கண்ணாடி - வரலாற்று நோக்கில்!

கண்ணாடி  ஒரு மங்கலப் பொருள்.  நம்மில் சிலர் பொழுது விடிந்து எழுந்தவுடன் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது வழக்கம்.
கண்ணாடி - வரலாற்று நோக்கில்!

கண்ணாடி  ஒரு மங்கலப் பொருள்.  நம்மில் சிலர் பொழுது விடிந்து எழுந்தவுடன் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது வழக்கம்.  பெண்கள் தங்கள் அழகைக் கண்ணாடியில் அடிக்கடி பார்த்து ஒப்பனை செய்து கொள்வதும் உண்டு.

தமிழ்நாட்டில் கண்ணாடி சங்கக் காலத்துக்கு சற்று முன்னே, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கண்ணாடி ஒன்று கிடைத்துள்ளது.  உலோகத் தகட்டை நன்றாகப் பளபளப்புடன் செய்து அதில் முகத்தைப் பார்த்துகொள்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் உலோகத்திலான கண்ணாடி கிடைத்துள்ளது.  அண்மையில் மதுரையில் துவரிமான் என்ற இடத்திலிருந்து வட்ட வடிவமுள்ள உலோகத் தகடு கிடைத்துள்ளது. அதில் ஒரு பகுதியில் சிறு கைப்பிடி உள்ளது. கண்ணாடியானது தர்ப்பணம், ஆடி, ஒளி வட்டம், படிமக்கலம், கஞ்சனம், முகுரம்,  அத்தம், புளகம் என்று பல்வேறு பெயர்களிட்டு அழைக்கப்படுகிறது.


சங்க இலக்கியத்தில் பெண்கள் கண்ணாடியைப் பார்த்துத் தங்களை அழகு செய்து கொண்டனர் என்று பல குறிப்புகள் வருகின்றன.

"வாசறு நெய்யாடி வான்று கண்
மாசறக் கண்ணடி வயக்கிய வண்ணமுந்
தேசுறு மொளியுந் திகழ நோக்கி
வாச மணத்துவர் வாய்கொள்வோரும்'
"நிழல் காண் மண்டில நோக்கி
யழல் புனையவிரிழை திருத்துவாள்'    - பரிபாடல்

பெண் ஒருத்தி  கண்ணாடி நோக்கி அழகு செய்து கொண்டது பற்றி அகநானூறு கூறுகிறது. 

எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து
உள்ளு தாவியிற் பைப்பய நனுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து.

திருமாலை கோதை நினைந்து உருகுகிறாள். அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து தன் அழகைத் திருத்திக் கொள்கிறாள்.  திருமால் மீது அவள் கொண்டிருக்கும் காதல் நிலையைப் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். 

காறை  பூணும் கண்ணாடி
காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம்
போர்த்தேவன் திறம் பிதற்றும் 
                               மாறில் மாமணிவண்ணன்
மேல் இவள் மால் உறுகின்றாளே.     - பெரியாழ்வார்
திருப்பாவையில் தோழிகள் கூறுவதாக ஒரு குறிப்பு வருகிறது. இதில் கண்ணாடியை "தட்டொளி' என 
அழைக்கின்றனர்.
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும தந்து 
                                            உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டேல்  
                                            ஓர் எம்பாவாய்

போரில் வேற்றரசர்களின் கொடியைப் பிடித்தல் ஒரு வெற்றியாகக் கருதப்பட்டது.  நந்திவர்மனுடைய தானைத் தலைவன் உதயச்சந்திரன் என்பவன் உதயணன என்னும் வேட அரசனை வென்று,  அவனுடைய மயில் தோகைகளால் செய்யப்பட்ட கண்ணாடிக் கொடியைக் கைப்பற்றினான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன.

ராஜ ராஜசோழன் குளித்த பின் நெற்றியில் திருநீறு முதலியவற்றை அணிந்து கொண்ட பின்னர்,  தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து அழகு செய்து கொண்டான் என இராஜராஜன் உலா கூறுகிறது.

பவளச் சடையோன் பணித்தப் படியே
தவளதிரி புண்டரஞ்ச சார்த்திக் குவளைப்பங்
கார்க்கோலம் ஆடியிற் காண்பான்.        - ராஜராஜன் உலா 45-46

கண்ணாடி சேவை: வைணவக் கோயில்களில் "கண்ணாடி சேவை' என்ற வழிபாடு நடப்பது வழக்கம். இறைவன் வீதியுலா செல்வதற்கு முன்னர் அலங்காரம் முடித்த பின்னர் கண்ணாடியைப் பார்த்துச் செல்லும் வழக்கம் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறுகிறது. பல கோயில்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருவதைக் காணலாம்.

கல்வெட்டுகளில்..: இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்ணாடியை அரசர்கள் கோயில்களுக்கு தானமளித்தனர் எனப் பல கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிதம்பரம் கோயிலில் நடராஜப் பெருமானுக்குக் கண்ணாடி ஒன்று குலோத்துங்கச் சோழனால் அளிக்கப்பட்டது. திருமழப்பாடி கோயிலுக்கு "இருப்புற வனமட்ட திருக்கண்ணாடி'  ஒன்று அளிக்கப்பட்டது. அது செம்பால் செய்யப்பட்டு பொன் தகடு பொருத்தப்பட்டது. இதில் பாவைகள் ஆடுவது போலவும், உடுக்கை வாசிப்பது போலவும், மத்தளம் கொட்டுவது போலவும், பாடுவதுபோலவும் அழகு வேலைகள் செய்யப்பட்டிருந்தன. இதன் எடை 80 பலம் என அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. இறைவன் எழுந்தருளியுள்ள கருவறை முன்பு வட்ட வடிவமான கண்ணாடி நிறுத்தப்பட்டிருப்பதை பல கோயில்களில் காணலாம்.

சிற்பங்களில்,  ஓவியங்களில்..: பெண் கண்ணாடியைப் பார்த்துத் திலமிடும் நிலையில் உள்ள சிற்பங்களைத் திருநெல்வேலி, குற்றாலம்,  காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம்,  தென்காசி, கொடும்பாளூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலிய கோயில்களில் காணலாம்.  தாராசுரத்தில் உள்ள புடைப்புச் சிற்பத்தில் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் நிற்கிறாள். மற்றொரு பெண் அதைப் பார்த்து ஒப்பனை செய்துக் கொள்ளும் நிலையில் உள்ளது. குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள அர்த்தநாரி சிற்பத்தில் பெண் பாகத்தில் (உமையவள்) கண்ணாடியை ஏந்தியிருக்கும் நிலையில் சிற்பம் உள்ளது.

ராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை ஓவியங்களில் ஒரு பெண் கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த அலங்காரக் கண்ணாடி ஒரு கோபுரம் போல உள்ளது. இங்கேயே இன்னொரு இடத்திலுள்ள மற்றொரு ஓவியத்தில் கல் பதிக்கப்பட்ட கண்ணாடியை ஒரு தாதி பிடித்திருக்க, தன்னை ஒயிலாக அலங்கரித்துக் கொள்ளும் ஆடல் பெண்ணின் ஓவியமும் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இராமாநுஜர் சந்நிதியில் உள்ள ஓவியத்தில் கோதை தன்னை மலர் மாலைகளைச் சூடிக் கொண்டு கண்ணாடியில் பார்க்கிறாள். அவளுக்கு எதிரில் பெரியாழ்வார் பூக்குடையுடன் அமர்ந்திருக்கிறார். அதன் கீழ் "அம்மவாரு பூலு சூல்லுக அந்தம் சூசனதி' என்றும் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் கி.பி. 17-18- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

இவ்வாறு சிற்பங்கள், ஓவியங்கள் முதலியவற்றில் நோக்கும்பொழுது கண்ணாடி எவ்வாறு செய்யப்பட்டது' காலப்போக்கில் அதன் உருவத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com