உருவாகிறது - சுனாமி தயார் கிராமங்கள்!

உலக வரலாற்றில் "பாக்ஸிங் டே சுனாமி' என்று அழைக்கப்படும் 2004-ஆம் ஆண்டு பேரலையின் பேரழிப்பு நடந்துமுடிந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. 
உருவாகிறது - சுனாமி தயார் கிராமங்கள்!


உலக வரலாற்றில் "பாக்ஸிங் டே சுனாமி' என்று அழைக்கப்படும் 2004-ஆம் ஆண்டு பேரலையின் பேரழிப்பு நடந்துமுடிந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், பேரலையை எதிர்கொள்ள "சுனாமி தயார் கிராமங்கள்' உருவாகி வருகின்றன.

2004-ஆம் ஆண்டு டிச. 26-இல் (ஞாயிற்றுக்கிழமை) இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான பேரலை, இந்தியப் பெருங்கடலைச் சார்ந்த 14 நாடுகளின் கரையோரங்களையும் சூறையாடியது. இதில், 2.28 லட்சம் பேர் இறந்தனர். இந்தோனேஷியாவில் 1.68 லட்சம் பேர், இலங்கையில் 35 ஆயிரம் பேர், இந்தியாவில் 16 ஆயிரம் பேர் அவர்களில் அடக்கம். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரமாக இருந்தது. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மட்டும் 6,065 பேர் இறந்தனர்.

நாகை அருகேயுள்ள கீச்சாங்குப்பம்தான் அன்றைய சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் 600-க்கும் அதிகமானோர் இறந்தனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த 400 மாணவர்களில் 80 பேர் என்ன நடந்தது என்று தெரியாமலே இறந்தனர். சுனாமி பாதிப்புக்குப் பிறகு, இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 2008-இல் 190- ஆகவும், 2013-இல் 92 ஆகவும் குறைந்தது.

இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற இரா. பாலு, தனக்கு இருமுறை கிடைத்த பதவி உயர்வையும் துறந்துவிட்டு, பள்ளியின் வளர்ச்சியைக்குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறார். இவரின் பெரும் முயற்சியால், கிராம பஞ்சாயத்தார்கள் உதவியுடன் செயல்படும் மழலையர் வகுப்பையும் சேர்த்து 611 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழும் கிடைத்துள்ளது. நிகழாண்டு மட்டும் இந்தப் பள்ளியில் 152 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அலாரம் ஒலித்தால், மாணவர்கள் பதற்றப்படாமல் உடனடியாக பள்ளி மைதானத்தில் ஒன்றுகூடி, பள்ளியின் 2- ஆவது மாடிக்கு பொறுமையாகச் செல்ல வேண்டும் என கற்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்றல் காரணமாக, 2019-இல் ஜப்பானில் நடைபெற்ற சுனாமி விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்க, கீச்சாங்குப்பம் பள்ளித் தலைமையாசிரியர், 5 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்த நிலையில், அங்கு வெப்பம் உறைநிலையில் இருக்கும் என்று கூறப்பட்டதால், அச்சம் காரணமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளைஅனுப்பவில்லை.

2004-ஆம் ஆண்டு பேரிடருக்குப் பிறகுதான் உலக சுகாதார நிறுவனத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் விரிவு பெற்றன. குறிப்பாக, இந்திய அரசு, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், கடல் தகவல் சேவைக்கான இந்திய மையத்தில், சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை அக். 2007-இல் ஹைதராபாத்தில் நிறுவியது.

மேலும், யுனெஸ்கோவின்- அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணைய (ஐஓசி) கட்டமைப்பின் ஒருபகுதியாக இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கும் சுனாமி குறித்த ஆலோசனைகளை வழங்குகிறது. சர்வதேச அளவில், ஆழ்கடல் சுனாமி கண்டறிதல் மிதவைகளை பல நாடுகளும் உருவாக்கியுள்ளன. இவையெல்லாம் சுனாமிகள் நிலத்தை அடைவதற்கு முன்பே அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, நிகழ்நேரத்தில் அறிக்கையிடும் திறனை மேம்படுத்துகின்றன.

அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள நவீன மிதவை அமைப்புகள் ஆழமான கடலில் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான கடல்மட்ட மாற்றங்களை அளவிடும் திறன்கொண்டவை. இந்தத் தகவல்கள் "நாடுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தால்' உலக நாடுகளுக்கு பரப்பப்படுவதால், பேரலை பேரிடரை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தயார்நிலையிலேயே உள்ளன.

இந்த நிலையில், யுனெஸ்கோ தனது அமைப்பான ஐஓசியின் கீழ் சுனாமி தயார் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்வாயிலாக, 2030- ஆம் ஆண்டுக்குள் கடற்கரையோர மக்கள் 100 சதவீதம் பேரலை ஆபத்தை தாக்குப்பிடிக்கச் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடலோரச் சமூகத்தின் தயார்நிலையை மேம்படுத்துவது, உயிர், உடைமை இழப்புகளை குறைப்பதற்கான, சமூகச் செயல்திறன் அடிப்படையிலான சுனாமி ஆயத்த ஊக்குவிப்பு நடவடிக்கையே, சுனாமி தயார் திட்டமாகும்.

இதன்படி, கடலோர கிராமங்கள், தங்கள் திறன்களை வெற்றிகரமாக வளர்த்து, இதற்கான 11 வழிகாட்டு முறைகளை நிரூபித்துக் காட்டும்போது அவை உரிய அமைப்புகளால் மதிப்பீடு செய்யப்பட்டு யுனெஸ்கோ -ஐஓசி.யின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தியாவில், இந்தப் பயிற்சிகளை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், தேசிய சுனாமி தயார் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிஸா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், அந்த மாநிலத்தின் 6 கிராமங்களில் சுனாமி தயார் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது. இந்தக் கிராமங்களை ஆய்வு செய்த தேசிய சுனாமி தயார் வாரியம் 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் யுனெஸ்கோ அங்கீகாரத்துக்காகப் பரிந்துரைத்தது.

இதனடிப்படையில், அதன் மதிப்பீடு செயல்முறைக்குப் பிறகு, 2 கிராமங்களை சுனாமி தயார் கிராமங்களாக யுனெஸ்கோ- ஐஓசி அங்கீகரித்து , 2020 ஆக. 7-இல் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வில் சான்றிதழ் வழங்கியது.

இதன்மூலம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சுனாமி தயார்நிலை அங்கீகாரத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதில், முதல் மாநிலம் என்ற பெருமை ஒடிஸாவுக்குக் கிடைத்துள்ளது.

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையை கொண்ட (1076 கி.மீ) இரண்டாவது மாநிலமான தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில், 608 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெருமளவு கிராமங்கள் எதிர்காலத்தில் சுனாமி தயார் கிராமங்களாக உருவாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com