தமிழகம் போற்றும் 'தேர்த்திருவிழா'

தமிழகத்தில் மாதம்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் போற்றும் 'தேர்த்திருவிழா'

தமிழகத்தில் மாதம்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதத்தில் பல திருக்கோயில்களில் தேர் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவதைக் காண்கிறோம்.

இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் தேர்த் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எனினும் தமிழகத் திருக்கோயில்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகின்றன.

தேர் பற்றிய தொன்மையான குறிப்புகள் வேத நூல்களில் காணப்படுகின்றன. ரிக் வேதத்தில் தேர், குதிரை முதலியன மனிதனுடைய உடல் புலன்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு கூறப்படுகிறது. தேர் செய்யும் முறை பற்றிய மயமதம், மானசாரம் போன்ற சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. தேர்களில் விஜயம், காந்தம், ஸ்ரீ கேசம், விசாலம், நிபத்திரம், பத்ர விலாசம் என்று பல வகைகள் உள்ளது பற்றி குமார தந்திரம் என்ற ஆகம நூல் குறிப்பிடுகிறது.

சங்க இலக்கியங்களிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஒரே பகலில் தேர்களைச் செய்யும் தச்சன் இருந்ததாக புறநாநூறு கூறுகிறது. படர்வதற்கு இடம் இல்லாமல் தவித்த முல்லைக்கொடிக்கு தனது தேரையே அளித்த பாரிவள்ளல் பற்றி நாம் அறிவோம். மேலும் பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகையிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தேரில் அரசன் ஏறிச் செல்வது போர்களில் பயன்படுத்துவது போன்ற பிரிவுகள் இருந்தன. திருக்கோயில்களில் விழாக்களின் போது மக்கள் இருக்கும் தேரினை இரதம் என்று கூறுவர். மாடுகள் இழுக்கும் ரதத்தினை கோரதம் எனக் குறிப்பிடுவர். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் அன்று பெருமாள் உலா வரும் தேர் கோரதம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரதன் பத்து திசைகளிலும் தனது தேரை செலுத்த வல்லமை பெற்றிருந்ததால் "தசரதன்' என அழைக்கப்பட்டார் என அறிகிறோம்.

பசுவின் கன்றின் மீது தேரினை ஏற்றிக் கொன்ற தனது மகனை, மகன் என்றும் பாராமல் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன் வரலாறு அழகிய சிற்பமாக தனிக்கோயிலாக வடிக்கப்பட்டுள்ளது. இதனை திருவாரூர் கோயிலில் கண்டு மகிழலாம். இதே வரலாற்றை சென்னை அருகே மப்பேடு சிங்கீஸ்வரர் கோயிலிலும் திருக்கோடிக்காவல் கோயிலிலும் தொடர்ச்சிற்பமாக காணலாம்.

திருநாவுக்கரசர் பெருமான் தனது திருப்பதிகத்தில் கோயிலின் அமைப்பில் பல வகைகளை பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒன்று கரக்கோயில். சிதம்பரம் அருகிலுள்ள மேலக்கடம்பூர் கோயிலில் கருவறை தேர் வடிவில் சக்கரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோயிலை "தென் கடம்பூர் கரக்கோயிலான்' என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்.

சிதம்பரம் கோயிலில் ஆடவல்லான் எழுந்தருளும் கருவறைக்கு எதிரே "நிருத்த சபை' என்ற மண்டபம் உள்ளது. இங்கு இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடும் நிலையில் கண்டு வணங்கலாம். இம்மண்டபத்தில் இரு பக்கங்களிலும் சக்கரங்களும், அதனை குதிரை இழுத்துச் செல்வது போன்ற சிற்பமும் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் தேர் கோயில் என விக்கிரம சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது போன்ற அமைப்பு உள்ள தேர் மண்டபங்களை ஸ்ரீரங்கம், தாராசுரம், கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோயில், துக்காச்சி, திருப்புவனம், திருவக்கரை, குன்றாண்டார் கோயில் போன்ற பல கோயில்களில் காணலாம்.

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயிலில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது, திருமங்கையாழ்வார் இத்தலத்தில் "திருவெழுக்கூற்றிருக்கை' என்று சித்திரக் கவிதையை - தேர் போன்று ரத சம்பந்த அமைப்பில் பாடி அருளியுள்ளார். இக்கோயிலில் கருவறையும் தேர் வடிவில் குதிரை யானை இழுப்பது போல அமைந்துள்ளது. இதனை "வைதீக விமானம்', "சோமசந்த விமானம்' என குறிப்பிடுகின்றார்.

சிற்பங்களிலும் தேர் வடிவம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழிக்கச் செல்லும் போது தேரில் செல்கிறார். தேரை பிரம்மன் செலுத்த சூரியன்- சந்திரன் இருவரும் சக்கரங்களாக அமைகின்றனர். அத்தகைய நிலையில் இருக்கும் சிற்பங்களை திருவதிகை, தாராசுரம், காஞ்சிபுரம், தஞ்சை கோயில்களில் காணலாம்.

சூரியனது வடிவம் உள்ள சிற்பங்களில், ஒரு சக்கரம் உடைய தேரின் மீது ஏழு குதிரைகள் இழுத்து வரும் நிலையில் காணலாம். இத்தகைய சிற்பங்களை சிதம்பரம், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களில் காண முடிகிறது. காதல் தெய்வமான மன்மதனும் வில்லேந்தி தேரில் செல்வது போன்ற சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் காணப்படும் ஓவியங்களிலும் தேர்கள் இடம் பெற்றுள்ளன. ராமாயண காப்பியத்தைப் சித்திரிக்கும் ஓவியங்களில் ராமனும் ராவணனும் போர் செய்யும் காட்சிகளில் தேரில் இருவரும் நின்று போர் செய்வதைக் காண முடிகிறது. மதுரையில் கோயிலில் கொண்டு விளங்கும் தேவி மீனாட்சி எண்திசை காவலர்களுடன் போரிடும் "திக்விஜய காட்சி' பொற்றாமரை குளம் அருகே மண்டபத்தில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். நாயக்கர் கால ஓவியம் இது. மீனாட்சி தேரில் இருந்தபடி போர் செய்யும் காட்சியைக் காணலாம்.

தேர்த் திருவிழாக்கள் பல திருக்கோயில்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மதுரை, திருவையாறு, திருவிடைமருதூர், திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, எலவனாசூர் போன்ற பல திருக்கோயில்களில் தேர்த்திருவிழா நடத்தவும், தேர்களையும் செய்து அளித்ததாகவும் தேரினை நிறுத்தவும் "தேர்முட்டிகள்' செய்தளித்ததைப் பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மதுரை நாயக்க மன்னர்கள் பலவகையான காசுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்று, ஒருபுறம்; தேரின் வடிவமும் மறுபுறம் ஸ்ரீதர என்ற தெலுங்கிலும் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்க மன்னர் மதுரை கோயிலுக்கு தேர்களை செய்து அளித்துள்ளார். அதன் நினைவாக இக்காசுகளை வெளியிட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பல திருக்கோயில்களில் தங்கத்தேரில் இறைவன், இறைவி எழுந்தருளுவதைக் இன்றும் காண்கிறோம். பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம்,ரத்தனகிரி, திருவேற்காடு, வடபழனி,மயிலை முண்டகக் கண்ணியம்மன் கோயில் போன்ற பல திருக்கோயில்களில் தங்கத்தேர் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தேர் மரத்தால் செய்யப்பட்டாலும் ஒரு தேரினில் கோயிலின் அனைத்துப் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை "நகரும் கோயில்' எனக் குறிப்பிடுவர். தேரில் இறைவனை தரிசித்தால் மறுபிறவி கிடையாது எனவும் தேரோட்டம் நாட்டில் அமைதியையும், செழிப்பையும் உண்டாக்கும் எனவும் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய தேர்த் திருவிழாக்கள் மக்கள் கூடி இன்புறவும் ஆன்மீகம் சிறக்கவும் தொடர்ந்து நடக்கவேண்டியது இன்றியமையாதது.

(தொல்லியல்துறை - பணி நிறைவு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com