ஆராய்ச்சி... ஆவணப்படுத்துதல்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் கலைகளை ஆவணப்படுத்த முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிறார் அதன் துணைவேந்தர் எஸ்.சௌம்யா.
ஆராய்ச்சி... ஆவணப்படுத்துதல்!


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் கலைகளை ஆவணப்படுத்த முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிறார் அதன் துணைவேந்தர் எஸ்.சௌம்யா.

புகழ்ப் பெற்ற கர்நாடகக் குரலிசைக் கலைஞரான இவர், துணைவேந்தராக மூன்றாண்டு காலத்துக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக இசை ஜாம்பவான்களான டாக்டர் எஸ். ராமநாதன், டி. பிருந்தா ஆகியோரது சிஷ்யையான செளம்யா தனது 11-ஆவது வயது முதலே மேடையில் பாடி வருபவர். சென்னை ஐ.ஐ.டி.யில் ரசாயனத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து, தங்கப் பதக்கம் பெற்றவர். மிருதங்கம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் செளம்யாவுடன் ஓர் பேட்டி:

துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருப்பது குறித்து?

மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை அளித்திருக்கிறார்கள். ஒரு மாணவியாக இங்கே படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனாலும், எனது குரு ராமநாதன், இசைக் கல்லூரியில் பாடம் எடுக்க வரும்போது நானும் வந்திருக்கிறேன்.

துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தபோது, மலரும் நினைவுகள் வந்து சென்றன.

மரங்கள் அடர்ந்து பசுமையான இசைக் கல்லூரி வளாகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இங்கு பகல் ஒரு மணி முதல் இரண்டு வரை உணவு இடைவேளை. அந்த நேரத்தில் ஒலிப்பதிவு செய்த கச்சேரிகள் ஒலிபரப்பப்படுகின்றன. வளாகத்தில் எங்கே இருந்தாலும் அந்த இசையைக் கேட்டு யாரும் ரசிக்கலாம். இத்தகைய ஒரு அரிய சூழல் வேறு எங்கு கிடைக்கும்?

மாணவ, மாணவிகளைச் சந்தித்து உரையாடினீர்களா?

இது விடுமுறைக் காலம். ஆனாலும் சிலரைச் சந்தித்தேன். அவர்களின் கலை ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது எல்லாம், பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டு, நேரடியாக இங்கே வந்து சேர்கிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். முன்பெல்லாம், பல்வேறு வயதினரும், இங்கே சேர்ந்து இசை கற்பார்கள்.

குரலிசை, வாத்திய இசை, சிற்பம், ஓவியம் என பல்வேறு கவின் கலைகளையும் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். அண்மைக்காலமாக இங்கிருந்து வருபவர்கள் தொழில் ரீதியான இசைக் கலைஞர்களாக இயங்குவது குறைந்துவிட்டது. மாணவர்கள் கர்நாடக இசை உலகிலும், திரையிசை உலகிலும் பங்களிக்க வேண்டும் அது முக்கியம்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியுகத்தில் எந்த அளவுக்கு இசையோடு ஒருங்கிணைக்க முயற்சி எடுக்கப் போகிறீர்கள்?

அதை இரண்டு விதமாகப் பார்க்கிறேன். இங்கே படிக்கும் மாணவர்களை, இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் வெற்றிகரமான இசைக் கலைஞர்களாக வலம் வருவதற்குத் தயார்ப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு உதவும் வகையில் பல்கலைக்கழகத்தில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ உள்பட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்திடவும், அவற்றுக்குரிய பயிற்சிகள் அளிக்கவும் விரும்புகிறேன். மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தி, தங்கள் இசைத் திறமையோடு, தொழில்நுட்பத்திறமையையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இரண்டாவதாக, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களை டிஜிட்டல் மயமாக்கி, வருங்காலச் சந்ததியினருக்குப் பயன்படும்படி பாதுகாக்க விரும்புகிறேன். இந்தப் பணி ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், அதை விரிவாக்க நினைக்கிறேன்.

பல்கலைக் கழக வளர்ச்சிக்கான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் என்ன?
காலத்துக்கேற்ப அவசியமான சில புது விஷயங்களை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இசை, கவின் கலைகள் தொடர்பான பல்வேறு அரிய மனிதர்கள், இடங்கள், விஷயங்கள் பற்றி ஆவணப் படங்கள் எடுப்பதற்கு மானியம் வழங்குவதற்கான நிதி பல்கலைக் கழகத்தின் வசம் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் திட்டம் உள்ளது. ஆராய்ச்சிகளும் ஊக்குவிக்கப்படும்.

பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள திறந்தவெளிஅரங்கம் சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய படிப்புகளைஅறிமுகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

ஏதேனும் புதிய முயற்சிகளைச் செய்ய விரும்புகிறீர்களா பாரம்பரிய இசை, கவின் கலைகள் கற்பிக்கப்படும் பல்கலைக் கழகங்களோடு, நமது பல்கலைக் கழகமும் இணைந்து பணியாற்றும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

பிரபலமான மூத்த இசைக் கலைஞரான நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது என்பது சவாலான விஷயமாயிற்றே?

தொடக்கத்தில் நிர்வாகம் என்பது புதியதாக இருந்தது. பின்னர், பல்கலைக்கழகத்தின் செயல்பாடு, நிர்வாகம் பற்றிப் புரிந்துகொண்டேன். பொறுப்பேற்று ஒரு மாதமாகிவிட்டது.

நிறைய விஷயங்கள் அறிந்துள்ளேன். பல்கலை. நிர்வாகம் என்பது சவாலான பணி. அதை ஈடுபாட்டுடனும், சிறப்பாகவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com