தமிழக வீராங்கனை

கெளரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே தமிழக வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சென்னையின் வைஷாலி ரமேஷ் பாபு.
தமிழக வீராங்கனை

கெளரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே தமிழக வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சென்னையின் வைஷாலி ரமேஷ் பாபு.

உலகம் முழுவதும் பிரபலமான செஸ் ஆட்டத்தில் ரஷியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வலிமையாக உள்ளன. இந்தியாவும் பலமான அணியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சிறப்புடையவர். அவரைப் பின்தொடர்ந்து பல்வேறு வீரர், வீராங்கனைகள் செஸ்ஸில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் இருந்தும் ஏராளமான இளம் செஸ் வீரர்கள், வீராங்னைகள் உருவாகி உள்ளனர். செஸ்ஸின் தலைநகரம் போல் சென்னை விளங்கி வருகிறது.

சசி கிரண், ரமேஷ், கிடாம்பி சுந்தர்ராஜன், அதிபன், பிரக்ஞானந்தா, குகேஷ், இனியன் என ஆடவர் பிரிவிலும், விஜயலட்சுமி, ஆர்த்தி, மீனாட்சி, ஆர்.வைஷாலி, ஸ்ரீஜா சேஷாத்ரி, வர்ஷினி, பிவி. நந்திதா என மகளிர் பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட்: செஸ் விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை. ஆசியப் போட்டியில் இடம்பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறாத நிலையில், தனியாக ஃபிடே சார்பில் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே இந்தியாவில் முதன்முறையாக கெளரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக நிதி ஒதுக்கியுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 2500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகளை தமிழக அரசு, மத்திய அரசு, அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழக செஸ் சங்கம் ஆகியன செய்துள்ளன.

சிறப்புப் பயிற்சி: ஆடவர், மகளிர் பிரிவுகளில் மொத்தம் தலா 10 பேர் என இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஆடவர் அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், கே.சசிகிரண் இடம் பெற்றுள்ளனர். ஆனால் பிரதான மகளிர் அணியில் தமிழகத்தில் இருந்து ஆர்.வைஷாலி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு- நாகலட்சுமி தம்பியின் மகளான வைஷாலி 12 வயதிலேயே உலக யூத் செஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும், 14 வயதுக்குள்பட்டோர் உலக சாம்பியன் பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்.

2016-இல் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும், 2018-இல் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார். 2021-இல் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே தமிழக வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ள வைஷாலியின் இளைய சகோதரர் பிரக்ஞானந்தா ஆவார்.

உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸனை வீழ்த்திய பெருமை பிரக்ஞானந்தாவுக்கு உள்ளது. கார்ல்ஸனை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.

இதுதொடர்பாக வைஷாலி கூறியதாவது:

2020-ஆம் ஆண்டில் ஆன்லைன் முறையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றோம். 2021-இலும் வெள்ளி வென்றோம்.

தற்போது நேரடியாகப் போட்டிகள் நடைபெறுவது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விஸ்வநாதன் ஆனந்த், கெல்ஃபாண்ட் ஆகியோரின் பயிற்சியால் தன்னம்பிக்கை பெற்றுள்ளேன். சக வீராங்கனைகளும் மிகவும் ஒத்துழைப்பு தருகின்றனர்.

பயிற்சி முகாமில் நாள்தோறும் 6 மணி நேரம் கடும் பயிற்சி பெறுகின்றேன். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இங்கு தங்கம் வெல்ல கடுமையாக போராடுவோம். தற்போது எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் பி.காம் படித்து வருகின்றேன். முதுகலை படிப்பும் படிக்க வேண்டும். ஆசியப் போட்டி ஒத்தி வைக்கப்பட உள்ளதால் அதுகுறித்து கவனம் செலுத்தவில்லை. செஸ் ஒலிம்பியாட் மட்டுமே எங்களது இலக்காக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com