ஹாப்பி பர்த் டே டூ அகிலா...!

மனிதர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு;  கோயில் யானைக்கும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
ஹாப்பி பர்த் டே டூ அகிலா...!

மனிதர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு;  கோயில் யானைக்கும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அதுவும், பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானைக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும்?  கடந்த மாத இறுதியில் கோயிலில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம்  பக்தர்களைப் பரவசப்படுத்தியது. 

 யானை வழிபட்டு முக்தி பெற்ற தலம் என்பதால் "திருஆனைக்கா' என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் "அகிலா'  என்ற யானை அன்றாட இறைப்பணிகளை செய்து வருகிறது.

2002-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி அஸாம் மாநிலத்தில் யானை பிறந்தது. 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண அறக்கட்டளை சார்பில் திருவாக்காவல் கோயிலுக்கு யானை வழங்கப்பட்டது. 

காலையில் சுவாமி, அம்பாள் திருமஞ்சன அபிஷேகத்துக்கு புனித நீர் எடுத்து வருதல், பிற்பகல் உச்சிகால பூஜை , சுவாமி தங்கரத புறப்பாடு உள்ளிட்ட உத்ஸங்களில் யானை அகிலா ஈடுபடுத்தப்பட்டு, 11 ஆண்டுகளாக இறைபணியாற்றி வருகிறது. 

சிறிய வயதிலேயே கோயிலுக்கு வந்த அகிலா, தனது சுட்டித் தனத்தால் பக்தர்களின் மனம் கவர்ந்தது.  இதனால், யானையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் பக்தர்களால் "கேக்' வெட்டி கொண்டாடப்படும்.

கரோனா ஊரடங்கு காரணமாக,  கடந்த 2 ஆண்டுகளாக அகிலாவின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை.  இந்த ஆண்டு அகிலாவின்  20-ஆவது பிறந்த நாள் வழக்கத்தைவிட சிறப்பாகவே கொண்டாடப்பட்டது.   

பிறந்தநாளையொட்டி அகிலாவை குளிப்பாட்டி அலங்கரித்தனர்.  கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் கஜ பூஜை நடத்தப்பட்டது.  பின்னர் அகிலாவுக்கு மிகவும் பிடித்தமான கடலை மிட்டாய், கொழுக்கட்டை, தர்ப்பூசணி, ஆப்பிள், திராட்சை, வெள்ளரிப்பழம், பேரிட்சை பழம், மாம்பழம், வெள்ளரிக்காய், கேரட்,  பூசணி, முள்ளங்கி, பீட்ருட் முதலிய காய்கனிகள்,  உணவுப் பொருள்களை கோயில் நிர்வாகம்,  பக்தர்கள் சார்பில் வழங்கியது. 

இதுகுறித்து ஜம்புநாதன் கூறியதாவது:

அகிலாவுக்காக கோயில் நந்தவனத்தில் நடைபாதை, பிரத்யேக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.  வனத் துறையினர், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் குளம் அருகே யானை அகிலா சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1,200 சதுர அடியில் பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது. சேறும், சகதியுமாக உள்ள இந்தப் பள்ளத்தில் யானை அகிலா தினமும் ஆனந்த சேற்று குளியல் செய்கிறது. கோயிலுக்கு வருபவர்கள் யானை அகிலாவிடம் ஆசி பெறத் தவறுவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com