ஹவாய் தீவில் தமிழக சிற்பிகளுக்கு சிலை!

கருங்கோயிலை சிறப்பாக வடிவமைத்ததற்காகச் சிற்பிகளுக்குச் சிலை எடுக்கப்பட்டுள்ளது.  உண்மைதான்! ஹவாய் தீவைச் சேர்ந்த சைவ சித்தாந்த ஆதீனம்தான் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.
ஹவாய் தீவில் தமிழக சிற்பிகளுக்கு சிலை!

கருங்கோயிலை சிறப்பாக வடிவமைத்ததற்காகச் சிற்பிகளுக்குச் சிலை எடுக்கப்பட்டுள்ளது. உண்மைதான்! ஹவாய் தீவைச் சேர்ந்த சைவ சித்தாந்த ஆதீனம்தான் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.
வழக்கமாக, கோயில்களை வடிவமைக்கின்ற சிற்பிகளைச் சிறப்பிக்கும் வகையில், அவர்களின் பெயர்கள் தாங்கிய கருங்கல் பலகைகளைக் கோயில் வளாகத்திலேயே பதிக்கின்ற வழக்கம் இருந்துள்ளது. மேலும், சிற்பிகளும் அரசின் உயரிய விருதுகள் வாயிலாகப் பாராட்டப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஹவாய் தீவில் ஸ்படிக லிங்கேசுவரருக்கு முற்றிலும் கருங்கலால் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணியில் சிற்பிகள் கல் அறுப்பது முதலாகக் கற்களைச் சதுரித்து முறையாகச் செதுக்குவது, செதுக்கிய கற்களைச் சேர்மானம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளையும் உளி, சுத்தியல் போன்ற கைக்கருவிகளைக் கொண்டே செய்துள்ளனர்.
ஹவாய் ஆதீனத்தைத் துவங்கிய தலைமை சந்நியாசியும் ஜீவ சமாதியடைந்தவருமாகிய குருதேவர் ஸ்ரீலஸ்ரீ சிவாய சுப்ரமுனிய சுவாமியின் எண்ணத்தின்பேரில், கோயில் கல்லினால் வடிவமைக்கப்பட்டது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் போன்றே கைக்கருவிகளைக் கொண்டு, கோயிலும் எழுப்பப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதால், அக்கற்கள் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது சுமார் 1,000 ஆண்டுகளைத் தாண்டி உறுதிப்பாட்டுடனும் மிடுக்கான தோற்றத்துடனும் காட்சியளிக்கும் என்றும் குருதேவர் நம்பினார்.


அதுமட்டுமின்றி, ஹவாய் தீவில் எழுப்பப்பட்டுள்ள இந்தக் கோயில் அமைந்த வரலாறு, அன்றைய சமய சமுதாய நிகழ்வுகள், இயற்கைக் காட்சிகள் போன்ற அனைத்துச் செய்திகளையும் வரும் எதிர்காலச் சந்ததியினரிடம் சேர்த்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தையும் கொண்டிருந்தார்.
ஏனெனில், இந்தியாவில் காணக்கிடக்கின்ற எண்ணற்ற பழைமை வாய்ந்த கோயில்களை வடிவமைத்த சிற்பிகள் பற்றிய விவரங்கள் கிடைப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதைக் கண்டு குருதேவர் மனம் வெதும்
பினார். ஆகையினாலே, குருதேவர் எழுப்பியுள்ள இறைவனுடைய மிக அற்புதமான இக்கோயிலை வடிவமைத்த சிற்பிகள் அவர்களின் திறன் பற்றி எதிர்வரும் தலைமுறையினர் அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் சிற்பிகள் நினைவுச் சின்னத்தை உருவாக்கி அதனைக் கோயில் வளாகத்திலே வருகின்ற அனைவருடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இச்சின்னத்தை உற்றுக் கவனித்தால் நினைவுச் சின்ன மேடையில் ஆளுயர வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேடையின் நடுவில் கோயிலை வடிவமைத்த காலஞ்சென்ற பத்மபூஷன் டாக்டர் வை.கணபதி ஸ்தபதியிடம் தாம் கண்டுணர்ந்த இறைநுட்பத்துக்குத் தூல வடிவம் தருமாறு குருதேவர் உத்தரவிடுவதாக அமைந்திருக்கிறது.
அதனைத் தம் தலைமேற்கொண்டு ஏற்று அதற்கான வரைபடங்களை டாக்டர்
வை.கணபதி ஸ்தபதி முறையாகத் தயார் செய்துள்ளதைக் குருதேவரிடம் மிகுந்த பணிவன்புடன் எடுத்துரைக்கிறார்.
இருவருடைய கால்களுக்கு இடையே கருங்கல்லினால் ஆன சங்கிலி ஒன்றையும் அவ்விடத்தில் காட்டியுள்ளனர். இதன் பொருளாவது, கருங்கல் சங்கிலி வாயிலாக குருதேவருடைய கைலாசப்பரம்பரையின் பழம் பாரம்பரிய தொடர்ச்சியைக் கருத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்தபதியினுடைய முதன்மைச் சீடர் ஸ்தபதி ரா.செல்வநாதன் தாரை ஸ்தம்பத்தை வடிவமைக்கும் பொருட்டுக் கல்லில் குறிபோடுவதையும் அக்குறிக்கேற்றவாறு சில்பி செல்லையா உளியாலே செதுக்குவதையும் எடுத்துக் காட்டுகின்ற வகையில் அமைந்துள்ள ஆளுயர வெண்கலச் சிலைகளும் நம்மை வெகுவாக வியப்பில் ஆழ்த்துகின்றன.
இந்த நினைவுச் சின்னத்தின் மற்றொரு பக்கம் மணிகண்டன் சில்பியுடன் சேர்ந்து வெள்ளைச்சாமி சில்பி கருங்கல்லைப் புரட்டிப் போடுவதைக் காணலாம். இவர்கள் நவீனக் கருவிகளைப் பயன்படுத்திடாமல் பழங்காலத்து முறையில் கைக்கருவிகளைக் கொண்டே பணியாற்றியுள்ளனர் என்பதை உணர்த்துவதாகின்றது.
மற்றொரு பக்கம் சின்னன் சில்பி உளியைக் கூர்மையாக்குவதற்கு உலையின் முன் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
அடுத்ததாக, இராஜேந்திரன் சில்பியுடன் சேர்ந்து கருப்பையா சில்பியும் கல் ஒன்றினைச் சதுரிக்கின்ற பணி செய்வதைப் பார்க்க முடிகிறது.
ஹவாய் நாட்டின் இறைவன் கோயில் வடிவமைப்புப் பற்றி எடுத்துக் காட்டுகின்ற இச்சிற்பியர் நினைவுச் சின்னமாவது இதுவரை உலக அரங்கில் காணக்கிடைக்காத ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com