அந்த மனநிலையை தொலைக்க மாட்டேன்!

""டூரிஸ்ட்டுக்கும் டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம்.
அந்த மனநிலையை தொலைக்க மாட்டேன்!


""டூரிஸ்ட்டுக்கும் டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம்.  இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானித்துக் கொண்டு போவான். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபார்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு. நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம். மனசுக்குள்ளேயே ஒரு வீடு. ஊர் மாறினாலும் உலகத்துக்கு ஒரே ஆகாயம்தானே!..'' 

அன்பாக கை குலுக்குகிறார் நடிகர் சரத்குமார். "பொன்னியின் செல்வன்' வெற்றிக்குப் பின் இப்போது இன்னும் பரபரப்பாக இயங்குகிறார். விஜய்யின் "வாரிசு', ஹிந்தியில் உருவாகும் "சூரரைப் போற்று', "ஆழி', "சமரன்", "நிறங்கள் மூன்று', "ஹிட்  லிஸ்ட்', "கிரிமினல்'... என 20க்கும் அதிகமான படங்களை கையில் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார். இது தவிர மலையாளம், தெலுங்கிலும் கால்ஷீட் குறித்து வைத்திருக்கிறார்.

பெரிய பழுவேட்டரையருக்கு வாழ்த்துகள்....

நன்றி....   உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் ரசிக்க கூடிய  படமாகவும் "பொன்னியின் செல்வன்' வந்திருக்கிறது.  நாவலாக படிக்கும் போது  என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். பயணங்களின்அருமை புரியும்.  நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை... மணிரத்னம் சாரே அழைத்து பெரிய பழுவேட்டராயர் வேடத்தை கொடுத்தார். அவர் சொன்னதை செய்திருக்கிறேன்.  பார்த்து விட்டு சொல்லுங்கள்.   

முன்பை விட சினிமாவில் இன்னும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்....

ஒரு கட்டத்தில் நான் சினிமாவிலேயே இல்லை. அரசியல் பயணம், பொது வாழ்க்கை என ஒரு வேகம் வைத்து ஓடினேன். ஒரே துறையில் வெகு நேரம் பயணம் செய்யும் போது, சற்று அலுப்பு வரலாம். ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல்தான்... அது போல்தான் அந்த ஓய்வு.  ஏனென்றால், எந்த ஓய்வும் நம்முடைய அடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான்.  பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்த பயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது. சினிமாவை நான் எப்போதும் விட மாட்டேன். அதுவும் என்னை விடாது.   ஒரு விஷயத்துக்கான மெனக்கெடல் எப்போதுமே என்னிடம் உண்டு. இப்போது உங்கள் பார்வைக்கு வந்திருக்கிற "பொன்னியின் செல்வன்' படைப்பும் அப்படித்தான். கிட்டத்தட்ட 3 வருட உழைப்பு. கரோனா கால நெருக்கடி, நாவலைத் தாண்டாத சுவாரஸ்யம்... இதுவெல்லாம் பெரும் சவாலாக இருந்தது. அதை செய்து முடித்திருக்கிறோம். கடந்த காலங்களை போல் இல்லாமல் இன்னும் சினிமாவை நேசிக்க தொடங்கியிருக்கிறேன். நிறைய நல்ல இயக்குநர்கள் தேடி வருகிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் நடித்து கொடுக்கிறேன். எனக்கென்று எந்த திட்டமும் இல்லை. குறிப்பாக பயம் கிடையாது. எந்த இமேஜூக்குள்ளும் சிக்குவது கிடையாது. தமிழ் சினிமாக்களைப் போல் ஹிந்தி, தெலுங்கு என பார்வை இன்னும் விசாலம் அடைந்திருப்பதில் மகிழ்ச்சி.  இதுவரைக்கும் தவறான படங்களில் நடித்ததில்லை. நடிப்பது எனக்கு பிடிக்கும். அதனால் நடிக்கிறேன். 

ஹீரோ, வில்லன் என தனித்தனி நடிகர்கள் ​இப்போது இல்லை... கவனித்தீர்களா...

நானும் இப்போது அப்படித்தானே மாறி இருக்கிறேன். இணையதளம், விமர்சனங்கள், பைரசி, திருட்டு வி.சி.டி. என சினிமாவுக்கு எதிரிகள் இருக்கும் பட்சத்தில், ஆதரிப்பவர்கள் யாருமே இல்லை. இதுதான் இன்றைய சினிமாவின் பெரும் சோகம். ஒரு கதை இருந்தால், அதற்கான கேரக்டர் தானாகவே விரிவடைந்து வரும் என ஆரம்பத்தில் நினைத்து கொண்டு இருந்தேன்.  ஆனால், சுவாரஸ்யமான, சவாலான ஒரு கதாபாத்திரம் இருந்தால்,  அதைச் சுற்றி பிரமாதமான கதை பிடித்து விடலாம் என இப்போது தெரிகிறது. "விக்ரம்' படத்தில் நடித்த விஜய் சேதுபதி அதற்கு ஒரு உதாரணம். வில்லன், ஹீரோ என்றெல்லாம் இல்லை. கொடுத்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தால் அந்த கதையில் நீ ஹீரோ அவ்வளவுதான். இது சினிமாவில் நடந்திருக்கிற மாற்றம். இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதே போல்  சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. அவர்களின் ரசனை வேறு மாதிரியாகி விட்டது. அதனால் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இது மட்டும்தான் சினிமாவில் இருக்கிற ஆரோக்கியமான விஷயம். நல்ல கதை இருந்தால், ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என சினிமா மாறி வந்திருப்பது சந்தோஷம்.  அதே போல் நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதிதாக உள்ளே வருகிறார்கள். இன்னும் செய்யாத கதாபாத்திரங்களை செய்ய ஆசை வந்திருக்கிறது.  என் முகம் எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நம்பினால், இவர் கதைக்கு துணையாக இருப்பார்  என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். 
அதுதான் அந்த இடத்துக்கு என்னை கொண்டு செல்லும் விஷயம். நடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது. நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனின் எதிர்காலமும் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்றால், அது யார் கையில இருக்கிறது தெரியுமா? எப்படியாவது வெற்றிப்படம் தர வேண்டும் என்ற வெறியோடு கதை தயாரா செய்கிற உதவி இயக்குநர் கைகளில்.... அந்த மாதிரி ஒரு கதை கிடைத்தால் போதும். முழு மனதோடு  போய் நிற்பேன்.  அந்த மனநிலையை என்றைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com