முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம்
By எம். சர்க்கரை முனியசாமி | Published On : 08th May 2022 06:00 AM | Last Updated : 08th May 2022 06:00 AM | அ+அ அ- |

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் விளையாடுவது கிரிக்கெட், கபடி, தடகளம், பேட்மிட்டன், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளைதான்!
ஆனால், பிரபலம் அடையாத விளையாட்டுகளில் ஒன்றான வாள் சண்டை போட்டியில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட கமுதியை அடுத்த செந்தனேந்தல் கிராமத்தைச் விவசாயி சண்முகவேல் -ராமு தம்பதியின் மகன் சபரி இளஞ்செழியன்(17) என்பவர் ஆர்வமாக விளையாடி, பதக்கங்களைக் குவித்து வருகிறார்.
இவர் ஒன்று முதல் 8- ஆம் வகுப்பு வரை கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த அவர், பிளஸ் 2 படித்துவருகிறார்.
ஓட்டப் பந்தயப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற தனது சகோதரி சண்முகப்பிரியாவின் அறிவுறுத்தலின்பேரில், சபரி இளஞ்செழியன் வாள் சண்டை பயிற்சியைத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக ஓடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில், சபரி இளஞ்செழியன் தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். இதனால், அவர் பிரான்ஸில் நடைபெறும் வாள் சண்டை போட்டியில் விரைவில் பங்கேற்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வாள் சண்டை போட்டிகளிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, பெரும்பாலான வீரர்களை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் தேசத்துக்காக விளையாடி பதக்கம் வெல்வதே லட்சியம் என்றார் சபரி இளஞ்செழியன்.