கப் பெற்றுள்ளன.

சங்க காலம்:

பெருங்கற்காலப் பண்பாடு சங்கக் காலத்தின் சிறப்புக்கு முன்னோடியாக அமைந்ததை தமிழகத்தில் கீழடி, கொடுமணல், கொற்கை, கரூர், பேரூர், சாளுவன் குப்பம், பட்டறைப் பெரும்புதூர் முதலிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றில் மனிதர்கள் வாழ்ந்த வீடுகளின் சுவர்கள் செங்கற்களால் அமைக்கப்பட்டிருந்ததும், வீட்டின் கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தலைப் பகுதி தடித்தும், கீழே செல்லச் செல்ல மெல்லியதாகவும் காணப்படும். மேல் பகுதியில் இரு துளை இருக்கும். இவை நீள் செவ்வக வடிவில் கையால் செய்யப்பட்டவையாகும்.

இத்துளைகள் கூரையில் இருக்கும் மரச்சட்டத்தில் வைத்து கட்டுவதற்கு ஏற்றவாறு உள்ளது. மேலும், இந்த ஓடுகளில் இரண்டு பக்கங்களிலும் பள்ளம் இருக்கும். கூரையில் மழைநீர் தங்காமல் செல்வதற்கு இத்தகைய அமைப்பினை அமைத்துள்ளனர்.

கூரையில் இத்தகைய அமைப்பு உள்ள, ஓடுகளைத் தொடர்ச்சியாக அமைக்கும்பொழுது மழைநீர் உள்ளே வராமல் பாதுகாப்பாக மக்கள் தங்க உதவும். இத்தகைய அமைப்புடன் ஓடுகள் கீழடி, கொடுமணல், கரூர், வல்லம், அழகன்குளம், திருத்தங்கல், திருக்கோவிலூர், சாளுவன்குப்பம் முதலிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ளன.

வரலாற்றுக் காலம்

இதன்பிறகு வரலாற்றுக் காலத்தில் கூரை ஓடுகளின் வடிவைப்பு முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறது. தட்டையாக, நீள் சதுர வடிவில் (5--க்கு 9 செ.மீ.) தலைப்பகுதி "எல்' போன்ற வடிவமைப்புடன் காணப்படும். கீழ்ப்பகுதியின் முனை அரைவட்ட வடிவமாக அமைந்திருக்கும். தலைப்பகுதியில் அமைந்த கொக்கி போன்ற அமைப்பு மரச்சட்டத்தில் பொருத்த ஏதுவாக அமையும். வரிசையாக இந்த ஓடுகளை மரச்சட்டத்தில் அடுக்கி அதன் மீது சுண்ணாம்புக் கலவையை பூசி விடுவர்.

இத்தகைய அமைப்புடன் கூரை ஓடுகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகை மேட்டில் சோழ மாளிகையை ஆய்வு செய்ததில் கிடைத்தது.

மரச் சட்டங்களை இணைக்க இரும்பு ஆணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். கங்கை கொண்ட சோழபுரம்- மாளிகை மேடு அகழ்வாராய்ச்சியில் அதிக அளவில் இரும்பு ஆணிகள் கிடைத்தன. கங்கை கொண்ட சோழபுரத்தில் தொடர்ந்து, தொல்லியல் துறையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்களின் கட்டடக் கலை சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் அகழ்வாராய்ச்சி விளங்குகிறது என்றால் மிகையில்லை!

சில ஓடுகளில் அலங்கார வேலைப்பாடுகளுடனும், சில ஓடுகள் அறுகோண வடிவிலும் அமைந்திருந்தது சிறப்பானது. சோழ மன்னன் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட மாளிகை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் என்பது நம் கண் முன் தோன்றுகின்ற தல்லவா!

இங்கு மட்டுமல்லாமல் திருக்கோவிலூர், சேந்தமங்கலம், பழையாறை, கம்பர்மேடு, வல்லம், படைவீடு போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர்களிலும் இத்தகைய ஓடுகள் கிடைத்துள்ளன.

தஞ்சை பெரிய கோயிலில் காணப்படும் ஓவியங்களில் சிதம்பரம் கோயிலின் கோபுரம் காட்டப்பட்டுள்ளது. அதிலும் இத்தகைய ஓடுகள் காட்டப்பட்டிருப்பது சிறப்பானது.

நடராஜர் கோயிலில் கருவறைக்கு மேலே அமைந்திருக்கும் பொன்னம்பலத்திலும் இத்தகைய அமைப்பில் உலோகத்தில் ஆன ஓடுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு ஓடு

பிற்காலத்தில் வீட்டுக் கூரைக்கு வளைவாக உள்ள "நாட்டு ஓடுகள்' எனப்படும் ஓடுகள் வேயப்பட்டன. இன்றும் தமிழகத்தில் பல ஊர்களிலும், கிராமங்களிலும் நாட்டு ஓட்டுடன் கூரை அமைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய ஓடுகள் வீடுகளுக்கு எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

தட்டோடு

கோயில்களில் மண்டபங்களை அமைத்து திருப்பணி செய்யும்பொழுது மழைநீர் கசியாமல் இருக்க சதுர வடிவமான "தட்டோடுகள்' மண்டபத்தின் மேற்பகுதியில் சுண்ணாம்புக் கலவையுடன் அமைப்பார்கள். இவ்வாறு அமைப்பதை "தட்டோடு வேய்ந்து கொள்ளவும்' என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இன்றும் வீடுகளின் மேற்பகுதியில் மழைநீர் கசியாமல் இருக்க தட்டோடு பதிக்கும் வழக்கம் இருக்கிறது.

மனிதனின் சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய அவர்கள் வாழ்ந்த வீடுகளின் மேல் வேயப்பட்டிருந்த கூரை ஓடுகளும் முக்கியமான தொல்லியல் சான்றுகளாக விளங்குகின்றன.

- கி.ஸ்ரீதரன்,
தொல்லியல் துறை (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com