தடகளத்தின் 'டங்கல்' வீராங்கனை

"டங்கல்' திரைப்படத்தில், ஆமிர்கான் தன் இரு மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக்கப் பல்வேறு கஷ்டங்களைச் சமாளித்து வெற்றி பெற்றது போல், தடகளத்திலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்வீராங்கனை
தடகளத்தின் 'டங்கல்' வீராங்கனை


"டங்கல்' திரைப்படத்தில், ஆமிர்கான் தன் இரு மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக்கப் பல்வேறு கஷ்டங்களைச் சமாளித்து வெற்றி பெற்றது போல், தடகளத்திலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்வீராங்கனை முகதா ஸ்ரீஷாவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த போகட் சகோதரிகள் மல்யுத்த விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல்வேறு கடினமான சவால்களை எதிர்கொண்டு இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பதக்கம் வென்று புகழ் சேர்த்தனர்.

அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஹிந்தி நடிகர் ஆமீர் கான் டங்கல் என்ற திரைப்படத்தை எடுத்தார். அந்தப் படம் உலக அளவில் பிரம்மாண்டமான வெற்றியையும், வசூலையும் ஈட்டியது. 

அதேபோன்ற கடுமையானச் சூழலைச் சமாளித்து ஆந்திர மாநில இளம் வீராங்கனை முகதா ஸ்ரீஷா தடகளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

ஆந்திர-ஒடிஸா மாநில எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம், குக்கிராமமான மந்தாரடாவைச்  சேர்ந்த ஏழை விவசாயி முகதா கிருஷ்ணம் நாயுடு மகள் ஸ்ரீஷா.  சிறிய வயதில் தனது மகள் ஆர்வமுடன் வேகமாக ஓடுவதைக் கண்டு தடகளத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார் கிருஷ்ணம்ம நாயுடு. இதனால் ஸ்ரீஷா மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைக் குவித்தார். மேலும் ஹைதராபாதில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியிலும் சிரீஷா தேர்வு செய்யப்பட்டார். 

விபத்தில் தந்தை இழப்பும், கனவை நனவாக்கும் தாயும்..: குதூகலமாக தனது விளையாட்டுப் பயிற்சியைத் தொடங்கிய ஸ்ரீஷாவின் வாழ்க்கையில் 2019-இல் சாலை விபத்தில் தந்தை உயிரிழந்தது பேரிடியாக அமைந்தது. வறுமையான நிலையிலும், மகளுக்கு செலவழித்து போட்டிகளுக்கு தந்தை அனுப்பினார். ஆனால் திடீரென இருள் சூழ்ந்தது போல் உணர்ந்தார் ஸ்ரீஷா.

எனினும், தன்னம்பிக்கையை இழக்காமல் திடமான தீர்மானத்துடன் தொடர்ந்து தடகளத்தில் சாதிக்க உறுதியுடன் நின்றார். தினக்கூலியாக வேலை செய்யும் அவரது தாயார் கெளரீஸ்வரம்மா மகளின் முன்னேற்றத்துக்கான பொறுப்பை ஏற்றார். கணவரின் கனவை நிறைவேற்ற துணை நின்றார்.

தொடர்ந்து தீவிர பயிற்சி, முயற்சியால், அண்மையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்ற கேலோ இந்தியா யூத் போட்டிகளில் 400 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஒலிம்பிக் போட்டியே இலக்கு: இதுதொடர்பாக முகதா ஸ்ரீஷா கூறியதாவது:

""இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தந்தை அடிக்கடி வலியுறுத்துவார். இது எனது மனதில் ஆழமாக பதிந்து விட்டது.  எப்போதும் சிரிப்புடன் ஒலிம்பிக்கில் நீ பங்கேற்பதை பார்க்க வேண்டும் என தந்தை கூறுவார். எனது தந்தையின் நண்பர்கள் ஏன் ஸ்ரீஷாவை தடகளத்தில் சேர்த்து ஊக்கப்படுத்துகிறாய் என கிண்டல் செய்வர். ஆனால் அவர் அதை பொருள்படுத்தவில்லை. 2018-இல் திருப்பதியில் நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் தங்கம் வென்றதை அவர் பார்த்தார்.

கேலோ இந்தியா வெண்கலம் பதக்கம் எனது 5-ஆவது தேசிய அளவிலான பதக்கம் ஆகும். தந்தையை இழந்த பின் வெல்லும் முதல் பதக்கம். பல்வேறு மாநிலப் போட்டிகளில் 26 தங்கம் வென்றுள்ளேன். 400 மீ. ஓட்டத்தில் ஹிமாதாஸ் தேசிய சாதனையான 50.79 விநாடிகளை முறியடிப்பதே எனது நோக்கம்'' என்றார் ஸ்ரீஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com