பண்பாட்டு திருவிழா

பதிப்பகத்துறையினர் சந்திக்கும் சவால்கள் என்ன? சென்னையில் நடைபெறும் 45-ஆவது புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் அளித்த வரவேற்பு எப்படி?
பண்பாட்டு திருவிழா

பதிப்பகத்துறையினர் சந்திக்கும் சவால்கள் என்ன? சென்னையில் நடைபெறும் 45-ஆவது புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் அளித்த வரவேற்பு எப்படி? கரோனா ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? என்பது பற்றி பபாசி தலைவர் வயிரவன் கூறியதாவது:

குமரன் பதிப்பகத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?

1983-ஆம் ஆண்டுக் குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்தேன். சாதாரண நிலையில் வீட்டில் தொடங்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் பண்ட மாற்று முறையில் புத்தகங்களை விற்பனை செய்தேன். சைக்கிளில் சென்று புத்தகங்களை விற்று வந்தேன். மேலும் வாழ்க்கை வரலாறு நூல்கள், தன்னம்பிக்கை நூல், கல்கி நாவல்கள் சரித்திர நாவல்கள், தேசிய மயமாக்கப்பட்ட புத்தகங்களை அச்சிடுவதில் கவனம் செலுத்தினேன். மேலும் பிரபலங்கள் பலரின் நூல்களை குமரன் பதிப்பகம் தான் வெளியிட்டது. 7ஆவது புத்தகத் திருவிழாவிலிருந்து எனது பங்களிப்பை செலுத்தி வருகிறேன். 

இந்தப் புத்தகக் கண்காட்சி திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

45 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலப் புத்தக விற்பனையாளர்களால் தொடங்கப்பட்டது. ஹிக்கின் பாதம்ஸ், வி.ஐ. பப்ளிகேஷன்ஸ் போன்றவை பிரதானமான அளவில் வகித்தன. வானதி, அருணோதயம் போன்ற தமிழ் பதிப்பாளர்களும் அவர்களுடன் இணைந்து புத்தகக் கண்காட்சி நடத்த ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தினார்கள். இது இப்போது வரை தொடர்கிறது. 

புத்தகக் கண்காட்சி அடிக்கடி இடம் மாறக் காரணம் என்ன?

அண்ணா சாலையிலுள்ள காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த போது 250 அரங்குகள் மட்டுமே அமைக்க முடிந்தது. வாகனங்கள் நிறுத்த போதுமான இடமில்லை. அதனால் செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு இடத்தை மாற்றினோம். அங்கே 600 அரங்குகள் அமைக்கப்பட்டன. எதிரில் உள்ள பச்சையப்பன் கல்லூரி இடத்தை வாடகைக்கு வாங்கிப் பயன்படுத்தினோம். ஆனாலும் இடம் போதவில்லை. நகரின் பிரதான பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தைப் பொருத்தவரை பிரம்மாண்டமான இடம். 5 ஆயிரம் கார், பைக்குகளை நிறுத்த இடம் உள்ளது. இங்கு 800 அரங்குகள் அமைத்துளோம். தினசரி நிகழ்ச்சிகள் நடத்த மேடை, பார்வையாளர்கள் அமரும் இடம், உணவகம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், வாசகர்கள் ஓய்வு அறை எனப் பல வசதிகளை ஏற்படுத்த முடிந்தது. 

அடுத்த ஆண்டு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. இதை விட ப் பெரிய இடம் கிடைக்க வேண்டும். மதுரை, கோவை போன்ற இடங்களில் அரசின் இடத்தைப் பயன்படுத்தும் போது வாடகையில் சலுகை கிடைக்கும். சென்னையைப் பொருத்தவரை இது தனியார் இடம் என்பதால் வாடகையில் சலுகை கிடைக்காது. 

45-ஆவது புத்தகக் கண்காட்சி நடத்துவதில் ஏற்பட்ட சவால்கள் என்ன?

இந்த ஆண்டுப் புத்தகக் கண்காட்சி கரோனா காரணமாகத்  தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலதாமதம் காரணமாக வாடகை அதிகம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது பபாசிக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனைத் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அவர் அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய் தந்து எங்களுக்கு உதவினார். அவரிடம் நாங்கள் இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளோம். சென்னையில் 10க்கு 10 அளவில் நிரந்தரமாகப் புத்தக மார்க்கெட் வைப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளோம். அல்லது பதிப்பாளர் நகரத்தை உருவாக்கி இடங்களை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம். 

கடந்த 2 ஆண்டுகளாகக் கரோனா தாக்கம் காரணமாகப் பதிப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இப்போது தான் சகஜநிலை திரும்பியுள்ளது. ஆனாலும் ஆன்லைன் புத்தகம் விற்பனை இந்த இரண்டு ஆண்டுகள் ஒரு புறம் நடந்து வந்தது. இடையில் டிசம்பர் மாதம் காகிதம் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இப்போது தான் நிலைமை சகஜமாகியுள்ளது. இதனால் 1 மாதம் வரை அச்சிடும் பணிகள் பாதிக்கப்பட்டன.  

கண்காட்சியில் வாசகர்களின் வருகையும், விற்பனையும் பற்றி..? 

மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு 45-ஆவது  சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் விற்பனை சிறப்பாக இருந்தது. சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர். 800 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. விற்பனை அதிகம் என்பதால் பதிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழா வெற்றி பெற காரணம் வாசகர்கள்-பார்வையாளர்கள். மேலும் அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தொல்லியல் அரங்கு, தமிழ் நாடு பாடல் நூல் கழகம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை விளக்கும் அரங்குகள் பார்வையாளர்கள் பெரிதும் கவர்ந்தன. 

புத்தகக் கண்காட்சியை அடுத்து பபாசியின் திட்டம் என்ன? 

தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்த அரசு உதவி செய்கிறது.இதன் காரணமாக வரும் மார்ச் 18 -ஆம் தேதி முதல் நெல்லையிலும், ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை திருவள்ளூரிலும் புத்தகக் கண்காட்சி நடத்த இருக்கிறோம். 

படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடைபெறும். புத்தகக் கண்காட்சியைப் பொருத்த வரை நாங்கள் இதனை ஒரு கலை விழாவாகக் கொண்டாடுகிறோம். காரணம் இது ஒரு பண்பாட்டு திருவிழா. குடும்பத்துடன் அனைவரும் வருகை தந்து தங்களது குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி, அதனை மேம்படுத்தும் முக்கிய விழாவாக இதனைப் பார்க்கிறோம் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com