சாலைக்கு நூற்றாண்டு விழா

சாலை ஒன்றுக்கு  நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
சாலைக்கு நூற்றாண்டு விழா


சாலை ஒன்றுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பத்தூர் அருகேயுள்ள கண்ட வராயன்பட்டிக்கு தெ.சி.நா சொக்கலிங்கம் செட்டியார் போட்ட சாலை 15.5.1922 அன்று திறந்ததன் நூற்றாண்டு விழா கோவிலூர் ஆதினம் மெய்யப்ப சுவாமிகள் தலைமையில், அழகப்பா பல்கலை. மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா மற்றும் சான்றோர்கள் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.5.2022) கொண்டாடப்பட்டது.

இந்தச் சாலை குறித்து, சொக்கலிங்கம் செட்டியாரது பேரனும், சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் துணை முதல்வராக இருந்த சே.குமரப்பன் விவரிக்கிறார்:

""கண்டவராயன்பட்டிக்கு அருகாமையில் உள்ள பெரிய ஊரான திருப்பத்தூருக்குச் செல்ல சாலை வசதி இல்லை. ஒற்றையடிப் பாதை அல்லது வண்டிப் பாதை மட்டுமே இருந்தது. இந்தப் பாதையும் கருவெப்பிலாம்பட்டி கண்மாய் வழியே சென்றது. கண்மாயில் நீர் அதிகம் இருந்தால் கரையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

உடல் நலமில்லாத முதியோர், கர்ப்பிணிகள் வைத்தியத்துக்கு விரைந்து செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டதைக் கண்டு வருந்திய ஐயா தெ.சி.நா. சொக்கலிங்கம் செட்டியார் சாலை அமைக்க முடிவு செய்தார்.

திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் தி.புதூர் விலக்கிலிருந்து கண்டவராயன்பட்டி வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டார்.

6 கி.மீ. தொலைவுக்கு ஒரு சாலை அமைத்தார். சாலையின் இருபுறமும் சுமார் 600 புளிய மரங்களை நட்டார். பின்னர், இந்தச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு அவரது பெற்றோரின் மணி விழா நடைபெற்ற 1922-ஆம் ஆண்டில் அர்ப்பணித்தார்.

இந்தச் சாலை திறந்ததன் நூற்றாண்டு விழா கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

சாலை திறந்த இந்த நூறு ஆண்டுகளில் இந்தச் சாலையில் ஒரு கோடி பேருக்கு மேல் பயணித்துள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் நிழலில் இளைப்பாறி உள்ளனர். ஆயிரக்கணக்கான டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த மரத்தின் பலன்களை பரம்பரையாக, சொக்கலிங்கம் செட்டியாரின் குடும்பத்தினர் அனுபவித்துக் கொள்ள அரசு ஆணையும் வழங்கியுள்ளது. நூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் புளிய மரங்கள் காய்த்துக் கொண்டிருக்கின்றன என்பது அதிசயிக்கத்தக்கது. அவர் சாலை அமைத்தது மட்டுமல்ல. மக்கள் சென்று வருவதற்காக இலவச கார் சேவையும் வழங்கி உள்ளார்.

1922-இல் சாலை அமைத்து 2 கார்களை வாங்கி வந்து அந்த ஊர் சிவன் கோயில் முன் நிறுத்தினார்கள். ஊர்மக்கள் அனைவரும் காரை தொட்டு அதிசயமாகப் பார்த்துள்ளனர். இரு கார்களில் ஒன்றை தனது குடும்பப் பயன்பாட்டுக்கும், மற்றொன்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்குமே இலவசமாக வழங்கியுள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com