உலகமயமாக்கல் ஏற்படுத்துகிற தாக்கம் !

""போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல.
உலகமயமாக்கல் ஏற்படுத்துகிற தாக்கம் !

""போராட்டம் என்பது, வெற்றுக் கூச்சல்களோ அல்லது கண்ணீர் கதறல்களோ அல்ல.  அது நம் வாழ்வுரிமைக்கான வலி.  அது எப்படியும் ஒலிக்கலாம். அதற்கென விதிமுறைகளோ, வடிவங்களோ கிடையாது என்பதுதான் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம்  நமக்கு சொல்லி சென்ற செய்தி. இளைஞர்கள், மாணவர்கள் வைத்து எழுப்பிய நெருப்பு, அநீதிக்கு எதிராக ஒன்று திரளாத சமூகத்தையும், வறட்டு மௌனம் காக்கும் போலி ஜனநாயகத்தையும் பொசுக்கும் நெருப்பு என்பதை அதிகார மையங்கள் புரிந்துக் கொண்டதுதான் அது போன்ற சில போராட்டங்களின் வெற்றி. அதுபோன்ற ஒரு போராட்டத்துக்கான ஒரு முன்னோடிதான் இந்தப் படம்''. ஆர்வமாக பேசத் தொடங்குகிறார் இயக்குநர் தீபக். தெலுங்கில் குறிப்பிடத்தகுந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் தஞ்சைக்காரர். இப்போது தமிழில் இயக்குநராக கால் பதிக்கிறார். படத்துக்குப் பெயர் "விட்னஸ்'.

"விட்னஸ்' -கவர்ந்திழுக்கும் தலைப்பு!

நன்றி. எங்கு சுற்றி வந்தாலும் நமக்கான சுவாசம் இங்குதான். தெலுங்கு சினிமாக்களில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் தமிழில் ஒரு நல்ல அறிமுகத்துக்காகக் காத்திருந்தேன். அப்போது நான் இயக்க வேண்டிய திரைக்கதை வேறு ஒன்றாகத்தான் இருந்தது. அந்த திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கும் வந்தது. அது ஒரு உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையைக் காட்டிலும் விநோதமானது. அதிசயத்தக்கது. அதுமாதிரியான ஒரு சம்பவம். இது மாதிரி நடக்குமா?  என்று கூட தோன்றியது.  அதை பின்தொடர்ந்து போய் பார்த்தால், இந்தியா நெடுகிலும் அந்த பிரச்னை நடந்து கொண்டே இருப்பதாகத் தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்பப் புள்ளி.   பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின்னர் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. "விட்னஸ்' என்பது எத்தனை பொருத்தமான தலைப்பு என்பது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரிய வரும். 

கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாமே?

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உள்பட்டு, செய்ய முனைந்திருக்கிறேன். சிறிய அளவில் இதை உடைத்து பேச வேண்டுமென்றால், மலக்குழி மரணங்கள்தான் இதன் பின்புலம். 

இவ்வளவு தொழில்நுட்பம் அருகி விட்ட இந்த காலத்திலும் அந்த மரணச் செய்திகள் நம் கண்களில் படும்போது, எத்தனை உணர்வுகள் கிளறி விடுகின்றன. அதன் தேடல், உருவாக்கம், தீர்வுகள் தான் இந்தக் கதை.  நாம் ஷங்கர் சார் படங்களில் பார்த்திருப்போம்.

என்னங்க நாடு இது.. எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என "மிடில் கிளாஸ் மாதவன்' ஒருவர் தவறாமல் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கையில், ஒருவனை கீழான நிலைக்கு தள்ளியது யார்?

அந்தச் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது யார்...? சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய... அப்படிப்பட்ட உலகத்தையும் எட்டிப் பார்க்கும் யுக்தியே இது. 

நகர மயமாக்கல், உலக பொருளாதாரம், வளர்ச்சி.... இதுவெல்லாம் அத்தியாவசியம் என்கிற விவாதமும் இங்கே இருக்கிறது?

இதை நீங்கள் வளர்ச்சி என்று நினைத்தால் தவறு. யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் நகரங்களின் பல குடிசைப் பகுதிகளை அரசாங்கம் அப்புறப்படுத்தி விட்டார்கள். சென்னை மண்ணின் மைந்தர்கள் எல்லாம் இப்போது  ஊருக்கு வெளியே இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில குடிசைப் பகுதிகளும் எப்போது வேண்டுமானாலும் காணாமல் போகலாம். மாநகரத்துக்கு வெளியே இருந்து வந்ததால்,   அங்கே வாழ்கிற மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் சேர்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் சென்னையின் மத்தியில் வாழ்ந்தவர்கள்தான் இன்றைய புறநகர் மக்கள். கூடுவாஞ்சேரி, மாங்காடு, மறைமலைநகர், ஊத்துக்கோட்டை என சென்னைக்கு  வெளியே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து பஸ்கள், ரயில்கள் பிடித்து மாநகரத்துக்கு வேலைக்கு அவர்கள் வந்து செல்வதே  பெரும் போராட்டம்.

உலகமயமாக்கல் நம் வாழ்க்கை முறையே மாற்றி விட்டது.

பீட்சா, கே.எஃப்.சி. சிக்கன் என   சாப்பிடுகிற  சாப்பாட்டையும் மாற்றியது போல்,  வாழ்க்கை முறையும் மாற்றிவிட்டது.  ஸ்ரீபெரும்புதூரைத் தாண்டிப் போனால், மக்களின் வாழ்க்கை முறையும், அடிப்படை தேவைகளும்  வேறு மாதிரி இருக்கிறது. மனிதர்களின் முகங்களே மாறி இருக்கிறது.   ஆனால், புறநகர் மனிதர்கள்  அந்த மாற்றங்களை சும்மா வேடிக்கை பார்த்துட்டு கடந்துபோவார்களா? இல்லை அதை அனுபவிக்க முயற்சி செய்வார்களா? இப்படி புறநகர் மனிதர்களின்  வாழ்க்கையில் உலகமயமாக்கல் ஏற்படுத்துற தாக்கம்தான் கதை.

இந்த நகரத்தை உருவாக்கியவர்களை இங்கிருந்து அகற்றி நகரத்துக்கு வெளியே கண்ணகி நகருக்குத் தள்ளி  விடுகின்றன . அரசும் அதிகாரமும். குடிசைப் பகுதிகள்  எல்லாம் அழிந்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும், அபார்ட்மென்ட்டுகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு விடியலிலும் பண முதலைகளும் தொழில் அதிபர்களும் பொக்லைனோடு வந்து நிற்பார்களோ என்ற  நிராதரவான  பயத்துடனே கழிகின்றன சென்னை மைந்தர்களின் பொழுதுகள். அந்த பயத்தில்தான் எப்போதும் குடிசைப் பகுதிகளில ஒரே கம்பத்தில் மாறி மாறி ஆளும் கட்சிக் கொடிகள் பறந்துக் கொண்டே இருக்கின்றன. திடுதிப்பென்று எழுந்து நிற்கும் கட்டடங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்குத் தெரியப்போவது இல்லை? அதற்கு முன்பு அங்கே விளையாடிக் கொண்டு இருந்த பிள்ளைகளின் நிரந்தரமற்ற எதிர்காலம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதைக்குள் எப்படி வந்தார்?

நல்ல சினிமாவுக்கான இயல்பும், குணமும் கொண்டவர் அவர். எனக்கு முன்பே பழக்கம். நல்ல விஷயங்களை காது கொடுத்து கேட்பார்.அப்படித்தான் இந்தக் கதையை அவருக்கு விளக்கினேன். படப்படிப்புக்கு தயார் செய்யுங்கள் என முன் வந்தார். ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா இப்படி மக்களுக்கு நெருக்கமானவர்கள் துணைக்கு வர சினிமா இன்னும் பெரிதானது. திரைக்கதையை முத்துவேல், ஜே.பி. சாணக்யா இருவரும் எழுதுகிறார்கள். படத்தொகுப்புக்கு பிலோமின் ராஜ். இரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். தி பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனத்தின் சார்பில் டி.ஜி. விஷ்வபிரசாத் தயாரிக்கிறார். விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com