ஜம்மு - காஷ்மீர் எக்ஸ்பிரஸ்!

ஐபிஎல் 2022 தொடரில் தனது புயல் வேகப் பந்துவீச்சால் அதிர்வுகளை ஏற்படுத்திய "ஜம்மு-காஷ்மீர் எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும்
ஜம்மு - காஷ்மீர் எக்ஸ்பிரஸ்!

ஐபிஎல் 2022 தொடரில் தனது புயல் வேகப் பந்துவீச்சால் அதிர்வுகளை ஏற்படுத்திய "ஜம்மு-காஷ்மீர் எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும் 22 வயதே ஆன ஜம்மு-காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக், இந்திய அணியில் இடம் பெற்று சாதனை படைத்தார்.

இந்தியாவின் மகுடமான  ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து நடைபெறும் பயங்கரவாதச் சம்பவங்களால்,  விளையாட்டு நிகழ்வுகள் நடப்பதில்லை. அத்திபூத்தாற் போல் சில வீரர்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பர். கால் பந்து, ஹாக்கி,  குளிர்கால விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற காஷ்மீரில், பயங்கரவாதம் வேரூன்றுவதற்கு முன்பு ஸ்ரீநகர்,  ஜம்முவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்றுள்ளன.

வியப்பை தந்த உம்ரான்: 

இந்த நிலையில் உலகம் முழுவதும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் தொடர் ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது பிளே ஆஃப் சுற்று கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே நிகழாண்டு தொடரில் மணிக்கு 150 கி.மீ.  (95 மைல்)  வேகத்தில் பந்து வீசி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெளலர் உம்ரான் மாலிக்.


தனது அபார பெளலிங்கால் எதிரணி வீரர்களின் ஸ்டம்புகளை பதம் பார்த்து வெளியேற்றினார்.  தனது பெளலிங் பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான டேல் ஸ்டெயின் மேற்பார்வையில் இளம் வீரர் உம்ரான் மாலிக் நிலையாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார். இதன் மூலம் தவிர்க்க முடியாத வீரராகவும் நிலைநிறுத்திக் கொண்டார்.

டி20 இந்திய அணியில் இடம்: 

தென்னாப்பிரிக்காவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர்  வரும் ஜூன் 9-இல் இந்தியாவில் தொடங்குகிறது. இதற்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் இடம் பெற்று தனது கனவை நனவாக்கி உள்ளார் உம்ரான் மாலிக். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அணியின் ஸ்ட்ரைக் பெளலராகவும் உம்ரானை பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்யலாம் எனத் தெரிகிறது.

நெட் பெளலராக தொடக்கம்: 

1999-இல் ஸ்ரீநகரில் எளிமையான பழ வியாபாரியின் மகனாகப்  பிறந்த உம்ரான் மாலிக்,  2021-இல் விஜய் ஹஸாரே கோப்பைக்கான டி20 போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியில் இடம் பெற்றார். மேலும் அதே ஆண்டு செப்டம்பரில் ஐபிஎல் அணியான ஹைதராபாதில் கரோனாவில் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு பதிலாக குறுகிய கால பெளலராக சேர்க்கப்பட்டார் உம்ரான்.

மேலும் ஐபிஎல் அணிகளுக்கு எதிராக நெட் பெளலர்களில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2021 அக்டோபரில் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன்முதலாக ஆடினார்.

150 கி.மீ. வேகத்தில் 5 முறை: 

மேலும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 150 கி.மீ வேகத்தில் தொடர்ந்து 5 முறை பந்துகளை வீசியதால் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இதனால் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு எதிரான நெட் பெளலராக தேர்வு செய்யப்பட்டார் உம்ரான் மாலிக். தொடர்ந்து இந்திய ஏ அணியிலும் இடம் பிடித்தார். கடந்த 2017-இல் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூல் என்பவரே கடைசியாக இந்திய அணியில் இடம் பெற்ற காஷ்மீர் வீரர். மேலும் எந்த வீரரும் இந்திய டெஸ்ட் அணியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அணி ஏலம்: 

நிகழாண்டு 2022 ஐபிஎல் தொடர் ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார் உம்ரான்.  மற்ற இருவர் கேன் வில்லியம்ஸன், அப்துல் சமது ஆவர். இத்தொடரில் மெதுவாகத் தான் தனது இருப்பை உணர்த்தினார். ஒவ்வொரு ஆட்டத்திலும் மெருகேற்றிய உம்ரான், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.

மிடில் ஓவர்களில் அவரை பெளலிங் செய்ய கேப்டன் கேன் வில்லியம்ஸன் பயன்படுத்தினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 157 கி.மீ வேகத்தில் பெளலிங் செய்தார். இந்திய அணியில் ஏற்கெனவே புவனேஷ்வர் குமார், ஹர்ஷல்படேல், அவேஷ் கான், அர்ஷ் தீப் சிங், ஆல்ரவுண்டர்கள் தீபக் சஹார், சர்துல் தாகுர் உள்ள நிலையில், உம்ரான் மாலிக் மேலும் தனது பெளலிங்கை  வலுப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் பவுன்சிங் அதிகம் நிகழும் பிட்ச்களுக்கு வேகப்புயல் உம்ரான் மாலிக் பெளலிங் பெருமளவு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ""உம்ரான் மாலிக்குக்கு நேரடியாக பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தை வழங்கி, அவரை கவனமாக ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.

ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும், வரும் டி20 உலகக் கோப்பை அணியில் உம்ரான் மாலிக் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் எனத்தெரிவித்தார்.

60 கி.மீ. கிளப்பில் சேருவாரா?

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பெளலிங் செய்பவர்கள் கிளப்பில் பாக். வீரர் ஷோயிப் அக்தர், ஆஸி. வீரர் பிரெட் லீ மட்டுமே உள்ளனர். அதில் உம்ரான் மாலிக்கும் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com