காமெடியன்கள் எல்லாம் காரியவாதிகள்!

""வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா எங்கேயும் இல்லை.
காமெடியன்கள் எல்லாம் காரியவாதிகள்!


""வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப்  பிரிக்கவே முடியாது. சமானியனாக பார்த்த விஷயங்களை சினிமாவுக்கான

இலக்கணத்தை கொண்டே இதை எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்கு சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை.  சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர்.  ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்தச் சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், வறுமையால்  எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை.

இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன.  கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஓர் உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.'' எதார்த்தமாகப் பேசுகிறார் இயக்குநர் வேலன்.   "மெய்ப்பட செய்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

தலைப்பின் வழியாக எதுவும் சொல்ல வர்றீங்களா....

கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான்   இப்படியொரு தலைப்பு. காந்தியும் ஹிட்லரும் ஒரே தெருவில் இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர்கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனிதனுக்கு  அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கீரிடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையைக் கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னைக் கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்குக் கைக் கூடி வருகிறது. அதைக் கதையின் வழியே கடத்தியிருக்கிறேன். 

உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

எல்லாவற்றையும் கடந்ததுதான் இந்த வாழ்க்கை. இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை,  பெட்ரோல், கேஸ் விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ காருக்கு வரி குறைப்பவர்களை, தேங்காய்பத்தைகளோடு விலையில்லா மிக்ஸிக்கு காத்திருப்பவர்களை, இன்னும் ஐ.சி.யூ. காட்சிகளை வைக்கும் சீரியல்காரர்கû,  தமிழ்நாட்டில் வறுமைக்கோடே இல்லை என்று அறிவிக்கும் அதிகாரத்தை,   சேனல் 4 காட்சிகளை தாண்டி வந்த தமிழர்களின் வாழ்வுரிமையைப் பற்றி பேசவே பயப்படும் அரசியல்வாதிகளை... கடந்துதான் இந்த வாழ்க்கை . கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்துவிட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கர காமெடியன்களாக சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக, கல்வித் தந்தையாக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட குற்றங்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.  

கதையின் வழியாக சொல்ல வருவது....

வறுமையால் தடம் மாறி செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவை பொருத்தவரை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்களின் முன்னேற்றுத்துக்குப் பயன்படுத்தும் முதலாளிகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. பாலியல் தொந்தரவு இல்லாத நாடு என்பது மகாத்மா காந்தியின் கனவுகளில் ஒன்று. ஆனால், இன்றைய இந்தியாவில் பாலியல் தொந்தரவு செய்திகள் என்பது வழக்கத்துக்குரிய ஒன்றாகி விட்டது. இப்படி ஒரு பெண் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் தழுவலாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்பதுதான் படத்தின் நோக்கம். கிராமம், பெரு நகரம் என கதை பயணித்து வளரும்.

புதுமுகங்கள்தான் உங்கள் நம்பிக்கையா...

எல்லோருக்கும் நல்ல மனசு உண்டு. கதையையும், அதன் தன்மையையும் புரிந்துக் கொண்டு துணைக்கு வந்தார்கள். ஆதவ் பாலாஜி கதாநாயகன். அவருக்கு ஜோடி மதுனிகா. இருவரும் கதைக்கும் எனக்கும் அவ்வளவு பொருந்தி வந்தார்கள். ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின் என கதாபாத்திரங்களை தாங்கிப் பிடிக்கிறவர்கள் அவ்வளவு அருமை.   இவர்களின் பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com