பாரம்பரியச் சிறப்பு தோளில் தூக்கும் 'தேர்த் திருவிழா'

தஞ்சையிலிருந்து  21 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பின்னையூர் நாடு இருக்கிறது.  
பாரம்பரியச் சிறப்பு தோளில் தூக்கும் 'தேர்த் திருவிழா'


தஞ்சையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பின்னையூர் நாடு இருக்கிறது. இந்த ஊரில் பற்பல கோயில்களில் முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த ஊரில் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் வித்தியாசமானது.

இந்தத் தேரை பக்தர்கள் எங்கும் இறக்காமல் 6 கி.மீ. சுமந்து செல்கின்றனர்.

பங்குனி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அல்லது சித்திரை மாதத்தில் முதல்ஞாயிற்றுக்கிழமை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு காப்பு கட்டப்பட்டு அன்றிலிருந்து 8 நாள்கள் கரை வாரியாக மண்டகப்படி சிறப்பாக நடைபெறும். இந்த 8 நாள்களும் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் உத்ஸவர் திருமேனியை எழுந்தளுவித்த தேர் 33 அடி நீளமுள்ள வரையில் (தூக்குவதற்கு ஏற்ற நீளமான மரம்) கிராமவாசிகள் தோளில் சுமந்து கோயில் தெருக்களைச் சுற்றி வந்து முத்து மாரியம்மன் கோயிலை சென்றடைகின்றனர்.

தோளில் இருந்து இறக்காமல் 6 கி.மீ. சுமந்து செல்லப்படும் தேர் பக்தர்கள் சுமந்து செல்லும் வாரை ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. ஆலமரத்தின் விழுது மண்ணை தொட்டவுடன் பூமியில் மண்ணை 10 அடி ஆழத்துக்கு பள்ளம் அமைத்து மரத்தின் விழுதினை பள்ளத்தில் இறங்க செய்வார்கள். அதிலிருந்து 45 - 50 ஆண்டுகள் கழித்த பின்னர்தான் தேரினை தூக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 33 அடி வாரையை வெட்டி எடுத்து பயன்படுத்துகிறார்கள் என்பது சுவையான செய்தியாகும். ஒவ்வொரு தேரையும் 24 நபர்கள் சுமந்து செல்வார்கள்.

தேர்த் திருவிழாவின் சிறப்பு என்னவென்றால் சுமந்து செல்லும் தேரைஎங்குமே இறக்காமல் எடுத்த இடத்திலேயே சேர்ப்பதுதான். தேர் வரும் பாதை சுமார் 6 கி.மீ. தூரம் ஆகும். வழியில் எந்த ஒரு காரணத்துக்காகவும் தோளிலிருந்து கீழே இறக்காமல் மிகுந்த ஈடுபாட்டுடன் தேர்த் திருவிழா நடப்பது இவ்வூரின் தனிச்சிறப்பாக விளங்குகிறது.

ஊரில் உள்ள மற்றொரு கோயிலான மலையாத்தாள் பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு 8 கரைவாசிகளால் முளைப்பாரி பதியம் போடப்பட்டு, எட்டாம் நாள் புளிப்பொங்கல், 18 வகையான காய்கறி கூட்டு, பொரியல், பஞ்சாமிருதம் மற்றும் அசைவ உணவுகளுடன் பிடாரி அம்மனுக்கு படையலிட்டு வழிபாடுகள் நடைபெறும். பிடாரியம்மனுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களும் அனைவரின்முன்னிலையில் தொண்டு செய்யும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அன்று இரவு 15 அடி உயரம் கொண்ட சிறிய தேரில் பிடாரி அம்மன் வைக்கப்பட்டு, பக்தர்கள் தோளில் சுமந்து கோயிலை வலம் வருகின்றனர். அப்போது, வேண்டுதலாக பட்டுப்புடவைகளைச் சமர்பிப்பார்கள்.

இதைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் திங்கள்கிழமை ஊரில் குளக்கரையில் எழுந்தருளியுள்ள திருந்தாண்டி அய்யனாருக்கு காப்பு கட்டப்பட்டு அன்றிரவே 15 அடி உயரம் கொண்ட சிறிய தேரில் யானை மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அய்யனார் உற்சவர் திருமேனி அலங்கரிக்கப்பட்டு பின்னையூர் நாடு முழுவதும் தோளில் சுமந்தபடி வலம் வந்து கோயிலை வந்தடையும். இத்தேருக்கு அலங்காரம் செய்வதற்கு ஊர் மக்கள் இணைந்து பட்டுப்புடவைகளைச் சமர்ப்பிக்கின்றனர்.

அடுத்து இரண்டாம் நாளில் 15 அடி உயரம் கொண்ட சிறிய தேரில் பிடாரி அம்மனின் உற்சவத் திருமேனி வலம் வரும்.

தூக்குத் தேரோட்டம்:

அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ள திருவிழாவின் கடைசி தூக்குத் தேரோட்டம் நடைபெறுகிறது. திருந்தாண்டி அய்யனார், பிடாரியம்மன், சுலப்பிடாரி அம்மன் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனியே தூக்குத் தேர் தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும்.

தேர் ஊர்வலம் வரும் பாதையில் அனைவரும் பானைகளில் தேங்காய், பழம், பொங்கல் வைத்து படைத்து வழிபடுவர். ஊர்வலம், கோவில் தெருவில் அமைந்துள்ள சிவன், பிறைச்சூடி அம்மன், விநாயகர், முருகன், அய்யனார், முத்து மாரியம்மன், பெருமாள், இடும்பன், பழவப்பன், பிடாரியம்மன் தெய்வங்களும் எழுந்தருளியுள்ள கோயில்களைச் சுற்றி வந்து பிறகு தேர் புறப்பட்ட இடத்தில் இறக்கிவைக்கப்படுகிறது.

மூன்று தேர்களும் தோளில் சுமந்து கொண்டாடப்படும் இந்த நிகழ்வில், 33 அடி உயரம் கொண்ட தேர் கலசத்தின் மீது பக்தர்களால் மாலைகள் வீசப்படும். கலசத்தின் உச்சியில் மாலை விழும்வரை மூன்று தேர்களும் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்து மக்கள் மகிழ்ந்து வழிபாடு செய்வர்.

பின்னர், திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னையூர் நாட்டுக்குத் தூக்குத் தேர்த் திருவிழா இதற்கு முன்பு 1999- ஆம் ஆண்டில் நடைபெற்றது. தற்பொழுது 23 ஆண்டுகள் கழித்து அண்மையில் நடைபெற்றது.

கிராமம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலம் பெறவும் ஒற்றுமையுடன் இணைந்து நடத்தும் இத்திருவிழா பின்னையூரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

(தகவல் உதவி: சாமிநாதன், பன்னீர்செல்வம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com