ஜடேஜா என்கிற ஜாம்பவான்!

""ஜட்டு'' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா அண்மைக் காலமாக இந்திய அணியின் பொக்கிஷமாக மிளிர்ந்து வருகிறார்.
ஜடேஜா என்கிற ஜாம்பவான்!


""ஜட்டு'' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா அண்மைக் காலமாக இந்திய அணியின் பொக்கிஷமாக மிளிர்ந்து வருகிறார். ஒரு நாள், டெஸ்ட், டி 20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனி முத்திரை பதித்து வரும் ஜடேஜா, உலகின் நம்பர் ஒன் "ஆல் ரவுண்டர்' என ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் அறிந்தது தான். 

ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங், பீல்டிங், பெளலிங் என அனைத்திலும் அபாரமாக செயல்படுவதால், ரசிகர்கள் இவரை "சர் ஜடேஜா' என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். ஜடேஜாவுக்கோ சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் தான் அபரிமிதமான ஆர்வம்.  

அவரது தாய் லதா 2005-இல் நடந்த விபத்தில் உயிரிழந்தது ஜடேஜாவின் வாழ்வில் சோகத்தை ஏற்படுத்தியது. 

2005-ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உள்பட்ட இந்திய அணியில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டார். 2008-இல் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோர் உலகக் கோப்பை போட்டியில் விராட்  கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.  இறுதிப் போட்டியில் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஜடேஜா.  அந்தத் தொடரின் துணை கேப்டனாக இருந்த ரவீந்திர ஜடேஜா. இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பீல்டிங்கிலும் புயலாகச் செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு துணை புரிந்தார். 

ஒருநாள் போட்டியில் அறிமுகம்: 2009-இல் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல்முறையாக ஆடும் இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்தப் போட்டியில் 8-ஆவது வீரராக இறங்கி 60 ரன்களை ஸ்கோர் செய்தார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவினாலும் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  பின்னர் டி20 அணியிலும் இடம் பெற்று பிரகாசிக்கத் தொடங்கினார். 

முதல் தரப் போட்டிகளில் 3 முறை முச்சதம்:     2011- இல் ஒடிஸா அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் 8-ஆவது ஆட்டக்காரராக களம் இறங்கி முச்சதம் (314 ரன்) அடித்து, முந்தைய கிரிக்கெட் ஜாம்பவான்களான டான் பிராட்மேன், பிரெயன் லாரா, கிரீம் ஹிக் போன்றவர்களின் சாதனையை சமன் செய்தார். குஜராத்துக்கு எதிராக 2012-இல் 303 நாட் அவுட். அதே ஆண்டில் ரயில்வே அணிக்கு எதிராக 331 ரன்களைக் குவித்தார். இந்த 3 முச்சதங்களையும் அடிக்கும்போது அவருக்கு வயது 23 மட்டுமே. 

ஐபிஎல் போட்டிகளிலும் சாதனை: ஐ.பி.எல் போட்டிகளைப் பொருத்த வரையிலும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் "தல' தோனியின் செல்லப்பிள்ளை ஜடேஜா தான். 

2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா, அந்த அணி கோப்பை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார்.  தற்போது வரையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்று ஆட்டத்தில் அசத்தி வருகிறார். 

டெஸ்டில் இதுவரை 2 சதங்களையும், 17 அரைச் சதங்களையும் விளாசியுள்ள இவர் கடைசியாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 175 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்ததுடன் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் ஐ.சி.சியின் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டராகத் தேர்வு செய்யப்பட்டதுடன், அந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.  அதே போல் ஒருநாள் ஆட்டங்களிலும் அணிக்கு நம்பிக்கை தரும் வீரராக திகழ்கிறார் ஜடேஜா.

ஒரு நாள் போட்டிகளிலும் அசத்தல்: 168 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,411 ரன்களையும், 188 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் கோப்பைக்கான போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் இந்தியா மோதி பட்டத்தை வென்றது. அந்தப் போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் விருதையும், 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதால்  "தங்கப் பந்து' விருதையும் ஜடேஜா வென்றார்.

இப்படி இந்தியா வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் தனது பங்களிப்பை சரியாகச் செய்யும் ஜடேஜாவை ரசிகர்கள் கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com