தலைமுறைக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்

ஓலைச்சுவடிகள் அறிவின் உருவகமாகப் போற்றப்படுகின்றன. ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தியை, கரங்களில் சுவடியை ஏந்திய நிலையில் திருக்கோயில்களில் காணலாம்.
தலைமுறைக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்

ஓலைச்சுவடிகள் அறிவின் உருவகமாகப் போற்றப்படுகின்றன. ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தியை, கரங்களில் சுவடியை ஏந்திய நிலையில் திருக்கோயில்களில் காணலாம். இதேபோன்று கல்விக்குரிய தெய்வமான சரஸ்வதியையும் சுவடியை தாங்கியவளாகவே தரிசிக்கிறோம். திருமாலின் ஹயக்ரீவர் வடிவத்திலும் கையில் சுவடி உண்டு. இவர்களைப் போன்று வசிஷ்டர், வியாசர், கம்பர், அருணகிரியார் போன்றோரை சுவடிகளுடன்தான் தரிசிக்கிறோம். ஆக, காகிதங்கள் பயன்பாட்டுக்கு வரும் முன், ஓலைச்சுவடிகளே அனைத்துக்கும் பயன்பட்டன.

திருஞானசம்பந்தர் வரலாற்றிலும் சுவடிக்கு முக்கிய இடம். சமணர்களோடு அனல் வாதம், புனல் வாதம் செய்தபோது அவர் வகையில் இட்ட ஏடு நீரை எதிர்த்துச் சென்று கரை சேர்ந்த இடம் "திருஏடகம்'. நெருப்பிலிட்டும் எரியாத ஏடு, "போகமார்ந்த பூண்முலையாள்' என்ற திருநள்ளாற்றுப் பாசுரத்தைக் கொண்ட ஏடு என்பது பக்தியுடன் பிணைந்த வரலாற்றுச் செய்தி.

மாணிக்கவாசகப் பெருமான் தனது கரத்தில் சுவடியைத் தாங்கியிருப்பதை காணலாம். இவரது செப்புத்திருமேனியைக் காணும் பொழுது அவர் தாங்கியுள்ள சுவடியில் "திருச்சிற்றம்பலம்' எனவும், "நமச்சிவாய வாழ்க'  எனவும் பொறிக்கப்பட்டிருக்கும். ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் விடுவதற்கும், போகிப் பண்டிகை நாளில் நெருப்பில் இடுவதற்காகவும் வைத்திருந்த ஏடுகளை தேடிச்சென்று சேகரித்து இலக்கியங்களாக பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வே.சா-வை இந்த தருணத்தில் நினைக்கத்தான் வேண்டும். அவர்  இல்லையென்றால் "ஐம்பெருங்காப்பியங்கள்' என்பது நமக்கு வெறும் வார்த்தையாகவே போயிருக்கும்.

ராஜராஜனால் சிதம்பரத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருமுறைகளை முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நரலோக வீரன் என்ற அதிகாரி செப்பேடுகளில் பொறித்து தில்லைக் கோயிலில் வைத்தான் என சிதம்பரம் கல்வெட்டு கூறுகிறது. இதேபோன்று பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1510 - 1218) காலத்தில் திருமுறைகளை பஞ்சவன் பிரமமாமிராஜன் என்பவர் செப்பேடுகளில் பொறித்து வைத்தார் என்பதை தூத்துக்குடி அருகில் உள்ள ஆற்றூர் (ஆத்தூர்) சோமநாதர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதுமட்டுமல்ல ஊர் சபைகளின் பணிகள் நீதிமன்ற குறிப்புகள், நிலங்கள் பற்றிய குறிப்புகள் போன்றவையும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. மேலும் ஆள் ஓலை, நிலவிலை ஓலை, பட்டோலை, கையெழுத்து ஓலை, விலை ஆவண ஓலை என்ற பலவகை ஓலைகளைப் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இறையோலை என்பது வரிவிலக்கு அளித்தது தொடர்பானவை ஆகும். ஆள் ஓலை என்பது மனிதனை விலை பேசி விற்று அதற்காக எழுதி பதிவு செய்யும் ஆவணம் ஆகும். பெரியபுராணத்தில் "தடுத்தாட்கொண்ட புராணத்தில், சுந்தரரை சிவபெருமான் தனக்கு அடிமை' என்று கூறும் வரலாற்றை நாம் அறிவோம். அதனை "ஆள் ஓலை' என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவதைக் காணலாம். இந்நிகழ்ச்சியை சோழர் கால ஓவியமாக தஞ்சைப் பெரிய கோயிலில் கண்டு மகிழலாம்.

பண்டைநாளில் "ஆவணக் களரி'  என்ற அமைப்பு இருந்தது. இது நிலம் சம்பந்தமான குறிப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கியது. இங்கு "வரியிலிடு வரிப் பொத்தகம்' என்ற பெயரில் அலுவலர்கள் பணியாற்றினர். தலைமை அலுவலர் "தினக்கள நாயகம்' என அழைக்கப்பட்டனர்.

அரசன் இடும் ஆணையை ஏற்று ஓலையில் எழுதும் அதிகாரிக்கு "திருமந்திர ஓலை' என்று பெயர். சரியான விவரங்கள் எழுதப்பட்டுள்ளதா என்று ஒப்பிட்டு நோக்குபவர்களுக்கு "திருமந்திர ஓலை நாயகம்' என்று பெயர். நிலம் சம்பந்தப்பட்ட ஆணை என்றால் "ஆவணகாரி' அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு பின்னர் "ஆணத்தி' என்பவரால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை 
கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட "வேள்விக்குடி', "தளவாய்புரம்' செப்பேடுகளில் பழைய ஆதாரமாக ஆவணங்களாக சுவடிகள் குறிக்கப்படுகின்றன.

திருக்கோயில்களில் ஆவணங்கள் சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இவை "சரஸ்வதி பண்டாரம்' என கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான சோமேசுவரர் என்ற சுவாமி தேவர் சிதம்பரம் கோயிலில் சரஸ்வதி பண்டாரத்தை நிறுவினார். இதில் கிரந்தங்கள் (சுவடிகள்) பார்க்கவும், எழுதவும், ஆகமத்தை வாசிக்கவும், ஜோதிட சாஸ்திரம் படிக்கவும், எழுதவும் வல்லுநர்கள் 20 பேர் நியமிக்கப்பட்டனர். இங்கே கரையானால் அழிக்கப் பெற்ற செல்லரித்த சுவடிகளை மீண்டும் புதிய ஓலைகளில் எழுதவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதேபோன்று திருநெல்வேலி அருகிலுள்ள சேரன்மாதேவி கோயிலிலும், ஸ்ரீரங்கம் திருக்கோயிலும் சுவடிகளை சேமித்து வைக்க சரஸ்வதி பண்டாரங்கள் இருந்ததை அறிய முடிகிறது. அரியலூர் அருகே உள்ள திருமழபாடி திருக்கோயிலில் விமானம் ராஜராஜசோழனின் 28-ஆவது ஆட்சி ஆண்டில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அப்பொழுது சுவரில் இருந்த கல்வெட்டுகளை சுவடியில், ஏட்டில் எழுதி கொண்டனர். பின்னர் விமானம் புதுப்பிக்கப்பட்ட பின் மீண்டும் ராஜேந்திரன் சோழன் காலத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. இதனை கல்வெட்டு "ஸ்ரீ விமானத்துல கற்படி மாற்று சொர்த்த பொத்தகப்படி மீளக் கல்வெட்டுவிக்க' என்று குறிப்பிடுகிறது. இங்கு பொத்தகம் என்பது ஓலைச்சுவடி ஆகும்.

தஞ்சை சரஸ்வதி மகால் மற்றும் அரசு கீழ்திசை சுவடி நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம், உ.வே. சாமிநாதய்யர் நூலகம் போன்றவற்றில் இன்றும் பல அரிய சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இலக்கியம், மன்னனின் ஆணை கொடை மட்டுமல்ல மருத்துவம், ஜோதிடம், கலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கொண்ட ஓலைச்சுவடிகள் இன்றும் அடையாளம் தெரியாமல் பலரிடம் உள்ளன. அப்படி உங்களிடமோ, உங்களுக்கு தெரிந்தவர்களிடமோ இருக்குமானால் அதை தூக்கி எறிந்து விடாதீர்கள். உரியவர்களை தேடிச்சென்று வழங்கி பத்திரப்படுத்துங்கள். அதில் நம் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதல்களும் செந்தமிழ் மொழியின் வளம் பெருக்கவும் வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தவும் கூடும்!


தொல்லியல்துறை (ஓய்வு)
படங்கள்  : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com