தமிழகமும் காசியும்!

ஆன்மிகச் சிறப்பும் புனிதமும் வாய்ந்த தலமாக "காசி'  விளங்குகிறது. 
தமிழகமும் காசியும்!

ஆன்மிகச் சிறப்பும் புனிதமும் வாய்ந்த தலமாக "காசி' விளங்குகிறது.

பல கோயில்களில் லிங்கத் திருமேனியாக காசி விசுவநாதர், விசாலாட்சி அம்பாள் தனி சந்நிதிகளில் கோயில் கொண்டு, சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருவதைக்காணலாம்.

வழிபாடு சிறப்பு பெற்ற காசி திருத்தலத்துக்குச் சமமானத் தலங்களாக திருவெண்காடு , திருவிடைமருதூர் , மயிலாடுதுறை, திருவையாறு, சாய்க்காடு, ஸ்ரீ வாஞ்சியம் ஆகிய கோயில்கள் சிறப்புற்று விளங்குகின்றன.

குற்றாலம் அருகில் உள்ள தென்காசி திருக்கோயில் தென்காசி பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் (1422-63) தோற்றுவிக்கப்பட்டதாகும். வடகாசியில் உள்ள கோயில் பழுதடைத்துவிட்டதால் தென்காசியில் ஒரு கோயில் எழுப்ப வேண்டுமென்று இறைவன் பாண்டியனின் கனவில் தோன்றி கேட்டுக் கொண்டதால் இந்தக் கோயிலைக் கட்டினேன் என்ற செய்தி அம்மன்னனுடைய கல்வெட்டில் காணப்படுவது சிறப்பாகும்.

இறைவன் விசுவநாதர் - குலசேகர நாதர் என்றும் இறைவி உலகமுழுதுடைய நாச்சியார் - குழல்வாய் அம்மை நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் "தட்சிணகாசி' எனவும் குறிப்பிடப்படுகிறது.

திருமுதுகுன்றம்- தற்பொழுது விருத்தாசலம் என அழைக்கப்படுகிறது. இத்தலம் "விருத்தகாசி' என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறக்கும் மனிதர்கள், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் ஐந்தெழுத்து (சிவாய நம) மந்திர உபதேசம் செய்ய, இறைவி தனது ஆடையினால் (முந்தானை) விசிறி களைப்பை நீக்குகிறார் எனக் கருதப்படுகிறது.

எனவே இத்தலம் 'காசிக்கு வீசம் அதிகம்' என்ற சொல்வழக்கு வழங்கப்படுகிறது. விருத்தாசலம் தலபுராணத்திலும் 'இத்தலம் விட்டு காசியில் ஏகினும் இல்லை தவப்பயன் முத்தியும் இல்லையே' என்று சிறப்பித்துக் கூறப்படுவதையும் காணலாம்.

புனித கங்கை: காசி திருத்தலம் புண்ணிய நதிகளில் ஒன்றான கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் மகாமக நாளில் கங்கை, காவிரி, யமுனை, நர்மதை, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நதிகள் வந்து சேர்வதாக புராணங்கள் கூறுகின்றன. இக்குளத்தின் அருகே உள்ள காசி விசுவநாதர் கோயிலில் மேற்கண்ட நதிகளை தெய்வ வடிவங்களாக அமைத்து வழிபடுகின்றதைக் காண முடிகிறது.

பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம் மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் என பெரிய புராணம் சிறப்பித்துப் பேசுகிறது.

திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற கோயில்களின் குளங்கள் "சிவகங்கை" தீர்த்தம் எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பனங்காடு தலத்தில் உள்ள திருக்குளம் 'சடாகங்கை' என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இக்குளக்கரையில் கங்காதேவி தெய்வ வடிவம் வழிபடப்பெறுகிறது.

நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் கோயிலின் திருக்குளம் "குப்தகங்கை' எனப் போற்றப்படுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது சிறப்பு. ஸ்ரீவாஞ்சியம் அருகே உள்ள அச்சுதமங்கலம் கோயிலில் சோமநாத ஆண்டார் என்ற அடியார் தம் தள்ளாத வயதிலும் கங்கை நீரை காவடியா சுமந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இக்கோயில் கோபுரவாயிலில் அவரின் சிற்ப வடிவமும் காணப்படுகிறது. திருக்கடவூர் கோயிலிலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தின் பெயரும் கங்கை தீர்த்தம் என்றே பெயர்.

சிற்பங்கள் : கோயில்களில் நுழையும் கோபுரவாயிலின் இருபக்கங்களிலும் அழகிய பெண்கள் மகரம் -ஆமையின் மீது நின்ற நிலையில் சிற்பங்களாகக் காட்சி அளிப்பதைக் காணலாம். இவர்கள் கங்கை - யமுனை ஆறுகளின் பெண் வடிவங்கள். கோயிலுக்குள் நுழையும் முன் நம்மை புனிதப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை இச்சிற்பங்கள். சிவபெருமான் கங்கையை தனது சடைமுடியில் ஏற்று அருளும் வடிவம் "கங்காதரமூர்த்தி' என்பதாகும் இவ்வடிவங்களை கங்கை கொண்டசோழபுரம், மேலக்கடம்பூர், திருச்சி மலைக்கோட்டை போன்ற பல கோயில்களில் காணலாம். சிவன் ஆடவல்லானாக காட்சி தரும் செப்புத் திருமேனிகளிலும் சடையில் கங்கையை பெண்வடிவத்தில் காணலாம். இடுப்புக் கீழே அலையாக சுழலும் நீர் வடிவத்தில் காட்சி அளிக்கும் கங்கையை "கங்காபட்டாரகி' என கல்வெட்டுகள் குறிக்கின்றன. கங்கை கொண்ட சோழபுரம், கங்கை வரை வெற்றி பெற்றதின் அடையாளமாக ஏற்படுத்தப்பட்ட தலைநகரமாக விளங்கியது. சோழகங்கம், கங்கை கொண்ட விநாயகர் சிற்பம் போன்றவை கங்கையின் சிறப்பினை எடுத்துக் கூறுவதாக விளங்குகிறது.

கல்வெட்டுகளில்..: தஞ்சையை ஆட்சி செய்த மராத்திய மன்னர்கள் புண்ணியம் பல தரும் கங்கை யாத்திரையை மேற்கொண்டனர். இரண்டாம் சரபோஜி மன்னர் 1820-இல் 3000 பேருடன் கங்கை யாத்திரை மேற்கொண்டார். கங்கையாற்றில் மணிகர்ணிகை படித்துறையில் நீராடினார். இதன் நினைவாக தஞ்சை கோட்டைக்குள் மணிகர்ணிகேசுவரர் கோயிலைக் கட்டுவித்தார். மேலும் தஞ்சை மேலவீதியில் இருந்த காசி விசுவநாதர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்தை அக்கோயிலில் காணும்; கல்வெட்டு குறிப்பிடுகிறது.

காசிமடம் : திருப்பனந்தாள் தலத்தில் குமரகுகுருபர சுவாமிகள் நிறுவிய காசிமடம் புகழ்பெற்று விளங்குகிறது. காசியில் குமரகுகுருபர சுவாமிகள் தோற்றுவித்த குமாரசாமி மடத்தின் வழிவந்த மடம் ஆதலின் ஸ்ரீகாசி மடம் என வழங்கப்படுகிறது. அதே போன்று தர்மபுர ஆதினத்தின் 10-வது குரு காசியில் தங்கி வடமொழியில் வல்லவராகத் திகழ்ந்தார். காசி சென்று பல அருட்பாக்களையும் பாடினார்.

காசியாத்திரை: ராமேசுவரத்தில் தொடங்கி மறுபடியும் ராமேசுவரத்தில் முடிய வேண்டும். இங்கிருந்து கடலில் மண், கோடி தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசிக்கு செல்லவேண்டும். பிரயாகையில் மண்ணைக் கரைத்து, கங்கையில் நீராடி கோடி தீர்த்தத்தால் காசி விசுவநாதரை அபிஷேகம் செய்ய வேண்டும். காசியில் விசலாட்சி, அன்னபூரணி, கால பைரவரை வழிபட்டு, பின்னர் கங்கை நீரை எடுத்து கொண்டு ராமேசுவரம் வந்து ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து காசி யாத்திரையை பூர்த்திசெய்யலாம். இந்திய திருநாட்டின் ஒற்றுமைக்குப் பாலமாக காசியாத்திரை விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு பெற்றதும், புனிதமாகப் போற்றப்படுவதும் ஆகிய காசி திருத்தலத்தில் "காசி - தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. பெருமை அளிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமைக்கும் அடையாளமாக விளங்குகிறது.

(தொல்லியல் துறை - பணி நிறைவு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com