"எம்ஜிஆரிடம் இல்லாதது என்னிடம்  என்ன இருக்கிறது?' 

எழுத்தாளர்  அகிலனின் வீடு தேடி வருவதாக எம்ஜிஆர்  சொல்லி, "உங்களிடம் ஒன்று கேட்பேன்.
"எம்ஜிஆரிடம் இல்லாதது என்னிடம்  என்ன இருக்கிறது?' 

எழுத்தாளர் அகிலனின் வீடு தேடி வருவதாக எம்ஜிஆர் சொல்லி, "உங்களிடம் ஒன்று கேட்பேன். மறுக்காமல் உதவி புரிய வேண்டும்' என்று கூறினார். அவரிடம் இல்லாதது தன்னிடம் என்ன இருக்கிறது என்று அகிலனும் குழம்பியே விட்டார்.

தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் அகிலன்.

1922 ஜூன் 27-இல் பிறந்த அகிலாண்டம்தான் பின்னாளில் அகிலன் ஆனார். அவரது சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள பெருங்களூர். புதின இலக்கியத்தில் "மணிக் கொடி' காலம் என்ற முத்திரை இருந்தது. அதுபோல, குழந்தை இலக்கியத்தின் "மணிக்கொடி' காலம் புதுக்கோட்டையிலிருந்து குழந்தைகளுக்கான இதழ்கள் பல வெளிவந்தது அறுபதுகளில்தான்.

பாலர் மலர், சங்கு டமாரம் போன்ற சிறுவர் பத்திரிகைகள் வெற்றிகரமாக வெளிவந்தன. "மலர் மாமா' என்ற பெயரில் அகிலன் குழந்தைகளுக்காக எழுதிவந்தார். இது பெரும்பான்மையான அகிலன் வாசகர்களுக்குத் தெரியாத செய்தி!

ரயில் தபால் சேவைப் பிரிவில், அகிலன் பணிபுரிந்து வந்தார். பணி காரணமாக சென்னையிலிருந்து ராமேசுவரம் வரை அன்றைய "போட் மெயிலில்' வந்து செல்வார். புதுக்கோட்டையில் "போட் மெயில்' நிற்கும் ஐந்து நிமிட வேளையில் இலக்கிய ஆர்வலர்கள் அவருடன் பேசக் கூடிவிடுவர்.

"கல்கி' சதாசிவம் புதுக்கோட்டைக்கு வருகை தந்தபோது, அகிலனின் நண்பர் வெங்கட்ராமன் "தங்கநகரம்' குறுநாவலை அன்பளிப்பு செய்தார்.

அகிலனின் எழுத்தை நேசிக்கும் சதாசிவம் " ஓ... அகிலன் எழுதியதா... எந்த இதழில் வெளி வந்தது...' என்று கேட்க... "எந்த வார இதழிலும் வெளிவரவில்லை. நேரடியாகப் புத்தகமாக வெளிவந்துள்ளது..' என்றார். "அப்போ நான் கல்கியில் தொடராக வெளியிட ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னதுடன், உடனடியாக வெளியிட்டார்.

1945-இல் "கலைமகள்' நடத்திய நாவல் போட்டியில் அகிலன் எழுதிய "பெண்' நாவல் முதல் பரிசுக்குத் தகுதி பெற்றது. அகிலனின் "வேங்கையின் மைந்தன்', கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது .

"வேங்கையின் மைந்தன்' சாகித்திய அகாதெமி விருதை பெற்றது. சிவாஜி கணேசன் அதனை நாடகமாக்கி அரங்கேற்றினார்.

"விகடன்" இதழில் எழுதிய "சித்திரப்பாவை' நாவல் ஞானபீட விருதினை பெற்றுத்தந்தது. "கல்கி' இதழில் தொடர்கதையாக வெளியான அகிலனின் "பாவை விளக்கு' வாசகர்களை வசீகரித்ததுடன், இயக்குநர் கே.சோமுவின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியானது.

"பாவை விளக்கு' திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், சௌகார் ஜானகி ஆகியோர் வாழ்ந்தனர். அகிலனின் "வாழ்வு எங்கே' நாவல், "குலமகள் ராதை' திரைப்படமானது. கல்கியில் அகிலன் எழுதிவந்த "கயல்விழி' நாவல் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கவரப்பட்டவர்களில் ஒருவர் எம்ஜிஆர். எம்ஜிஆருடனான அகிலன் சந்திப்பு குறித்து, அவரது மகனும் பதிப்பாளருமான அகிலன் கண்ணன் கூறியதாவது:

ஒருநாள், வீட்டு தொலைபேசியில் எம்ஜிஆர் அழைத்தார். போனை எடுத்த அகிலனிடம், "நான் எம்ஜியார் பேசுகிறேன். இன்று மாலை உங்கள் வீட்டுக்கு வருகிறேன். உங்களிடம் ஒன்றைக் கேட்பேன். நீங்கள் மறுக்காமல் தர வேண்டும்' என்றார். பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்தார்.

சொன்ன மாதிரியே மாலை ஐந்தரை மணிக்கு எம்ஜிஆர் வந்தார். அதற்குள் வீட்டைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த சற்று நேரம் பேசிவிட்டு, அப்பாவை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்று தாளிட்டார். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர். எம்ஜிஆர் புறப்பட்டுப் போன பிறகு, "கயல்விழி'யை எம்ஜிஆர் படமாகத் தயாரிக்கப் போகிறாராம். எனது சம்மதம் கேட்கத்தான் எம்ஜிஆர் வந்தார்' என்றார்.

"கயல்விழி' வெள்ளித்திரையில் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' ஆனது. எழுத்தாளர் ஒருவரது மூன்று படைப்புகள் திரைப்படமானது இதுதான் முதல்முறை என்றார் கண்ணன்.

பத்திரிகையைத் தொடங்க அகிலனுக்கு விருப்பம் இருந்தது. "பத்திரிகை நடத்த கட்டுரைகள், சிறுகதையைத் தேடித் போக வேண்டும். பிறகு விளம்பரங்கள் பெற போராட வேண்டும். உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளன் வெளியே வர மாட்டான். அதனால் பத்திரிகை தொடங்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, தொடர்ந்து எழுதுங்கள்' என்று புதுக்கோட்டை கண்ணபிரான் அச்சக உரிமையாளர் பரசுராமன் சொன்னார்.

இதனால், அகிலன் பத்திரிகை நடத்தும் ஆசையைக் கைவிட்டார். அப்படி அவர் செய்திருக்காவிட்டால், தமிழ் உலகம் ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்திருக்கும்..!

27-6-2022-இல் அகிலன் நூற்றாண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com